Thursday, 5 April 2018

தீவிரமடையும் இணையவெளிப் போர் முனைப்பும் தாக்குதல்களும்


இணையவெளிப் போர் தொடர்பான சஞ்சிகையான C4ISRNET அமெரிக்கப் படையினர் தமது இணையவெளிப் போர் மற்றும் உளவு நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இணையவெளிப் போர், உளவாடல், வேவுபார்த்தல், திருட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் அமெரிக்கப் படையினர் அதிக கவனம் செலுத்தவிருக்கின்றனர். அமெரிக்காவின் எதிரிகள் தமது இணையவெளி நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் என்கின்றது C4ISRNET ஊடகம்.

இணையவெளிப்போர் பெருவல்லரசுகள்
ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இஸ்ரேல், ஐக்கிய இராச்சியம் ஆகிய ஐந்து நாடுகளும் இணையவெளிப் போர் முறைமையில் பெரு வல்லரசாகக் கருதப்படுகின்றது. இவற்றிற்கு அடுத்த படியாக வட கொரியாவும் ஈரானும் இணையவெளிப் போர் முறைமையில் வலிமை மிக்க நாடுகள் எனச் சொல்லப்படுகின்றது. இணையவெளித் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், பிரேசில், ஒஸ்ரேலியா, இரசியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. பிரித்தானியக் காப்புறுதி நிறுவனமான லொயிட்ஸ் இணையவெளி இழப்பீடுகள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளது. ஒரு தனிப்பட்ட தாக்குதலில் 53பில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக லொயிட்ஸ் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு இணையவெளித் தாக்குதல்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஐந்து பில்லியன் டொலர்களாகும். அது இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க பதினைந்து மடங்காகும்.

அமெரிக்காவின் இணைய வெளிப்படைத்துறையைப் பொறுத்தவரை 2018 ஒரு திருப்பு முனையாக அமையும். அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை பல ஆண்டுகள் செய்த திட்டத்தால் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும்.

இணைய வெளித் தாக்குதலுக்கு பதிலடி அணுக்குண்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் தமது அணுக்குண்டு கொள்கையை 2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மீளாய்வு செய்து புதிய கொள்கையை வெளிவிட்டனர். அதில் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் குடிசார் வசதிகள் மீது இணையவெளித் தாக்குதல்களை எந்த நாடாவது மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா அணுக்குண்டுகளை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியது. அமெரிக்காவின் எதிரிகள் அமெரிக்க நலன்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் அந்த அளவிற்கு மோசமானதாக அமையலாம் என்பது மட்டுமல்ல அதைத் தடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்பதால் தான் அணுக்குண்டுப் பதிலடி கொள்கையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2018-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இணையவெளிப் படைத்துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டு அதிகரிப்பு மற்றத்துறைகளுக்குச் செய்த அதிகரிப்பிலும் பார்க அதிகமாகும்.

அமெரிக்கத் தேர்தலில் மீண்டும் இணையவெளித் தலையீடு?
2018 நவம்பரில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான முழு உறுப்பினர்களும் மூதவக்கான மொத்த 100 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள். அதற்கான பரப்புரை மும்முரமாக நடக்கும் வேளையில் ரெட்டிற் என்னும் இன்னும் ஒரு சமூக வலைத்தளம் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய வகையில் தமது தளத்தை இரசியர்கள் பாவித்தார்கள் என ஒத்துக் கொண்டுள்ளது. கண்டறிவதற்கும் நீக்குவதற்கும் கடினமான வகையில் தமது பாவனையாளர்கள் மறைமுகமாகச் செயற்பட்டதால ரெட்டிற் அறிவித்துள்ளது. 2018 நவம்பர் நடக்கவிருக்கும் தேர்தலில் இரசியா தலையிடுமா என்ற கரிசனை அமெரிக்காவில் தீவிரமடைகின்றது. தேர்தலில் இரசியா தலையிடாமல் தான் பார்த்துக் கொள்வேன் என 2016 தேர்தலில் இரசியத் தலையீட்டை போலிச் செய்தி என அடிக்கடி சொல்லிவரும் அமெரிக்க அதிபர் டொனால் டிரமப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உலகெங்கும் நடக்கும் தேர்தல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டு தனக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய அமெரிக்காவின் தேர்தல் முடிவை அதன் எதிரி நாடு மாற்றியதா என்ற கேள்வி அமெரிக்கர்கள் மத்தியில் விசனத்தை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்கப் படைகளுக்கு பொது மென்பொருள்
உலகெங்கும் உள்ள அமெரிக்கப் படைகள் உளவுத் துறைத் தகவல்களை திரட்டவும் பகிர்ந்து கொள்ளவும் என அமெரிக்கப் படைத்துறை நிறுவனமான Raytheon ஒரு பொதுவான மென்பொருளை உருவாக்கியுள்ளது. அதைச் செயற்படுத்த Distributed Common Ground System-Army என்னும் பெயரில் ஒரு தனிப் படைப்பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தை கடந்த பத்து ஆண்டுகளாக Raytheon உருவாக்கியுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் இதற்கு 28 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

சீனாவும் இணையவெளியும்
2015-ம் ஆண்டு சீனா வெளியிட்ட “சீனாவின் படைத்துறை கேந்திரோபாயம்” என்ற வெள்ளை அறிக்கையில்:
இணையவெளி பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின் தூணாக அமைந்துள்ளதுடன் தேசிய பாதுகப்பிற்கான ஒரு புதிய திரளமாகவும் (domain) திகழ்கின்றது. படைத்துறைப் பாதுகாப்பில் இணையவெளியின் வகிபாகம் அதிகரிப்பதால் சீனா தனது இணையவெளிப் படைப்பிரிவின் உருவாக்ககம், இணையவெளிப் பாதுகாப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்தவிருக்கின்றது.

பல நாடுகள் மீது 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட WannaCry ransomware தாக்குதலால் சீனாவே அதிக பாதிப்படைந்தது. 649மில்லியன் சீனர்கள் இணையவெளியைப் பாவிப்பதால் சீனா தானே இணையவெளியின் பெருவல்லரசு எனச் சொல்கின்றது. FireEye என்னும் நிறுவனத்தின் iSite என்னும் பிரிவு உலகெங்கும் நடக்கும் இணையவெளித்தாக்குதல்களை ஆய்வு செய்து ஆலோசனையை வழங்குகின்றது. அதன் அறிக்கியின் படி சீனாவில் இருந்து செய்யப்படும் இணையவெளித் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ள வேளையில் அங்கிருந்து செய்யப்படும் தாக்குதல்களின் தொழில்நுட்பத்தரம் மிகவும் உயர்துள்ளது. அமெரிக்கா போல் தனிமனித தொடர்பாடல் உரிமை, தனிமனித அந்தரங்கம் போன்றவற்றிற்கு சீனா மதிப்புக் கொடுக்காமல் தன் இணையவெளிப் போர் முறைமையை உருவாக்கியுள்ளது என ஒரு ஜப்பானிய ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவில் இஸ்லாமியர்கள் இறைச்சி வெட்டும் கத்தியை வாங்கும் போது அதில் வாங்குபவர் தொடர்பான தகவல்கள் அதில் இலத்திரனியல் ரீதியில் பதிவு செய்யபப்டும். அக்கத்தி மூலம் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால் அதைக் கண்டு பிடிக்க இப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது இஸ்லாமியப் பிரிவினைவாதம் தலைதூக்கியுள்ள உய்குர் மாகாணத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றது. அந்த மாகாணத்தில் எல்லோரின் முகங்களினதும் படங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் தகவர்கள் அத்துடன் இணைக்கப்பட்டு கணினிகளில் அவை திரட்டி வைக்கப்படுகின்றன. இது முழு சீனாவிற்கும் விரிவு படுத்தப்படவிருக்கின்றது. சீன மக்களின் சமூகவலைத் தளங்களைக் கண்காணிப்பதற்கு சீன அரசு ஒரு இலட்சம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.

அமெரிக்க சமூகவலைத்தளங்கள் சீனாவின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்பதால் இணையவெளி இறையாண்மையில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. இணையவெளி ஒத்துழைப்பைப் பற்றி அதிகம் பேசும் அமெரிக்கா சீனாவின் உறுதிப்பாட்டைக் குலைக்கக் கூடியவகையில் பல இணையவெளி உத்திகளை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது எனச் சீனா குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்காவில் இருந்து சீனா மீது மாதம் தோறும் பத்தாயிரங்கள் என்ற எண்ணிக்கையில் தாக்குதல் நடத்தப்படுவதாக சீனா குற்றம் சாட்டுகின்றது. ஆனால் சீனாவில் இருந்து ஆண்டு தோறும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...