நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பல காரணங்களுக்காக மோதல் நடப்பதுண்டு. ஆனால் வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் விசித்திரமன ஒரு காரணத்திற்காக மோதலும் அது தொடர்பான உயர்மட்டப் பேச்சு வார்த்தையும் நடந்தது. தென் கொரிய தனது பகை நாடான வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகள் மூலம் வட கொரியாவின் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா தென் கொரியாவின் ஒலிபெருக்கிகள் மீது எறிகணைகள் வீசியது. பதிலுக்கு தென் கொரியாவும் எறிகணைகள் வீசியது. இதைத் தொடர்ந்து வட கொரியா தனது படைகளை ஒரு போருக்குத் தயாராகும் படி உத்தரவிட்டு நாட்டில் ஓர் அரைப் போர் நிலைப் பிரகடனம் செய்தது. இத்தனையும் தென் கொரியாவும் அதன் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஒரு போர் ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது நடந்தது. ஒத்திகையின் குறியீட்டுப் பெயர் வடகொரியத் தலைநகர் "பியாங்யாங்கை ஆக்கிரமித்தல்"
கண்ணி வெடியில் இருந்து ஒலிபெருக்கி
2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி ஆரம்பமான ஒலிபெருக்கிகளூடான பரப்புரை இருநாடுகளுக்கும் இடையில் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. 11 நிலைகளில் இருந்து தென் கொரியா ஒலிபெருக்கி மூலமான பரப்புரையைச் செய்தது. பரப்புரை பெரும்பாலும் மக்களாட்சியைப் பற்றியதாக இருந்ததுடன். உலகச் செய்திகள் கால நிலை அறிக்கை ஆகியவற்றையும் உள்ளடக்கி இருந்தது. இரு நாடுகளும் எல்லையில் மற்ற நாட்டுக்கு எதிராக ஒலிபெருக்கி மூலம் பரப்புரைகள் செய்து ஒன்றை ஒன்று ஆத்திரபப்டுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு உடன்பாட்டுக்கு வந்தன. ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப் படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.
+
இரு கொரியாக்களின் வலிமை
உலகிலேயே இரு மோசமான அயல் நாடுகளாக தென் கொரியாவும் வட கொரியாவும் இருக்கின்றன. ஓர் இனம். இரு நாடு. பிளவுபட்டு அறுபது ஆண்டுகள் ஆகியும் அமைதியற்ற அயலவர்களாக வாழ்கின்றனர். உலகிலேயே அதிக அளவு படையினர் குவிக்கப்பட்ட எல்லையாக வட மற்றும் தென் கொரிய எல்லைகள் இருக்கின்றன. 28,500 ஐக்கிய அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருக்கின்றன. வட கொரியாவின் மக்கள் தொகை 24 மில்லியன்கள் தென் கொரியாவின் மக்கள் தொகை 49 மில்லியன்கள். நாடுகளின் படைவலுவை மதிப்பீடு செய்து தரப்படுத்தும் Global Fire Power Ranking இன் கணிப்பின் படி படைவலுவில் வட கொரியா 36-ம் இடத்திலும் தென் கொரியா 7-ம் இடத்திலும் இருக்கின்றன.
தென் கொரியாவிடம் 23 நீர்மூழ்கிக் கப்பல்களும் வட கொரியாவிடம் 72 நீர்முழ்கிக் கப்பல்களும் இருக்கின்றன. Frigates வகைக் கப்பல்கல் தென் கொரியாவிடம்14 வட கொரியாவிடம் 3. நாசகாரிகள் எனப்படும் Destroyers போர்க்கப்பல்கள் தென் கொரியாவிடம் ஆறு வட கொரியாவிடம் ஏதுமில்லை
இரு நாடுப் படைகளையும் 80 கிலோ மீட்டர் தூர படையற்ற பிரதேசம் பிரிக்கின்றது. வட கொரியாவின் படைக்கலன்கள் பழையவை எனச் சில படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கொரியாவில் அமெரிக்க பாணி மக்களாட்சி முறைமையும் வட கொரியாவில் ஸ்டாலின் பாணி ஆட்சியும் நடக்கின்றன. உலகிலேயே ஊடக சுதந்திரம் குறைந்த நாடாக வட கொரியா கருதப்படுகின்றது. வட கொரியாவில் ஒரு இலட்சம் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கின்றனர்.
Transparency International என்னும் அமைப்பின் 2014 ஆண்டிற்கான பட்டியலின்படி corruption perception index இல் உலகிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி வட கொரியாவில் நடக்கின்றது. மக்களின் சராசரி ஆயுள் வட கொரியாவில் 69ஆகவும் தென் கொரியாவில் 79ஆகவும் இருக்கின்றது. அதே வேளை வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட தென் கொரியாவில் தற்கொலைகள் மிக அதிகமானதாகும். உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது.
உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது. வட கொரியாவின் மொதத் தேசியப் பொருளாதார உற்பத்தியிலும் பார்க்க தென் கொரியாவின் பொருளாதாரம் 36 மடங்கு பெரியதாகும்.
ஒன்றாக இருந்த கொரியத் தீபகற்பத்தை சீனாவும் ஜப்பானும் மாறிமாறி ஆக்கிரமித்து தமது அட்டூழியம் மிக்க ஆட்சியின் கீழ் வைத்திருந்தன. ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கொரியாவை இரண்டாம் உலகப் போரின் பின்னர் வட கொரியாவை சோவியத் இரசியாவும் தென் கொரியாவை அமெரிக்காவும் ஜப்பானிடமிருந்து பிடுங்கிக் கொண்டன. ஈர் அரசுகள் உருவாக்கப் பட்டன. 1950-ம் ஆண்டு சீனாவினதும் சோவியத்தினதும் ஆதரவுடன் வட கொரியா தென் கொரியா மீது படை எடுத்தது. கொரியப் போரில் முதல் முறையாக விமானங்கள் வானில் ஒன்றின் மீது ஒன்று ஏவுகணைகள் வீசுவது நடந்தது. மூன்று ஆண்டுகளின் பின்னர் போர் முடிவிற்கு வந்தது. இரு நாடுகளும் போரின் பின்னர் மோசமான எதிர்களாகின. வட கொரியா அணுக்குண்டு உற்பத்தி செய்தது. தென் கொரியாவில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்தது.
2015 ஓகஸ்ட் மாதம் ஒலிபெருக்கியால் உருவான முறுகலில் தென் கொரியா முன்பு எப்போதும் இல்லாத அளவு கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது. தென் கொரியா செய்யும் ஒலிபெருக்குப் பரப்புரை எல்லையில் உள்ள வட கொரியாவின் படையினரின் மன உறுதியைக் குலைப்பதாக அமையும் என வட கொரியா கருதுகின்றது. ஏற்கனவே தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக் கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரப்புரைப் போட்டி ஒலிபெருக்கிகளால் மட்டுமல்ல தென் இந்திய சினிமா பாணிக் கட் அவுட்டுகளிலும் நடக்கின்றன. வட கொரியாவில் சோஸ்லிச சொர்க்கத்து வாருங்கள் என எழுதப் பட்டுள்ளது. தென் கொரியா இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிட்டு எழுதிக் கட் அவுட் வைத்திருக்கின்றது. பலூன்கள் மூலம் ஒரு நாடு மற்ற நாட்டுக்கு பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை வீசுவதும் உண்டு. தென் கொரியாவின் பரப்புரைகளால் பல வட கொரியர்கள் தென் கொரியாவிற்கு இரகசியமாகப் போய்க் குடியேறுவதும் உண்டு.
2015 ஓகஸ்ட் 20-ம் திகதி பிற்பகல் நான்கு மணியளவில் வட கொரியா 76.2மில்லி மீட்டர் எறிகணைகளை தென் கொரியாவை நோக்கி வீசியது. பின்னர் இருபது மணித்துளிகள் கழித்து மேலும் எறிகணைகள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து தென் கொரியா தனது பீராங்கிகளில் இருந்து 120 மில்லி மீட்டர் எறிகணைகளை வட கொரியா மீது வீசியது. தென் கொரியாதான் முதலில் எறிகணைகளை வீசியது எனச் சொல்லிய வட கொரியா எறிகணை வீசியதற்கான தண்டனையில் இருந்து தென் கொரியா தப்பாது எனச் சூளுரைத்தது.
ஐக்கிய அமெரிக்காவின் நான்கு F-16 தாக்குதல் போர் விமானங்களும் F15K போர் விமானங்களும் வானில் பறந்து தமது வலுவைக் காட்டின.
அமெரிக்கா வரை பாயக்கூடிய அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகணைகளைத் தன்னிடம் வைத்திருக்கும் வட கொரியா ஈரானை அடிபணிய வைத்தது போல் தன்னை அடிபணிய வைக்க முடியாது என்றது.
இப்படிப்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள படைகளற்ற பிரதேசத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடாத்தின. வட கொரியாவின் சார்பில் அதிபர் கிம் ஜோங்கின் வலது கையாகக் கருதப் படும் குவாங் பியோங் சோ (Hwang Pyong So) கலந்து கொள்வது இரு நாடுகளிடையான் நோக்குனர்களை ஆச்சரியமும் ஆறுதலும் அளிக்க வைத்துள்ளது. இவர் பேச்சு வார்தையில் பங்கு பற்றுவதால் அங்கு எடுக்கும் முடிவு காத்திரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் வட கொரியா எல்லையில் செய்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மன்னிப்புக் கோராவிடில் ஒலிபெருக்கி மூலமான பரப்புரை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. இது பேச்சு வார்த்தைகளைச் சிக்கலாக்கியுள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தி
இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன. கண்ணிவெடிகள் வைத்தமைக்கும் ஆத்திரமூட்டக் கூடிய வகையில் படைகளை நகர்த்தியமைக்கும் வட கொரியா வருத்தம் தெரிவித்துள்ளது. தென் கொரியா தனது ஒலிபெருக்கிகள் மூலமான பரப்புரைகளை நிறுத்த ஒத்துக் கொண்டுள்ளது.
இரு கொரியாக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலைக்குப் போய் பின்னர் சுமூக நிலைக்குபோவதும் அடிக்கடி நடக்கின்ற ஒன்று. ஓநாய் ஓநாய் என மிரட்டப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு நாள் உண்மை ஓநாயில் முடியும்.
No comments:
Post a Comment