சீனாவின் வங்கித் துறை 29ரில்லியன் டொலர்கள் பெறுமதியானது அதாவது 29இலட்சம் கோடி. சீன வங்கித் துறையின் கடன்களின் 20 விழுக்காடு அறவிட முடியாத நிலையில் இருக்கின்றது. சீனாவின் கிராமிய வர்த்தக வங்கிகளின் அறவிட முடியாக் கடன்கள் அதிகரித்துக் கொண்டே போக வங்கிகளின் இலாபங்களும் குறைந்து கொண்டே போகின்றன. சீன வங்கிகளின் அறவிடமுடியாக் கடன்களை உலக நிதி ஊடகங்கள் non-performing loans என்ற பெயரும் NPLs என்ற சுருக்கப் பெயரும் இட்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தைச் சூழும் கடன் ஆபத்தை சீனா சரியாகக் கையாளாவிடில் அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என IMF எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
உலகத்தில் தங்கியிருக்கும் சீனா
1980களின் ஆரம்பத்தில் இருந்து முழு அரச உதவியுடன் மலிவான ஊதியத் தொழிலாளர்களுடன் உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்ததால் சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. பொருளாதாரத்தில் அதிகமான அரச முதலீடும் அளவிற்கு மிஞ்சிய அரசியல் தலையீடும் ஒரு திறனற்ற உற்பத்தித் துறையை சீனாவில் உருவாக்கியது . இதனால் 2008-ம் 2009-ம் ஆண்டுகளின் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால். சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. எப்போதும் வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏற்படும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க சீன ஆட்சியாளர்கள் பெரும் சிரமப் படுகின்றார்கள். சீன மக்களின் கொள்வனவு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 34 விழுக்காடு மட்டுமே. இந்த விழுக்காடு அமெரிக்காவில் 70 ஆகவும் ஜப்பானில் 61 ஆகவும் தென் கொரியாவில் 50 ஆகவும் இந்தியாவில் 59 ஆகவும் இருக்கின்றது. இதனால்தான் உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீனாவின் வர்த்தக வங்கித் துறை சீன நிதித்துறையின் மோசமான வலுவின்மைப் புள்ளியாக இருக்கின்றது. Liuzhou Bank என்னும் வர்த்தக வங்கியில் 4.9பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஊழல் நடந்துள்ளது. இது அதன் மொத்த சொத்துப் பெறுமதியின் மூன்றில் ஒரு பங்காகும். சீனாவின் வங்கித் துறையில் நிலவும் ஊழல் வங்கிகளின் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதற்கு Liuzhou Bank உதாரணமாகக் காட்டப்படுகின்றது.
மூடிமறைக்கும் திட்டம் - debt-for-equity swap
கூட்டாண்மைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை அந்தக் கூட்டாண்மைகளில் வங்கிகளின் பங்குகளாக மாற்றும் முயற்ச்சியை சினா 2016-ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் வங்கிகளின் நிதி நிலை இருப்பில் அறவிட முடியாக் கடன்களை முதலீடுகளாக மாற்றுவது பிரச்சனையை மூடி மறைக்கும் செயல் மட்டுமே. அது பிரச்சனையைத் தீர்க்காது. வங்கிகள் தாம் கடன் கொடுத்த கூட்டாண்மைகளின் பங்குகளை உலகச் சந்தையில் விற்பது சீனாவின் உபாயமாகும். இதன் மூலம் தனது உள்நாட்டுக் கடன் பிரச்சனையை 7.6பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளாக உலகச் சந்தைக்குத் தள்ள சீனா முயற்ச்சிக்கின்றது. உலக முதலீட்டு முகாமையாளர்கள் சீனாவின் பங்குகளாக மாற்றப்பட்ட செயற்படாக் கடன்களில் (non-performing loans) அதிக அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது நிச்சயம். அதனால் அடிமாட்டு விலைக்கு அப் பங்குகள் விற்கப்படலாம். முதலீடுகளைத் தரவரிசைப் படுத்தும் நிறுவனங்கள் சீனாவின் இப் புதிய பங்குகளைத் தரவரிசைப் படுத்த மறுத்துள்ளன. அதுவும் இப்பங்குகளின் விலையை குறைக்கும். இதனால் சீனாவின் இப் புதிய பங்கு விற்பனைத் திட்டத்தை பன்றிக்கு உதட்டுச் சாயம் பூசும் செயல் என ஒரு நிதித் துறை விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது கடன் கொடுத்த வங்கிகளின் இருப்பு நிலைக்குறிப்பை (balance sheet) மாற்றியமைக்கலாம் ஆனால் அவற்றின் அடிப்படைக் கடன் பிரச்சனையை மாற்றாது.
சீன மக்கள் பட்ட கடனும் படும் தொல்லைகளும்
சீனாவின் மக்கள் பலர் தாம் பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்க மேலும் கடன் பட்டு தமது கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் பெண்களுக்கு வழங்கும் கடனிற்கான உறுதிப் பத்திரமாக அவர்களது நிர்வாணப் படங்களை கேட்டு வாங்குகின்றார்கள். பின்னாளில் அவர்களை மிரட்டிப் பணம் வாங்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் தம்மிடம் கடன் பட்டவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அவர்களது வீடுகளை உடைத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களைச் செய்கின்றார்கள். சில மாணவிகள் படிப்பதற்கு வாங்கிய கடனுக்கு மீளளிப்பாக தமது உடலையே கொடுக்க வேண்டியும் இருக்கின்றது. நிழல் வங்கிகள் எனப்படும் பதிவு செய்யப் படாத வங்கிகளின் அடாவடித்தனத்தை அடக்க சீன அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகின்றது.
உடன் நிவாரணம்
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கடன்களைப் பங்குகளாக மாற்றும் திட்டத்தை அறிவித்த சீனா ஏப்ரல் மாதம் தனது உள்நாட்டுக்கடன் 60விழுக்காட்டால் குறைந்ததாக அறிவித்தது. அத்துடன் ஏப்ரல் மாதம் புதிய கடன்கள் சீன் நாணயத்தில் 556பில்லியன்கள் மட்டுமே. இது எதிர்பார்த்திருந்த 900பில்லியன்களடுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. ஆனால் 2016-ம் ஆண்டு சீனாவில் புதிய முதலீடுகள், தொழிற்சாலை உற்பத்திகள், சில்லறை விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததிலும் பார்க்கக் குறைந்திருந்தன. அதனால் அந்தக் கடன் வீழ்ச்சி நம்பமுடியாத ஒன்றாக இருக்கின்றது.
எச்சரிக்கும் South China Morning Post
2016-ம் ஆண்டு மே மாதம் 8-ம் திகதி South China Morning Post என்னும் ஊடகம் "Why you should avoid Chinese bank stocks" என்னும் தலைப்பில் வெளிவிட்ட செய்தியில் சீன வங்கிகளின் செயற்படாக் கடன்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போவதாகவும் அவை விற்கும் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கனவே ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் அந்த South China Morning Post சீன வங்கிகளின் செயற்பட முடியாக் கடன் அரசு தெரிவிக்கும் தொகையிலும் பார்க்க எட்டு மடங்கானது எனப் போட்டு உடைத்திருந்தது. உண்மையான செயற்படாக் கடன் வங்கிகளின் மொத்தச் சொத்தின் 1.6விழுக்காடு என சீன அரசு சொல்வது பொய் என்றும் உண்மையான விழுக்காடு 15 முதல் 19 விழுக்காடு என அடித்துச் சொல்கின்றது South China Morning Post. சீனாவின் மொத்தக் கடன் பளு 2020-ம் ஆண்டு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 300விழுக்காடாக அதிகரிக்கும் எனவும் அது எச்சரிக்கின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சி தனது வேகத்தைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கையில் சீன வங்கிகளின் செயற்படாக் கடனும் அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் அது எதிர்வு கூறுகின்றது. சீன அரசு அதன் பொருளாதாரத்தைத் தூண்ட எடுக்கும் முயற்ச்சிகள் அவற்றின் செயற்திறனை இழந்து வருகின்றன என மேலும் அது தெரிவிக்கின்றது.
கைக்காசு நிறையவுடைய சீன வங்கி
சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு 2008-ம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கியதால் ஏற்பட்ட உற்பத்தி இடைவெளியை நிரப்ப சீனா உள்நாட்டில் பல திட்டங்களிற்கு கடன் வழங்கும் படி அதன் வங்கிகளைப் பணித்தது. இதனால் இலாபத் திறனற்ற பல முதலீடுகளுக்கு கடன்கள் வங்கிகளால் வழங்கப் பட்டன. இந்தக் கடன் வழங்கலில் ஊழல் மற்றும் பொதுவுடமைக் கட்சியினரின் தலையீடுகள் நிறைந்திருந்தன. சீனாவின் உள்ளகக் கடன் பளு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதில் பல பொருளியல் நிபுணர்கள் ஒத்து வருகின்ற போதிலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதில் ஒரு பொதுவான உடன்பாடு அவர்களிடையே இல்லை. சீனாவில் ஏற்பட்டது போன்ற கடன் அதிகரிப்பு நடந்த பல நாடுகளில் நிதி நெருக்கடி அல்லது தொடர் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது என்பது சரித்திர உண்மை என்கின்றனர் பொருளியல் நிபுணர்கள். ஒரு பிரிவினர் சீனாவின் தற்போதைய நிலை அமெரிக்காவில் லீமன் பிரதர்ஸ் முறிவடைந்த போது உருவான நிலை போன்றது. அது வங்கிகள் பல முறிவடையும் நிலையை உருவாக்கும் என்கின்றனர். வேறு சிலர் இது ஜப்பானில் ஏற்பட்ட நிலை போன்றது என்றும் இதனால் பல பத்து ஆண்டுகள் சீனா பொருளாதார மந்த நிலையில் இருக்கும் என எச்சரிக்கின்றனர். வேறு சிலர் சீன மைய வங்கியான சீன மக்கள் வங்கி வங்கித் துறைக்கு அதிக நிதியை வாரி இறைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. அதனால் பிரச்சனை பெரிதாக வெடிப்பது சாத்தியமில்லை என்கின்றனர். சீனாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 237 விழுக்காடு என சீன அரசு சொல்கின்றது. சீனாவின் தகவல்கள் நம்பத் தகுந்தவை அல்ல அதன் கடன் பழு 280 விழுக்காட்டிற்கு மேல் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன.
வரவுள்ளமை முதலீடுகள் (investment receivables)
சீன வங்கிகள் கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரம் விழுக்காடு வளர்ச்சியை அடைந்து தற்போது 34.5 ரில்லியன் டொலர்கள் மொத்தப் பெறுமதியுள்ளவையாக உருவெடுத்துள்ளன. சீனாவின் செயற்படாத கடன்கள் வங்கிகளின் பெறுமதியில் 1.75 விழுக்காடு என சீன அரசு கூறுகின்றது ஆனால் உண்மையில் அந்த விழுக்காடு பல மடங்கு அதிகமாகும் என்பதுதான் உண்மை. ஒரு தாராள மதிப்பீடு அது மூன்று விழுக்காடு எனக் கூறுகின்றது. அதன்படி 34.5ரில்லியனின் 3 விழுக்காடு ஒரு ரில்லியன் ஆகும். காலப் போக்கில் இந்தக் கடன்கள் அறவிட முடியாத கடன்கள் என நிலைப்படுத்தப்படும் போது சீன அரசு தன்னிடமுள்ள ஒதுக்கீட்டு நிதியான மூன்று ரில்லியன் டொலர்களில் ஒரு ரில்லியன்களை தனது வங்கிக் துறைக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செய்த பின்னர் சீன வங்கிகளில் மீள் முதலீடு செய்ய முடியாத நிலை சீன அரசுக்கு ஏற்படும். கைல் பாஸ் என்னும் அமெரிக்க முதலீட்டாளர் சீனாவின் நாணயம் கடுமையாக மதிப்புக் குறைக்கப் படும் என்கின்றார். பல சீன வங்கிகள் தம்மால் அறவிட முடியாத கடனகளைப் வரவுள்ளமை முதலீடுகள் (investment receivables) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளன. சீன நாணயமான ரென்மின்பியில் சீன வங்கிகளின் வரவுள்ளமை முதலீடுகள் 2012இல் 2.32ரில்லியின் ஆக இருந்தது தற்போது அது 8.96 ரில்லியன்களாக உயர்ந்து விட்டது.
சீன வழி தனி வழி
சீனாவின் கடன் பளு வேறு மேற்கு நாடுகளின் கடன் பளு வேறு
நெப்போலியனுக்கு எதிரான போர் முடியும் போது பிரித்தானியாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. அதன் பின்னர் பிரித்தானிய உலகப் பெரு வல்லரசாக மாறியது. அது உலகின் முதல் தர பொருளாதார நாடாகி அதன் நாணயம் உலக நாணயமானது. சீனாவின் கடன் பளு பெரும்பாலும் உள் நாட்டு நாணயத்திலேயே உள்ளது. அதன் வெளிநாட்டு நாணயக் கடன் உள்நாட்டுக் கடனின் 5 விழுக்காடு மட்டுமே. உலகைப் பொறுத்தவரை சீனா கடன் கொடுத்த நாடு மட்டுமே அமெரிக்காவைப் போல் கடன் பட்ட நாடு அல்ல. 2016-ம் ஆண்டு மே மாதம் 5-ம் திகதிய கணக்கின் படி ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக்கடன் $19,188,102,413,248ஆகும். சீனாவின் கடன் இதன் பத்தில் ஒரு பங்கு அளவு மட்டுமே. சீனாவின் மொத்தக் கடன் பளு அதன் தேசிய உற்பத்தியில் 237விழுக்காடாக இருக்கையில் அதன் வெளிநாட்டுக்கடன் 16விழுக் கடன் கொடுத்துக் கலங்கும் சீன வங்கிகள் காடு மட்டுமே. இதனால் பல ஆசிய நாடுகளில் 1977ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி போன்று சீனாவில் ஏற்பட வாய்ப்பில்லை. மேற்கு நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில் சீனர்கள் அதிக அளவு சேமிக்கின்றார்கள். பிரச்சனை என்று வரும் போது கடுமையான சிக்கனத்தையும் கடைப்பிடிக்கத் தயாராக அவர்கள் உள்ளார்கள். சீன அரசு தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை உள்நாட்டு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தயங்காமல் பாவிக்கத் தயார் நிலையில் உள்ளது என்பதை சீனப் பங்குச் சந்தை 2015ம் ஆண்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்த போது நிரூபித்தது. சீனாவின் வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகுப் போது சீன அரசு கைகொடுக்கத் தயங்காது. இதனால் தான பிரித்தானியப் பைனான்சியல் ரைம்ஸ் நாளேடு 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ம் திகதி சீன வங்கிகள் தொடர்பான கட்டுரைக்கு "பீதியடையத் தேவையில்லை, சீன வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன" எனத் தலைப்பிட்டது.
No comments:
Post a Comment