Tuesday, 20 June 2017

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும்

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் இணைந்த பிராந்தியம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக MENA என அழைப்பர். இது Middle East and North Africa என்பதன் சுருக்கமாகும். நாமும் இந்தப் பிராந்தியத்தை தமிழில் மெனா பிராந்தியம் என அழைப்போமாக. எந்த நாடுகள் இப்பிராந்தியத்தில் அடங்கும் என்ற சரியான வரையறை இல்லை என்றாலும் இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் மெனா பிராந்தியத்தில் உள்ளன. மௌரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, இஸ்ரேல், லெபனான், ஜோர்தான், சிரியா, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, பாஹ்ரேன், கட்டார். ஐக்கிய அரபு அமீரகம், யேமன், ஓமான், துருக்கி ஆகியவை இந்தப் பிரதேசத்தில் உள்ள முக்கிய நாடுகளாகும். பல்ஸ்த்தீனிய மேற்குக் கரை, காசா நிலப்பரப்பு ஆகியவையும் இந்தப் பிராந்தியத்தில் உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உலக மக்கள் தொகையில் ஆறு விழுக்காட்டினர் வசிக்கின்றனர்.
முக்கிய பிராந்தியம்
உலக எண்ணெய் இருப்பில் 65 விழுக்காடும் இயற்கை எரிவாயு இருப்பில் 45 விழுக்காடும் இந்த மெனா பிராந்தியத்தில் இருக்கின்றன. ஆசியா, ஆபிரிக்கா ஆகிய இரு கண்டங்களையும் இது உள்ளடக்கி இருக்கின்றது. தெற்கு ஐரோப்பாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. ஆசியாவை ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைக்கும் தரை மற்றும் கடல் வழிப்பாதை இப்பிராந்தியத்தின் ஊடாக நடைபெறுகின்றது. உலகக் கடற்போக்குவரத்தில் இரு முக்கிய திருகுப் புள்ளிகளான சூயஸ் கால்வாயும் ஹோமஸ் நீரிணையும் இப்பிராந்தியத்தில் இருக்கின்றன. உலக அரசியல் உறுதிப்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தப் பிராந்தியத்தில் அமைதி முக்கியமான ஒன்றாகும்.
என்றும் குழம்பியிருக்கும் குட்டையா?
மன்னர் ஆட்சி, படைத்துறையினரின் ஆட்சி, மதவாதம் கலந்த மக்களாட்சி, மக்களாட்சி எனப் பலவிதமான ஆட்சி முறைமைகள் இப்பிராந்தியத்தில் உள்ளன. வரலாற்றுப் பெருமை மிக்க இனங்களையும் நாடுகளையும் கொண்ட மெனாப் பிராந்தியத்தின் அண்மைக்கால வரலாற்றில் அரபு இஸ்ரேலிய மோதல், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் நடந்த போர், குவைத் மீதான இராக்கியப் படையெடுப்பு, நேட்டோ நாடுகளின் ஈராக்கை ஆக்கிரமிப்பு, அரசு வசந்த எழுச்சி, சியா-சுனி மோதல் போன்ற பல மோதல்களால் மெனாப்  பிராந்தியம் அமைதி இழந்துள்ளது. 2014-ம் ஆண்டு திடீரென உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அரசுக்கு எதிராக பல நாடுகள் போர் தொடுத்துள்ளன.
ஆட்டுவித்தால் யார் ஆடார்?
2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் மெனா பிராந்தியத்தின் அமைதிக்கு மேலும் குந்தக்கம் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் பல நடந்துள்ளன.
1, சிரியாவில் ரக்கா நகரிலும் ஈராக்கில் உள்ள மொசுல் நகரிலும் இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிரான முற்றுகை.
2. ஈரானியப் பாராளமன்றத்தின்மீதும் ஈரானில் மதவாதம் கலந்த மக்களாட்சியை நிறுவியவருமான அயத்துல்லா கொமெய்னியின் கல்லறை மீதான தற்கொலைத் தாக்குதல்.
3. கட்டார் நாட்டைத் தனிமைப்படுத்த சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய  அரபு அமீரகம், பாஹ்ரேன், யேமன் உட்படச் சில நாடுகள் எடுத்த நடவடிக்கை.
4. ஈராக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் குர்திஷ் மக்கள் சுதந்திர நாடாக மாறுவதற்கான கருத்துக் கணிப்பு
5. துருக்கிக்கும் இரசியாவிற்கு இடையில் வளர்ந்து வரும் உறவு

ரக்காவிலும் மொசுலிலும் முற்றுகை
2014-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட இஸ்லாமிய அரசின் தலைநகரான ரக்கா நகர் மீது அமெரிக்கப்படையினரின் பின்புல ஆதரவுடன் சிரிய மக்களாட்சிப் படை என்ற பல பல படைக்கலன் ஏந்திய குழுக்களின் கூட்டமைப்பு தாக்குதல் தொடுத்துள்ளது. சிரிய மக்களாட்சிப் படையின் அரபுப் போராளிகளும் குர்திஷ் போராளிகளும் இணைந்து போராடுகின்றார்கள். துருக்கியின் அதிருப்தியையும் புறம் தள்ளி சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளுக்கு படைக்கலன்களை வழங்கும் படி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அரபுப் போராளிகளிலும் பார்க்க குர்திஷ் போராளிகளே அதிக திறமையாகவும் தீரமாகவும் போராடுகின்றனர். போர் முடிந்து ஐ எஸ் போராளிகள் ஒழிக்கப்பட்டுவிட்டால் சிரிய அரபுப் படைகளும் துருக்கிப் படைகளும் இணைந்து குர்திஷ் மக்கள் மீது ஒரு பெரும் அட்டூழியத்தை கட்டவிழ்த்து விடலாம். அப்போது அமெரிக்கா குர்திஷ் மக்களை காப்பாற்ற வரமாட்டாது என்பது வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம். தமது சிறுமிகளையும் பெண்களையும் ஐ எஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு போய் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தற்கு பழிவாங்குவது மட்டுமே குர்திஷ் மக்களின் முதன்மைக் குறிக்கோளாக இருக்கின்றது. அமெரிக்கா சதாம் ஹுசேயினுக்கு எதிராகவும் ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் குர்திஷ் மக்களைப் போராடத் தூண்டி விட்டு பின்னர் அவர்களால் இனக்கொலை செய்யப்படும் போது பாதுகாக்க முன்வரவில்லை. சிரியாவிலும் ஈராக்கிலும் தற்போது பலத்த உயிரிழப்புக்களுடன் போராடும் குர்திஷ் மக்களை இம்முறையும் கால்வாரி விடுமானால் அவர்கள் மோசமான பயங்கரவாத அமைப்பாக மாறும் வாய்ப்பு உண்டு. ஜூன் 8-ம் திகதி சிரிய ஐ எஸ் படையினர் அரச படையிடமிருந்து கைப்பற்றி தம் தலைமைச் செயலகமாக வைத்திருந்த 17-ம் படைப்பிரிவின் தலைமையகத்தை குர்திஷ் போராளிகள் கைப்பற்றியதாக அறிவித்தனர். ரக்கா நகரின் இரு குடியிருப்புக்களை பலத்த எதிர்ப்பின்றி சிரிய மக்களாட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் போர் விமானங்கள் வெண் பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிரிய அரச படைகளுக்குச் சொந்தமான ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா ஐ எஸ் போராளிகளுக்கு எதிரான தனது படை நடவடிக்கையின் போது சிரிய அரச படைகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நடந்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது தவறுதலாக சில மோதல்கள் நடப்பதுண்டு. இதே போல்த்தான் சிரியாவிலும் ஈராக்கிலும்  செயற்படும் ஈரானியப் படைகளுடன் ஒரு நேரடி மோதலை அமெரிக்கா தவிர்க்க முயல்கின்றது. ஈராக்கிய நகரான மொசுலில் உள்ள ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈராக்கிய அரச படைகளும் குர்திஷ் படைகளும் அமெரிக்க வான்படையின் ஆதரவுடன் போராடுகின்றன. சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளிலும் பார்க்க ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா அமைப்புக் குர்திஷ் போராளிகளையிட்டு துருக்கி குறைந்த அளவு அச்சம் கொண்டுள்ளது.

ஈரானில் ஐ எஸ் அமைப்பினர் தாக்குதல்
ஜூன் மாதம் 7-ம் திகதி ஈரானின் பாராளமன்றத்திலும் புதிய ஈரானின் நிறுவனருமான அயத்துல்லா கொமெய்னியின் கல்லறை மீதும் ஐ எஸ் அமைப்பினர் தற்கொடைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சியா இஸ்லாமியர்களின் கோட்டையான ஈரானில் ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பல சுனி இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கனவாகும். அந்தத் தாக்குதல் அவர்களுக்கு அதிக நிதியை சுனி முஸ்லிம் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுத் தரும். கடந்த முப்பது ஆண்டுகளாக எந்தவித ஆபத்து விளைவிக்கக் கூடிய திவிரவாதத் தாக்குதலுக்கும் உள்ளாகாத ஈரான் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பல தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியாவே இருப்பதாக ஈரானின் படைத்துறையினர் தெரிவித்ததுடன். இதற்குப் பழிவாங்குவோம் எனவும் சூளுரைத்துள்ளனர். இது இரு நாடுகளும் ஒன்றன் மீது ஒன்று தமது கூலிப்படைகள் மூலம் ஒரு தொடர் தாக்குதல் செய்வதற்கு வழிவகுக்கலாம். அது பெரும் போரை நோக்கிச் செல்லலாம்.

கட்டார் கட்டுபடாத காட்டாறு
சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டிப்பதாக அறிவித்தன. சவுதி அரேபியாவின் காசோலை அரசுறவியலில் தங்கியிருக்கும் சில நாடுகளும் கட்டாருடன் தமது தொடர்புகளைத் துண்டித்தன. அரசுறவியலில் முதிர்ச்சியடையாத (அல்லது வளர்ச்சியடியாத) டொனால்ட் டிரம்ப் தான் சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்யும் போது விடுத்த வேண்டுகோளால்தான் கட்டார் தனிமைப் படுத்தப்பட்டது என மார்தட்டிக் கொண்டார். ஆனால் அது பகிரங்கமாகச் சொல்லக் கூடாத ஒன்று எனப் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா நடுநிலை வகிப்பதாக அதன் வெளியுறவுத் துறை உடன் தெரிவித்தது. ஆனால் பிராந்திய வல்லரசான துருக்கியும் உலக வல்லரசான இரசியாவும் கட்டார் நாட்டுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டின. துருக்கியப் பாராளமன்றத்தில் தேவை ஏற்படின் கட்டாருக்குப் படைகளை அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையில் உள்ள கடற்படுக்கையில் பெருமளவு எரிவாயு இருப்பு உள்ளது. அதைப் பங்கீடு செய்ய இரு நாடுகளும் பேச்சு வார்த்தை செய்வதை சவுதி அரேபியாவும் மற்ற நாடுகளும் ஐயத்துடன் நோக்குகின்றன. ஈராக்கிற்கு வேட்டைக்குச் சென்ற கட்டார் அரச குடும்ப உறுப்பினரையும் அவரது பரிவாரத்தையும் அங்குள்ள அல் கெய்தாவின் இணைக் குழு ஒன்று கடத்திச் சென்றது. அவர்களை ஒரு பில்லியன் டொலர்களைக் கொடுத்து மீட்டதை சவுதி பயங்கரவாதத்திற்கு உதவுவதாகச் சொல்கின்றது. கட்டார் மன்னர் தனது பதவியை 64 வயதில் துறந்து தன் மகனுக்குப் பட்டம் சூட்டியதால் மற்ற மன்னர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். நாட்டு மக்கள் தம்மை முதுமையால் பதவி விலகச் சொல்லிக் கேட்டால் அவர்களால் அதை அடக்க முடியும். ஆனால் தங்கள் புதல்வர்கள் கேட்டால் குடும்பத்துக்குள் குத்து வேட்டு நடக்கும் என்பதால் அவர்களுக்கு கட்டார் மன்னரின் செய்கை ஆத்திரத்தைக் கொடுத்தது. கட்டாரின் அல் ஜசீரா ஊடகம் கட்டார் அரச குடும்பத்தை விமர்சிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றது. மற்ற நாட்டில் நடப்பவற்றை பகிரங்கப் படுத்துவதும் மற்ற நாட்டு ஆட்சியாளர்களை ஆத்திரப்படுதுகின்றது.  

ஈராக்கிய குர்திஷ் மக்களின் சுதந்திரப் பிரகடனம்
குர்திஷ் மக்கள் பல தடவைகள் அமெரிக்காவுடன் இணைந்து செயற் பட்டிருக்கின்றார்கள். அவை யாவும் இரகசியமாக நடந்தவை. ஆனால் சிரியாவிலும் ஈராக்கிலும் அவர்கள் தற்போது அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகப் போராடுவது பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. பல அமெரிக்க உயர் அதிகாரிகள் தம்மைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதையிட்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். அதனால் ஈராக்கில் உள்ள குர்திஷ் அமைப்புக்கள் 2017 செப்டம்பர் 25-ம் திகதி ஈராக்கில் இருந்து மூன்று மாகாணங்கள் பிரிந்து செல்வதா என்பது பற்றிய கருத்துக் கணிப்பை ஈராக்கில் செய்யப் போவதாக அறிவித்தனர். இதற்கு ஈராக்கிய அரசிலும் பார்க்க துருக்கியே முதலில் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. ஐக்கிய அமெரிக்காவும் தானது ஆதரவு இதற்கு இல்லை எனத் தெரிவித்தது. குர்திஷ் போராளிகள் பயங்கரவாதிகளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது மெனா பிராந்தியத்தில் அடுத்த இரத்தக் களரிக்கு வழிவகுக்கலாம்.

நெருங்கி வரும் துருக்கியும் இரசியாவும்
ஈரான், சவுதி அரேபியா ஆகிய மூன்றும் மெனா பிரதேசத்தில் உள்ள முக்கிய அரசுகளாகும். இரசியா சிரியப் பிரச்சனையில் இணைந்து செயற்படுவதால் இரசியாவிற்கு சிரியாவிற்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்துள்ளது. சிரியப் பிரச்சனையில் வேறுபட்ட இரசியாவும் துருக்கியும் தற்போது இணைந்து செயற்படுகின்றன. துருக்கிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இரசியா நீக்கியுள்ளது. அத்துடன் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை துருக்கி வாங்கவுள்ளது. நேட்டோவின் உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி இரசியாவின் சர்ச்சைக்கு உரிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவது பெரும் பிரச்சனையைக் கிளறலாம்.

மெனோ பிராந்தியத்தில் மேலும் பத்து ஆண்டுகள் பிரச்சனை தொடர்வது மட்டுமல்ல மோசமாகும்.




No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...