ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படைகள் குண்டு மழை பொழிய ஐ எஸ்
போராளிகளிடமிருந்து பிரதான நெடுஞ்சாலை-47ஐ குர்திஷ் போராளிகள்
கைப்பற்றியுள்ளார்கள். குர்திஷ் போராளிகளுடன் இணைந்து யதீஷீயப் போராளிகளும்
சிரியாவைச் சேர்ந்த சுனி அரபுக்களும் போராடுகின்றார்கள். இன்னொரு புறம்
ஈராக்கிய சியா படையினரும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல்
செய்கின்றார்கள். இத்தனைக்கும் மேலாக இரசியப் போர் விமானங்கள் சிரியாவில்
உள்ள ஐ எஸ் போராளிகள் மேல் குண்டுகளை வீசுகின்றார்கள். அது போதாது என்று
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானியப் படையினர் ஆகியோரும் ஐ எஸ் அமைப்பினருக்கு
எதிராகப் போர் புரிகின்றார்கள்.
பல முனைகளில் பலதரப்பட்ட
எதிரிகளால் தாக்கப்படும் சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் சிரியப்
படைகளுடன் இணைந்து போராடும் லெபனான் தலைநகரை ஒட்டியுள்ள ஹிஸ்புல்லாவின்
கோட்டையாகக் கருதப்படும் ஒரு புறநகர்ப் பகுதியில் இரட்டைத் தற்கொடைத்
தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி இத்
தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும் இரு நூற்றிற்கு மேற்ப்பட்டோர்
காயமடைந்ததாகவும் தெரிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்சப்படுகின்றது.
சிரியாவில் உள்ள ராக்கா நகரையும் மேற்கு
ஈராக்கில் உள்ள மொசுல் நகரும் ஐ எஸ் அமைப்பினரின் கோட்டைகளாகும். ரக்கா
நகரிலேயே அவர்களின் தலைமைச் செயலகம் இருக்கின்றது. இரு நகர்களையும்
இணைக்கும் நெடுஞ்சாலை-47 சின்ஜார் மலைப்பகுதியூடாகச் செல்கின்றது. இந்த
மலைப் பகுதியைக் கைப்பற்றினால் ஐ எஸ் அமைப்பினரின் நிலப்பரப்ப்பைப்
பொறுத்தவரை அதன் முதுகெலும்பை முறித்தது போலாகும். ஈராக்கின் இரண்டாவது
பெரிய நகரான மொசுல் நகரில் உள்ள எண்ணெய் கிணறுகள் ஐ எஸ் அமைப்பினரின்
தங்கச் சுரங்கங்களாகும். அவர்கள் அவற்றில் இருந்து பெரும் தொகைப்பணத்தை
வருமானமாகப் பெறுகின்றார்கள். அமெரிக்க விமானங்கள் தற்போது சிரியாவில் ஐ
எஸ் அமைப்பினர் வசமுள்ள
எண்ணெய்க் கிணறுகள் மீது தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்க விமானங்கள் செய்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை ஐ எஸ்
இன் பொறியியலாளர்கள் இலகுவாகச் சீர் செய்து விட்டனர். இதனால் இப்போது
கடுமையான சேதங்களை விளைவிக்கக் கூடிய தாக்குதல்கள் செய்யப்படுவதுடன்
எரிபொருள்களை எடுத்துச் செல்லும் பெரிய வண்டிகள் மீதும் தாக்குதல்கள்
நடாத்தப்படுகின்றன.
ஈராக்கின் ஒரு பகுதியான சின் ஜான் மலைப்
பகுதியை 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அதிரடியாகக்
கைப்பற்றினர். இதனால் அங்கு வாழ்ந்த யதீஷீயர்கள் சொல்ல முடியாத
கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் கண்டபடி கொல்லப்பட்டு சிறுமிகள் உட்படப்
பல பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர். இது யதீஷியர்களின் நெஞ்சி ஆறாத
வடுவாக இருக்கின்றது. இவர்கள் ஐ எஸ் அமைப்பினரைப் பழிவாங்கத் துடித்துக்
கொண்டு இருந்தார்கள். இவர்களின் ஆத்திரத்தை ஐக்கிய அமெரிக்கா தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்துடன் தமக்கு என ஒரு அரசு வேண்டும் என
நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களையும் அமெரிக்கா
தனது பக்கம் சேர்த்துக் கொண்டது. சிரியாவில் உள்ள சுனி முஸ்லிம்களிற்குப்
போர்ப்பயிற்ச்சி கொடுத்து அது பயனற்றதாகிப் போனதால் அமெரிக்கா குர்திஷ்
மக்கள் பக்கம் அதிக கவனம் செலுத்தியது.
2015-ம் ஆண்டு நவம்பர்
12-ம் திகதி வியாழக் கிழமை குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா படையினர் ஆறாயிரம்
பேரும் 1500 யதீஷியர்களுமாக 7500 போராளிகள் அமெரிக்க வான் படையினரின்
உதவியுடன் சின்ஞார் நகரில் உள்ள ஐ எஸ் போராளிகளின் நிலைகள் மீது கடும்
தாக்குதல்களை மும்முனைகளில் நடத்தினர். அவர்கள் மீது பதில் தாக்குதல்
தொடுக்க மகிழூர்திகளில் வந்த ஐ எஸ் தற்கொடைப் போராளிகள் மீது தாங்கி
எதிர்ப்பு ஏவுகணைகள் வீசி அவர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
முதலில் சின் ஞார் நகரை அடுத்த கபாரா கிராமம் ஐ எஸ் போராளிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்டது. பின்னர் பல முனைகளிலும் பெஷ்மேர்காப் படையினர் துரிதமாக
முன்னேறினர். ஐ எஸ் அமைப்பினர் பின் வாங்கி ஓடினர். இறுதியில் எந்தவித எதிர்ப்பும் இன்றி சின்ஜார் நகரத்தை பெஷ்மேர்காப் படையினரும் யதீஷீயர்களும் கைப்பற்றினர்.
குர்திஷ்
மக்களிடையே பல போராளிகள் அமைப்புக்கள் உள்ளன. அதில் பெஷ்மேர்கா
போராளிகளும் PKK எனப்படும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும்
முக்கியமானவை. ஐ எஸ் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முன்னர் கைப்பற்றப்
படும் இடங்களை யார் வைத்திருப்பது எனபது தொடர்பாக இவர்களிடையே பெரும்
முறுகல் ஏற்பட்டது. தாக்குதலில் PKK போராளிகள் பங்குபற்ற வேண்டாம் என
பெஸ்மேர்காப் போராளிகள் தெரிவித்தனர். இதனால் தாக்குதல் தாமதப் பட்டது.
அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் கால நிலையை துல்லியமாக முன் கூட்டியே
கணித்து தமது தாக்குதல் வியூகத்தை வகுத்தனர். மேகமற்ற வானம் பொதுவாக வான்
தாக்குதலுக்கு உகந்தது. அத்துடன் பாலைவனத்தில் வான் தாக்குதல் செய்வதற்கு
காற்று வேகமாக வீசக் கூடாது. பாலை வனத்தில் காற்று வீசும் போது புழுதி
கிளம்பி இலக்குகளை இனம் காண்பதை கடினமாக்கும். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக
அமெரிக்கா நெறிப்படுத்தும் பல முனைத் தாக்குதலுக்கு Tidal Wave II எனப்
பெயரிடப்பட்டுள்ளது.
IED எனச் சுருக்கமாக அழைக்கப்படும் improvised
explosive device என்னும் கண்ணி வெடிகளை ஐ எஸ் போராளிகள் பெருமளவில்
பாவிக்கின்றனர். அவற்றை அகற்றும் கவச வண்டிகளை அமெரிக்கா குர்திஷ்
போராளிகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அவை போதிய அளவில் வழங்கப்படவில்லை.
அது மட்டுமல்ல அமெரிக்கா மற்றப் படைக்கலன்களைப் போதிய அளவில் குர்திஷ்
போராளிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்
படுகின்றது. இப்படிப்பட்ட மட்டுப்படுத்தப் பட்ட அமெரிக்க ஆதரவுடன் குர்திஷ்
போராளிகளும் யதீஷியப் போராளிகளும் தீரத்துடன் தமது எதிரிகளான ஐ எஸ்
போராளிகளுக்கு எதிராகப் போராடி நெடுஞ்சாலை-47இல் 35கிலோ
மீட்டர்(22மைல்கள்) தூரமான நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.2015 நவம்பர் 13-ம் திகதி வெள்ளிக் கிழமை சின் ஜார் நகரில் உள்ள பல உயரிய கட்டிடங்களில் குர்திஷ் போராளிகள் தமது கொடிகளைப் பறக்க விட்டனர்.
ஏற்கனவே
பைஜீ என்னும் எரிபொருள் வளம் மிக்க ஈராக்கிய நகரை ஐ எஸ் அமைப்பினர்
இழந்துள்ளனர். ஈராக்கிய அரச படையினர் ரமாடி நகரை ஐ எஸ்
அமைப்பினரிடமிருந்து முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் திணறுகின்றனர்.
ஈராக்கியப் படையினர் போதிய தீரத்துடன் போராடுவதில்லை என்ற குற்றச் சாட்டும்
முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 நவம்பர் 11-ம் 12ம் திகதிகளில் இரசிய விமானங்கள் சிரியாவில் 107 பறப்புக்களை மேற்கொண்டு ஐ எஸ் போராளிகளின் 289 நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தின. 34 கட்டளை நிலைகள், 16 படைக்கலன்கள் எரிபொருள் கொண்ட குதங்கள், இரு தொழிற்சாலைகள், 50 முகாம்கள், 184 காப்பரண்கள் ஆகியவற்றை தாக்கி அழித்ததாக இரசியா தெரிவித்துள்ளது.
குர்திஷ் இனத்தின் முதுகில் ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா பலதடவைகள் குத்தியுள்ளது. இனி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அவர்களைப் பாவித்த பின்னர் அமெரிக்கா நேரடியாகக் குத்துமா அல்லது துருக்கியினூடாகக் குத்துமா? சில குர்திஷ் விடுதலைப் போராளிகளின் அமைப்புக்களை ஏற்கனவே அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்ற போலி முத்திரை குத்தியுள்ளது.
முப்பதினாயிரம் போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட நீண்ட காலம் எடுக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment