Monday, 5 March 2018

ஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆதிக்க வெறியும்


சீனா அமெரிக்கா போல் உலகை சுரண்டும் ஒரு நாடாக உருவெடுக்காமல் அதன் உள்ளகப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஏற்றுமதில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரம் 2008இன் பின்னர் உலகப் பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டது. 2016இன் பின்னர் மேற்கு நாடுகளில் தீவிரம் பெற்ற தேசியவாதத்தால் பாதிப்புக்களைச் சந்திக்கப் போகின்றது. சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களை மலிவாக விற்பனை செய்வது பல முனைகளைல் சவால்களை எதிர் நோக்குகின்றது. அமெரிக்கா முதன்மையானது என்ற டிரம்பின் கொள்கை, இந்தியாவில் செய்யுங்கள் என்ற மோடியின் கொள்கை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடன் பிரச்சனை போன்றவை சீனாவின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.


1797 முதல் 1801 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜோன் அடம்ஸ் ஒரு நாட்டை வாள் கொண்டும் ஆக்கிரமிக்கலாம் கடன் கொடுத்தும் ஆக்கிரமிக்கலாம். சீனா இரண்டாவது வழியைக் கையாள்கின்றது எனறார் இந்திய ஆய்வாளர் பிரம்மா செல்லனி. தென் சீனக் கடலில் தன்னுடம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸை சீனா அங்கிருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழத்திற்கு மருத்துவக் காரணங்களைக் காட்டி தடை செய்தது. அதனால் பிலிப்பைன்ஸ் சீனாவின் வழிக்குப் போனது. மாலை தீவின் பல தீவுகளை சீனா கடன் கொடுத்தே தன்வசமாக்கியது.

சீனாவை மையப்படுத்திய அமெரிக்க இந்தியக் கொள்கைகள்
இந்த நூற்றாண்டில் ஆசிய நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகிக்கப் போகின்றன என்பதை உணர்ந்த அமெரிக்கா ஆசியாவை தனது சுழற்ச்சி மையமாக அறிவித்தது. தனது படை வலிமையையும் ஆசியாவில் அதிகரித்தது. இந்தியாவும் ஆசியப் பொருளாதார வளர்ச்சியையும் அதில் சீனாவின் ஆதிக்கத்தையும் கருத்தில் கொண்டு கிழக்கு நோக்கிய நகர்வு என்ற கொள்கையை வகுத்தது. 2017 டிசம்பரில் வெளிவிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் கேந்திரோபாயத்தில் சீனாவும் இரசியாவும் அமெரிக்க அதிகாரத்திற்கும் நலன்களுக்கும் சவாலாக இருக்கின்றன. அவை அமெரிக்காவின் செழிமையையும் பாதுகாப்பையும் அழிக்க முயல்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய முதலீட்டுப்பசியும் சீன வேலைப்பசியும்
ஆசிய நாடுகளில் பொருளாதார அபிவிருத்தியைத் தொடர்ந்து பேணுவதற்கும் வறுமைய ஒழிப்பதற்கும் கால நிலை மாற்றங்களை சரியாக எதிர் கொள்வதற்கும் ஆண்டொன்றிற்கு 1.7ரில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடு தேவைப்படும். எரிபொருள் உற்பத்திக்கும் தெருக்களை அபிவிருத்தி செய்வதற்கும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 8.4ரில்லியன் டொலர்கள் தேவைப்படும். ஆசிய நாடுகளில் செய்யப்படும் உட்கட்டுமான முதலீடுகளுக்கும் செய்யத் அதற்காக செலவழிக்க வேண்டிய தொகைக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது. அது அந்த நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் 2.4விழுக்காடாக உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர் கொள்ளும் சவால் அதன் ஏற்றுமதிக்கு உலகெங்கும் உருவாகும் எதிர்ப்பு மட்டுமல்ல அதன் மக்கள் தொகைக் கட்டமைப்புமாகும். சீனாவின் வயோதிபர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இளம் பெண்களுக்கு சீனாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பை மேலும் மோசமாக்குகின்றதுஜிபுக்தியில் சீனா தளம் அமைத்ததும் அவ்வாறே.

கட்டுக்கடங்கா உட்கட்டுமானத் தேவைகள்
உட்கட்டுமான அபிவிருத்திக்கும் சமூக நலன்களுக்கும்  2040-ம் ஆண்டு வரை இந்தியாவிற்கு 4.5ரில்லியன் டொலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3.9ரில்லியன் டொலர்களை மட்டும் இந்தியாவால் சமாளிக்க முடியும் என்பதால் 526பில்லியன் டொலர்கள் குறையாக உள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவதற்கு இந்தியாவின் உள்கட்டுமானங்களில் உள்ள குறைபாடே காரணமாகும். இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் தேவை மூன்று அல்லது நான்கு மடங்காக அதிகரிக்கவிருக்கின்றது. அருணாச்சல் பிரதேசம், அசாம், மணிப்புரி, மெகலாயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அசாம் வறுமை மிக்க மாநிலமாகும். இந்த வட கிழக்கு மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் அசாமின் மக்கள் தொகை வட கிழக்கு மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்காகும். இந்தியாவின் சராசரி வருமானத்தின் அரைப்பங்குதான் அசாம் மக்களின் வருமானமாகும். அசாம் மிகப் பின்தங்கிய உட்கட்டுமானம் கொண்ட ஒரு மாநிலமாக இருப்பதே அதன் வறிய நிலைக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. ஆசிய நாட்டின் உட்கட்டுமானத் தேவைக்கும் அதன் வறுமைக்கும் இடையில் உள்ள தொடர்புக்கு அசாம் மாநிலம் சிறந்த உதாரணமாகும். இந்தியாவின் வட கிழக்கு நகரான மணிப்பூரில் இருந்து மியன்மார் ஊடாக பாங்கொக் வரை ஒரு 1980கிமீ நீண்ட தெரு அமைக்கும் திட்டம் வட கிழக்கு மாநிலங்களுக்கு பெரிய நன்மைகளைக் கொண்டு வரப்போவதில்லை.

கட்டுமான வங்கிகள்
2016-ம் ஆண்டு சீனா ஆரம்பித்த ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியில் சீனாவிற்கு அடுத்த படியாக அதிக முதலீட்டை இந்தியா செய்துள்ளது. அது இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடனை அனுமதிந்துள்ளது மேலும் ஒரு பில்லியன் கடனை வழங்கவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை இது ஆனைப் பசிக்கு சோழப் பொரி போன்றது. ஆசியான் நாடுகளின் மொத்த பொருளாதார உற்பத்தி உலகின் ஏழாவது பெரிய உற்பத்தியாகும். உலகின் முன்னணி நிறுவனங்களில் 230 ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவை. ஆசியான் நாடுகள் சீனாவை மிகவும் கவனமாகக் கையாளுகின்றன. ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திலும் முதலீடு செய்யவுள்ளது என அதன் தலைவர் டாவோஸ் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.


சீனாவின் உட்கட்டுமான மிகைக் கொள்ளளவு (Excess Capacity)
1980களில் இருந்து சீனா தனது உட்கட்டுமான அபிவிருத்தியை அசுர வேகத்தில் செய்து வந்தது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சீனா தனது பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க அரச செலவீனங்களை அதிகரித்தது. உள்ளூராட்சி சபைகளுக்கு அரச வங்கிகள் கடன்களை வழங்கி பல உட்கட்டுமான முதலீடுகள் செய்யப்பட்டன. இது தேவைக்கு அதிகமான உட்கட்டுமானத்தில் முடிந்தது. இதனால் சீனாவின் கைகளில் உட்கட்டுமானங்களுத் தேவையான உற்பத்திச் சாதனங்கள் நிறைய் உள்ளன. இவற்றை உள்நாட்டில் பாவிக்க முடியாத நிலையில் அவற்றை வெளிநாட்டில் சீனா பாவிக்கத் தொடங்கியது. அதன் விளைவுகள் பலவற்றை இலங்கையில் அதிலும் முக்கியமாக அம்பாந்தோட்டையில் நாம் பார்க்கலாம். அம்பாந்தோட்டையில் சீனா உருவாக்கியவை வர்த்தக ரீதியில் இலாபம் தரக்கூடியவை அல்ல. ஆனால் அவை இலங்கையின் கடன் பளுவை அதிகரித்தன. இதனால் சீனாவின் ஆதிக்கத்துக்குள் இலங்கையை கொண்டுவர சீனா முயற்ச்சித்ததாகச் சொல்லப்படுகின்றது.

பாவிக்க முடியாதவற்றை பாவித்துக் கடன் கொடுக்கும் சீனா
தனது உள்நாட்டில் மிகையாக இருக்கும் உற்பத்திச் சாதனங்களை வளரும் நாடுகளில் பாவித்து அங்கு பல உட்கட்டுமானங்களை சீனா உருவாக்குகின்றது. அந்த உள்நாட்டில் பாவிக்காமல் இருக்கும் உற்பத்திச் சாதனங்களை வெளிநாடுகளில் பாவிப்பதற்கான கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு அதிக வட்டி கொண்ட கடன்களாக கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட ஒப்பந்தகள் மூலம் கடன்களாக்கப் படுகின்றன. பல நாடுகளில் அயோக்கிய ஆட்சியாளர்கள் இதற்கு உடன்படுகின்றார்கள். அந்த ஆட்சியாளர்கள் சீனாவின் உட்கட்டுமானத் திட்டங்களின் உள்நாட்டு உப-வேலைகளில் ஊழல்கள் செய்து பெரும் பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவின் இந்த உட்கட்டுமானம் மூலம் ஒரு நாட்டுக்குள் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் முயற்ச்சியை கடன்பொறி அரசுறவியல் (Debt trap diplomacy) என விமர்சிக்கப்படுகின்றது அம்பாந்தோட்டையில் சீனா உருவாக்கிய  விமான நிலையம் “the emptiest airport in the world” என பல மேற்குலக ஊடகங்கள் பரப்புரை செய்தன. சீனாவின் கடன்பொறி அரசுறவியலை உலகிற்கு அம்பலப்படுத்த அவை இலங்கையை உதாரணமாகக் காட்டுகின்றன.

துயிலெழுந்த ஒஸ்ரேலியா
ஜப்பான் படைத்துறை ரீதியில் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவிற்கு எதிராக ஒரு மூவர் கூட்டணி அமைக்க முயலுகையில் ஒஸ்ரேலியா சீனாவின் கடன்பொறி அரசுறவியலுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரு நால்வரணியை அமைக்க விரும்புகின்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் உட்கட்டுமானப் பசிக்கு சீனா இரை போட்டு அவற்றைத் தன்வசமாக்குவதற்கு எதிராக இந்த நால்வரணி செயற்பட வேண்டும் என்பது ஒஸ்ரேலியாவின் திட்டமாகும். ஒஸ்ரேலியாவின் திட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட புதுடில்லியிலுள்ள கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்மா செல்லனி கருத்து வெளியிடுகையில் ஒஸ்ரேலியா காலம் தாழ்த்தி துயிலெழுந்துள்ளது என்றார். அவர் சீனாவின் செய்கைக்கு கடன்கார ஏகாதிபத்தியவாதம் என்கின்றார். ஒஸ்ரேலியா ஏற்கனவே தனது துறைமுகமொன்றை சீனாவிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கும் விட்டுள்ளது.

வல்லரசுக் கனவு
தனது பட்டு மற்றும் பீங்கான் ஏற்றுமதி மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகச் செல்வந்த நாடாக இருந்த சீனாவே உலகின் முதல் துப்பாக்கி பொருத்திய கப்பலை உருவாக்கியது. அதைக் கொண்டு அது பல உலக நாடுகளை ஆக்கிரமித்து ஓர் ஏகாதிபத்திய நாடாக மாறாமல் விட்டதை இனிச் செய்ய சீனா முயல்கின்றது என்ற குற்றச் சாட்டு இப்போது முன்வைக்கப்படுகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி 2032-ம் ஆண்டு சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியா தனது உலக ஆதிக்கத்தை உருவாக்கக் கையாண்ட உத்திகளையும் இருபதாம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்த கையாண்ட உபாயங்களையும் கலந்து பாவிக்க சீனா முயல்கின்றது. இந்த இரு வல்லரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு அவற்றின் கடற்படையும் அவற்றின் குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளும், புதிய-குடியேற்ற ஆட்சி நாடுகளும் காரணமாகும். அவை செய்தவற்றை சீனா தனது கடன்பொறி அரசுறவியல் மூலம் நிலைநிறுத்த முயல்கின்றது. சீனாவின் கடல்வழிப் பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை, துருவப் பட்டுப்பாதை ஆகிய திட்டங்களும் அவற்றை ஒட்டிய பொருளாதாரப் பட்டிகளும் (Economy Belts) உலகெங்கும் அதனது கடன்பொறி அரசுறவியலின் வேறு வடிவங்களே. பல நாடுகளில் சீனா செய்யும் உட்கட்டுமான முதலீடுகளில் சீனாவின் படையினர் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். பலர் அங்கு நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டும் உள்ளனர். சீனாவின் நீண்டகாலத் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் சீனாவின் சிறைச்சாலை நெருக்கடிகளைத் தவிர்க்க இந்த உட்கட்டுமான முதலீடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிய வைக்கப்படுகின்றனர். வ்

நிரந்தரத் தலைமை
தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறந்த பொருளாதார வளர்ச்சியைக் கண்ட சீனாவில் இனி பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பல உள்நாட்டுப் பிரச்சனைகளையும் சீனா எதிர் கொள்ள வேண்டி வரும். அதை எல்லாம் சமாளித்து சீனாவை ஓர் உலகப் பெரு வல்லரசாக்க உறுதி மிக்க தலைமை தேவை என சீனாவின் பொதுவுடமைக்கட்சி உணர்ந்துள்ளது. அதன் முன்னணித் தலைவர்கள் பலர் சீனாவின் உறுதி மிக்க தலைமையை ஷி ஜின்பிங்கால் மட்டுமே வழங்க முடியும் என்பதால் சீன அதிபர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என அரசியலமைப்பில் இருப்பதை மாற்றி ஷி ஜின்பிங் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளன. தென் சீனக் கடலில் ஷி ஜின்பிங்கின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர்

21-ம் நூற்றாண்டை இந்து மாக்க்கடலுக்கும் பசுபிக் மாக்கடலுக்கும் இடையில் உள்ள நாடுகள் தீர்மானிக்கப் போகின்றன. அந்த நாடுகளிடையே இல்லாத ஒற்றுமையில் அமெரிக்கா குளிர்காயப் போகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...