அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முதலாவது பொறியை உக்ரேனில் வைத்தார். இப்போது சிரியாவில் அடுத்த பொறியை வைத்துள்ளார். இரண்டிலும் பராக் ஒபாமா ஏதும் செய்ய முடியாதபடியான சிக்கலை அமெரிக்கா எதிர் கொள்கின்றதா? 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த உலக "ஒழுங்கை" இரசியா இன்னும் தனக்குச் சாதகமாக்காவிடினும் அது ஒரு குழப்பத்தை உருவாக்கிவிட்டது.
முன்னை வைத்த ஆப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணையவிருந்தது உக்ரேன். ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இணைந்து உக்ரேனில் இரசிய சார்பு உக்ரேயின் ஆட்சியாளர் விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து உக்ரேனில் உள்ள புதிய நாஜீக்களின் உதவியுடன் விரட்டி உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முயன்றன. பதிலடியாக உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனின் மேற்கு நாட்டு ஆதரவு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தார் விளடிமீர் புட்டீன். விளைவாக உக்ரேனில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. உக்ரேனில் தனது காய் நகர்த்தல்களை வல்லமை மிக்க அமெரிக்க உளவுத் துறைக்கு தெரியாமல் புட்டீன் செய்து முடித்தார். தற்போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாத அளவிற்கு மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது. உக்ரேனை மீட்க முடியாத நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் இருக்கின்றன. சில அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் அரசுறவியலாளர்களும் முழு உக்ரேனையும் இரசியா ஆக்கிரமித்து தனதாக்கினலும் பெலரஸைத் தன்னுடன் இணைத்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ பெரிய இடையூறுகளை ஏற்படுத்தப் போவதில்லை என்கின்றனர். ஆனால் இது இரசிய விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் என்பது உண்மை அது காலப் போக்கில் இரசியாவை வலுவடையச் செய்து ஐரோப்பாவை மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற்றலாம்.
பராக் ஒபாமாவிற்கு விளடிமீர் புட்டீன் வைத்த இரண்டாவது பொறியாக சிரியா அமைந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து பராக் ஒபாமாவின் சிரியா தொடர்பான கொள்கைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாவது சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்தால் அது சிவப்புக் கோட்டைத் தாண்டியது போலாகும். அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்கும். இரண்டாவது பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பஷார் அல் அசாத் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப் பட்ட போது ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு படை நடவடிக்கையும் எடுக்காதபடி புட்டீன் தடுத்து விட்டார். அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடாத்தினால் இரசியப் படைகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடாத்துவதாக மிரட்டியதாகச் சொல்லப் பட்டது. அத்துடன் அரசுறவியல் நகர்வாக இரசியா சிரியாவில் உள்ள வேதியியல் படைக்கலன்களை அழிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டது. ஒபாமாவின் செங்கோட்டைத் தாண்டிய அசாத்தை ஒபாமாவால் ஏதும் செய்ய முடியாத நிலையை புட்டீன் உருவாக்கினார்.
அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்வதற்கான படை நடவடிகை முனைந்தமை இரசிய அதிபர் புட்டீனைப் பதில் நடவடிக்கைக்குத் தூண்டியது. உக்ரேனில் செய்தது போல் அமெரிக்க உளவுத் துறைகளுக்குத் தெரியாமல் விமானங்கள் மூலமாகவும் கடற்கப்பல்கள் மூலமாகவும் பெருமளவு படைக்கலன்களையும் பாரப் படைக்கல ஊர்திகளையும் துருப்பிக் காவிகளையும் சிரியாவில் கொண்டு போய் புட்டீன் இறக்கினார். இவையாவும் சிரியப் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அனுப்பப்படும் படைத்துறை நிபுணர்களை அனுப்புதல் என்னும் போர்வையில் செய்யப்பட்டது. எல்லாவற்றிலும் மேலாக விமானத்தில் இருந்து விமானங்களைத் தாக்கும் விமானங்களும் படைக்கலன்களும் தரையில் இருந்து விமானங்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளும் சிரியாவில் இரசியாவால் கொண்டு போய் இறக்கப் பட்டுள்ளன. இது இனி எந்த ஒரு கட்டத்திலும் அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் விமானத்த் தாக்குதல் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் இன்க்குழுமத்தினர் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானத்தளத்தில் இரசியப் படையினருக்கு என தற்காலிக முகாம்கள் அமைக்கப் படுகின்றன. 2015 செப்டம்பர் 17-ம் திகதியில் இருந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத அளவும் தீவிரமான விமானத் தாக்குதல்களும் உலங்கு வானூர்தித் தாக்குதல்களும் செய்யப்படுகின்றன.
இரசியா தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப் போவதாகச் சொல்கின்றது. அமெரிக்காவும் துருக்கியும் அதையே செய்யப் போவதாகச் சொல்கின்றன. இதனால் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அமெரிக்கப் படைகள் தனது படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார் விளடிமீர் புட்டீன். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நேட்டோப் படைகள் போர் புரியும் போது ஒரு நாட்டுப் படைகள் தவறுதலாக மற்ற நட்பு நாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் பல உண்டு. ஒரே கட்டளைப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட படைகளின் நடவடிக்கைகளே அப்படி இருக்கும் போது. சிரியாவில் நிலைமை மிக மோசமாக அமையலாம் என அமெரிக்காவும் உணர்ந்து கொண்டது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சேர்கீ ஷொய்குவுடன பேச்சு வார்த்தை நடாத்தினார்.
புட்டீனின் நகர்வால் அமெரிக்கா பின்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றது இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபைனாச்ஷியல் ரைம்ஸ். இரசியா தற்போது சிரியாவை நோக்கிச் செய்துள்ள படை நகர்வு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் செய்த பெரிய படைநகர்வாகக் கருதப்படுகின்றது. சில கணிப்பீடுகள் 24 இரசியப் போர் விமானங்கள் சிரியாவில் இறக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ஐ எஸ் அமைப்பினரும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பினரும் சிரிய அரச படைகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றார்கள். இவர்களை இரசியா ஒழித்துக் கட்டிவிட்டால் அசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத நிலை உருவாகும். இதை சவுதி அரேபியா, காட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சுனி முஸ்லிம் நாடுகள் விரும்பாது. அமெரிக்கா சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராக படை நடவடிக்கை எடுக்காமல் இதுவரை இருந்தது இந்த நாடுகளுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சிரியாவில் பசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத ஒரு நிலையை இரசியா ஏற்படுத்த முயல்கின்றது.
அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் சுதந்திர சிரியப் படையும் அதன் இணை அமைப்பினரும் தீரமாகப் போராட முடியாதவர்களாகவே இருக்கினறர். அமெரிக்கா ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவழித்துச் செய்த பயிற்ச்சியும் படைக்கலனும் திட்டம் இதுவரை எதிர்பார்த்த அளவு பயனைக் கொடுக்கவில்லை. சிரியாவின் அரச படைகள் நன்கு பயிற்றப் பட்டவையும் அசாத்திற்கு விசுவாசம் மிக்கவையுமாகும். இதனால் தற்போது சிரியாவில் இரசியாவின் கைகளே ஓங்கியுள்ளன. பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் பராக் ஒபாமாவின் இரண்டாவது நோக்கத்திற்கும் புட்டீன் ஆப்பு வைத்து விட்டார்.
இலண்டனில் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி குறுகிய கால அடிப்படையில் பஷார் அல அசாத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தையைச் செய்யலாம் என்றும் நீண்ட கால அடிப்படையில் அசாத் இல்லாத ஒரு பேச்சு வார்த்தை மட்டுமே நடை பெறும் என்றார். ஆனால் அசாத் தன் பதவி விலகுவது என்பது பேச்சு வார்த்தை மேசையில் முன்வைக்கப்பட முடியாத ஒன்று என்கின்றார்.
ஏற்கனவே மேற்கு நாடுகள் இரகசியமாக ஐ எஸ் அமைப்பின்ருக்கு அசாத்திற்கு எதிராகப் போர் புரிய உதவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இனி அந்த உதவிகள் இரசியாவிற்குப் பிரச்சனை கொடுக்கும் வகையில் மேலும் அதிகரிக்கப் படலாம்.
ஈரானை அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் பொருளாதாரத் தடையை அவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு புட்டீன் தந்திரமாக நீக்கிவிட்டார். இப்போது ஈரான் இரசியாவுடன் இணைந்து அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கின்றது. சிரியாவில் அசாத்தின் ஆட்சியும் ஈரானும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகியவை இரசியாவுடன் இணையும் போது மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் மீள் நிலை நிறுத்தப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment