சீனாவின் பிடியில் இருந்து இன்னும் ஒரு நாடு ஆட்சிய மாற்றம் என்னும் பெயரில் மீட்கப்படுகின்றது. கொதிக்கும் எண்ணெயில் இருந்து விடுபட்டு எரியும் நெருப்புக்குள் இன்னும் ஒரு நாடு விழுகின்றதா? இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் மியன்மாரில் நடக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மியன்மாரிலும் சீனா முதலீடுகள் செய்ததுண்டு. சரியாகச் சொன்னால் நாட்டுக்குப் பயன்தராத முதலீடுகள். மியன்மாரிலும் சீனவின் முத்து மாலைத் திட்டத்தில் ஓர் அம்சமாக சிட்வே துறைமுகம் மேம்படுத்தப் பட்டுள்ளது. மியன்மார் சீனாவின் strategic corridor into the Indian Ocean.
கேந்திர முக்கியத்துவம்
பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் ஐந்து கோடியே இரண்டு இலட்சம் (52 மில்லியன்) மக்களைக் கொண்டது. கனிம வளம் மிக்க மியன்மார் சீனா, இந்தியா, பங்களாதேசம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. இந்து மாக்கடலின் வங்காள விரிகுடாவை மேற்கு எல்லைகளாகக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மியன்மார் இருக்கின்றது. அதன் அரசியலமைப்பின் படி வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களைக் கொண்ட இரு மகன்களைக் கொண்ட ஆங் சூ கீ அதன் தலைவராக முடியாது. அந்த அரசியலமைப்பை மாற்ற 75 விழுக்காட்டிற்கு மேலான ஆதரவு அவசியம். 1990-ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய ஆங் சூ கீயை ஆட்சியமைக்க விடாமல் சிறையில் அடைத்தனர் மியன்மாரின் ஜுண்டா எனப்படும் ஆட்சியாளர்கள். ஆங் சூ கீயின் வலதுகரமாகத் திகழ்பவர் வின் தீன் என்னும் ஒரு முன்னாள் படைத்துறை அதிகாரி. இவர் படைத்துறையில் இருந்து விலகி பல பல்தேசிய நிறுவனங்களுக்கு இரகசியத் தரகராகச் செயற்பட்டதன் மூலம் பெரும் பொருள் ஈட்டியவர். படைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிகரட் பெட்டியும் விஸ்க்கிப் போத்தலும் கொடுத்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்டவர். இந்தப் பல்தேசிய நிறுவனங்களுடனான தொடர்பு அவரை பன்னாட்டுச் சமூகம் என்றும் அரச சார்ப்பற்ற தொண்டு நிறுவனங்கள் என்றும் பல உளவுத் துறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதுவே அவரை ஆங் சூ சீயின் வலது கரமாக்கியும் இருக்கலாம்.
மியன்மாரின் பாராளமன்றம் 224 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையையும் 440 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையையும் கொண்டது. இரண்டிற்குமான தேர்தல் 2015 நவம்பர் 7-ம் திகதி நடைபெற்றது. மக்களவையின் 440உறுப்பினர்களில் 110 பேரை படைத்துறையின் நியமிப்பர் எஞ்சிய 330 உறுப்பினர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
ஒரு குட்டை ஒரே மட்டைகள்
இலங்கையில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டு இனக்கலவரங்கள் தூண்டப்படும். பர்மாவிலும் அப்படியே நடக்கும். இலங்கையில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் பர்மாவில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பு உண்டு. இரு நாட்டிலும் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் நோர்வே, மோஸாட், சி ஐ ஏ ஆகியவற்றுடன் தொடர்பு உண்டு எனக் குற்றம் சாட்டப்படுவதும் உண்டு. நாட்டில் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் குறைக்க பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருந்தார். ஆனாலும் சில வேறுபாடுகளும் உண்டு. மஹிந்த ராஜபக்ச போல் பர்மாவின் படைத்துறை ஆட்சித் தலைவர் தெயின் செயின் முரண்டு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் சொற்படி கேட்கத் தொடங்கினார். அதனால் அவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக்கழகத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. பக்கத்து நாட்டில் இருந்து படைகள் வந்து இறங்கும் என்ற மிரட்டலும் விடத்தேவையில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டது. இப்படி தெயின் செயின் வளைந்து கொடுத்ததால் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றமும் இனக்கொலையும்
ஒரு நாட்டில் இனக்கொலை நடந்தால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அங்கு இனக்கொலை நடக்குமா என்பதை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது மியன்மார் எனப்படும் பர்மாவில் நடப்பவை. மியன்மாரில் சீனாவும் அமெரிக்காவும் பெரும் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையைப் போல பர்மாவிலும் தேரவாத பௌத்த மதம் அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப் படுகின்றது. அது மட்டுமல்ல இலங்கையில் மஹாவம்சம் போல் பர்மிய பௌத்தர்கள் சாஸன வம்சம் என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள். வெளியாரின் நிர்பந்தங்களாலும் இயக்கத்திலும் அமைதியான தேர்தல் இலங்கையைப் போலவே மியன்மாரிலும் நடந்துள்ளது.
சீன முதலீடு
சீனாவிற்கான எரிபொருள் இறக்குமதியில் பெரும் பகுதி மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையூடாக நடை பெறுகின்றது. உலக வர்த்தகத்தின் முக்கிய திருகுப் புள்ளிகளில் (choking points) ஒன்றான மலாக்கா நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் சீனாவின் ஏற்றுமதியையும் தடை செய்ய முடியும். இதற்கு மாற்றீடாக பர்மாவினூடாக தனக்கு ஒரு விநியோகப் பாதையை சீனா உருவாக்கியது. இந்தப் பாதை சீனாவின் யுனன் மாகாணத்தில் ஆரம்பித்து பர்மாவின் இரவாடி நதியூடாகச் சென்று பர்மாவின் தலைநகர் சென்று பின்னர் இந்துமாக்கடலை அடைகின்றது. இது மட்டுமல்ல சீனாவின் முத்து மாலைத் திட்டம் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. பர்மாவின் கனிம வளங்களும் வெளிநாட்டுக் கொள்கையும் சீனாவின் கரங்களிலேயே இருந்தன என விமர்சிப்பதுண்டு. பர்மாவின் கனிம வளங்களை அகழ்வு செய்யும் உரிமத்தையும் இராவாடி நதியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் உரிமையையும் சீனா தனதாக்கிக் கொண்டது. 2007-ம் ஆண்டு பர்மாவின் கடலில் இயற்கைவாயு ஆய்விற்கான ஒப்பந்தத்தையும் பர்மாவுடன் செய்து கொண்டது. 2009ம் ஆண்டு 2.5பில்லியன் டொலர் பெறுமதியான 2380 கிலோ மீட்டர் நீளமான எரிபொருள் வழங்கல் குழாயையும் நிர்மானிக்கும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செய்து கொண்டன. இரவாடி நதி மின் உற்பத்தியில் 90 விழுக்காடு சீனாவிற்கே செல்லும் என்பதால் அதற்குப் பலத்த எதிர்ப்பு மியன்மாரில் உருவானது. இதனால் அந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு யார் தூபமிட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
2011-ம் ஆண்டு மியன்மாரில் சீன ஆதிக்கமும் முதலீடும் உச்சத்தை அடைந்தது. மியன்மாருக்கான அந்நிய நேரடி முதலீட்டில் 70 விழுக்காடு சீனாவில் இருந்தே வந்தது. இப்போதும் மியன்மாரின் ஏற்றுமதியில் 37 விழுக்காடு சீனாவிற்கானதே. மியன்மாரின் இறக்குமதியில் 30 விழுக்காடு சீனாவில் இருந்தே வருகின்றது.
பரிசு கெட்ட பரிசு பெற்ற ஆங் சூ கீ
மேற்கு நாட்டு ஊடகங்கள் பல தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சூ கீயை ஒரு மக்களாட்சியின் தேவதையாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. இதே சித்தரிப்பு மைத்திரிக்கும் ரணிலுக்கும் அவ்வப்போது செய்யப்படுவதுண்டு. சீனா தனது ஆதிக்கத்தை பர்மாவில் அதிகரிக்க அதற்கு எதிரான அமெரிக்காவின் காய் நகர்த்தல்களும் அங்கு ஆரம்பித்தன. அமெரிக்காவின் முக்கிய காயாக திகழ்பவர் ஆங் சூ கி என்னும் பெண்மணி. ஆங் சூ கீயின் தந்தை பிரித்தானிய ஆட்சியின் கீழ் பர்மா இருந்த போது தலைம அமைச்சராக இருந்தவர். பின்னர் 1947இல் இவர் கொலை செய்யப்பட்டார். ஆங் சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்ற பர்மியப் பெண்மணி. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூ கீ சிறையில் இருந்த போது அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார். 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைக்குரிய குடிமகளாக அறிவித்தது. இத்தனை பரிசுகளையும் பெற்ற ஆங் சூ கீ பர்மாவில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படும் போதோ நாட்டை விட்டு விரட்டப்படும் போதோ கண்டன அறிக்கை ஏதும் விடவில்லை. அதற்கு அவர் சொல்லும் விளக்கம் "நான் ரொஹிங்கியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். " ஆனால் அவர் வாக்கு வேட்டை அரசியலுக்காகத்தான் மௌனமாக இருக்கின்றார்.
2014-ம் ஆண்டு பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.
பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தார் அதிபர் தெயின் செயின். அந்த இனக்கொலையாளியை பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்தார். படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். பர்மாவை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து அமெரிக்காவின் சார்பாக மாற்றும் முயற்ச்சிக்கு பர்மிய அதிபர் தெயின் செயின் இணக்கப் பட்டதுதான் இந்த அமெரிக்க பர்மிய ஆட்சியாளர்களுக்கு இடையிலான உறவை உருவாக்கியது.
ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.
கச்சின் மாகாணத்தில் இனக்கொலை
பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள் செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். ) போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்).
மனிதக் கடத்தலாகக் காட்ட முயற்ச்சி
மியன்மாரில் இனக்கொலைக்குத் தப்பி ஓடிய ரொஹிங்கியா மக்களின் பிரச்சனையை வெறும் மனிதக் கடத்தல் செய்பவர்களின் பிரச்சனையாகக் காட்ட மேற்கத்தைய ஊடகங்கள் காட்ட முயன்றன. நடுகடலில் தத்தளிக்கும் ரொஹிங்கியோ மக்கள் தொடர்பாகச் செய்தி வெளிவிட்ட நியூயோர்க் ரைம்ஸ் தெற்காசியாவில் மனிதக் கடத்தல் பயங்கரம் எனத் தலைப்பிட்டுச் செய்தியை வெளிவிட்டது. பர்மாவில் இடப்பெயர்வுக்கு உள்ளான ரொஹிங்கிய இஸ்லாமியர்கள் மனிதக் கடத்தல்காரர்கள் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுகின்றார்கள் என நியூயோர்க் ரைம்ஸ் கூறுகின்றது. பர்மாவில் இருந்து மட்டுமல்ல பங்களாதேசத்தில் இருந்தும் மக்கள் தப்பி ஓடுகின்றார்கள் என்பது பெரிதுபடுத்தப் படுகின்றது.
பர்மாவுடன் மனித உரிமைப் பிரச்சனையை எழுப்பினால் அது மீண்டும் சீனா பக்கம் சார்ந்து விடும் என ஐக்கிய அமெரிக்கா அஞ்சியது. வட கொரியாவுடன் மனிதப் பிரச்சனையை எழுப்பிய படியால் அது அமெரிக்காவின் மோசமான எதிரியாக மாறியது. அது போல் பர்மாவும் மாறக் கூடாது என அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். இதானால் மனித உரிமை மீறிய தெயின் செயினை வைத்துக் கொண்டே அவரின் எதிர்ப்பின்றி மியன்மாரில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. சீனாவுடன் ஆறாயிரம் மைல்கள் எல்லையைக் கொண்ட மியன்மாரில் சீன ஆதிக்கத்தை இல்லாமற் செய்வது இலகுவான செயல் அல்ல. மியன்மார் 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மியன்மாரின் Wa எனவும் Kachin எனவும் அழைக்கப்படும் ஈர் இனக்குழுமங்களுடன் சீனா நெருங்கிய உறவைப் பேணிவருகின்றது. சீனா நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு செயற்படுவதில் தனது திறமையை பல துறைகளில் நிரூபித்துள்ளது. இலங்கையிலும் மியன்மாரிலும் அதன் நீண்ட காலத் திட்டம் எப்படி இருக்கப் போகின்றது என்பதைப் பார்க்க இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment