Wednesday 5 October 2016

ஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு

ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ் அமைப்பினர் மாற்றியதைத் தொடர்ந்து இந்தப் பிளவு உருவாகியுள்ளது.  நைஜீரியாவில் தனித்துச் செயற்பட்டு வந்த பொக்கோ ஹரம் அமைப்பு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து கொண்டது. ஐ எஸ் அமைப்பிற்கு உலகெங்கும் இருக்கும் பிரபல்யமும் அதனிடம் இருக்கும் பெருமளவு பணமும் பொக்கோ ஹரம் அமைப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பொக்கோ ஹரம் ஐ எஸ் அமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் கட்டுப்படாதவர்கள் என்றும் இரு பிரிவாகப் பிளவு பட்டுள்ளது.

பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.  2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர். இவர்கள் உலகில் கவனத்தை ஈர்த்தது 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லி பாடசாலைகளின் பயின்று கொண்டிருந்த பெண்களை இவர்கள் கடத்திச் சென்ற போதே. இவர்களின் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் இதுவரை நைஜீரியாவில் இருபதினாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

இரத்த வெறி கொண்ட அபு பக்கர் ஷெக்கௌ
பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷெக்கௌ இரத்த வெறியுடன் செயற்படுவதாக ஐ எஸ் அமைப்பு குற்றம் சாட்டியது.
பொக்கோ ஹரம் அமைப்பின் நிறுவனரான காலம் சென்ற மொஹமட் யூசுப்பின் மகன் அபு முஸப் அல் பர்னாவியை ஐ எஸ் அமைப்பினர் பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவராக அறிவித்தனர். இந்த நியமனத்தை எதிர்த்த அபு பக்கர் ஷெக்கௌ தனியாக தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றுள்ளார். பொக்கோ ஹரம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருப்பதில்லை. பல உள் மோதல்கள் நிறைந்த அமைப்பு அது. பிராந்தியத் தளபதிகள் பலர் தான் தோன்றித்தனமாக நடப்பார்கள். அபு பக்கர் ஷெக்கௌவின் கடுமையான நிலைப்பாடும் இரக்கமற்ற செயல்களும் பலரை அவரை வெறுக்க வைத்தன. பொக்கோ ஹரம் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மம்மன் நூர் என்பவர் அபு பக்கர் ஷெக்கௌவிற்கு இஸ்லாமிய போதனைகளின் அடிப்படைகள் போதிக்கப் படவேண்டும் என்றார். ஷெக்கௌவின் இரக்கமற்ற செயற்பாடுகளால் பல போராளிகள் பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து வெளியேறினர். 2012-ம் ஆண்டு பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.

இறப்பிற்கு தண்ணி காட்டிய ஷெக்கௌ. 
நைஜீரியப் படையினர் பல தடவைகள் ஷெக்கௌவை கொலை செய்ய முயற்ச்சி எடுத்தனர். அவர் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் கூட ஒலி/ஒளிபரப்பப்பட்டன. ஆனால் எலாவற்றிலும் இருந்து அவர் தப்பி விடுவார். தனக்கோ தனது அமைப்பிற்கோ எதிரானவர்கள் அல்லது ஆப்பத்தானவர்கள் என நினைப்பவர்களை ஈவு இரக்கமின்றி அவர் கொன்று விடுவார். முஸ்லிம்களை ஷெக்கௌ கொல்வதை ஐ எஸ் அமைப்பால் தலைவராக நியமிக்கப்பட்ட அபு முஸப் அல் பர்னாவி கடுமையாக எதிர்த்து வந்தார்.

பெரும் உள் மோதல்
ஐ எஸ் அமைப்பினர் தலைமை மாற்றம் செய்ததால் பொக்கோ ஹரம் அமைப்பினுள் பெரும் உள் மோதல்கள் நடக்கின்றது. இதனால் பல போராளிகள் நைஜீரிய அரச படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். ஐ எஸ் அமைப்பினர் பல போராளிகளை கொல்லப்படக் கூடிய சூழ் நிலைகளை தொடர்ந்து உருவாக்கி வருவதால் ஐ எஸ் அமைப்பின் தலைவர்  அபு பக்கர் அல் பக்தாதி ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவாளி என்ற கருத்து பரவலாக முன்வைக்க்ப் படுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...