பல பொருளாதாரச் சிக்கல்கள் சவாலகள் மத்தியில் ஈரான் மிகவும் உறுதியுடன் நின்று பேச்சு வார்த்தை நடாத்தியது. ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் நாம் மேற்கு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவோம் என ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்தது. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்குவது தொடர்பான எமது எல்லா நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதுடன் குடிசார் தேவைகளுக்காக ஈரானின் அணுத்திட்டம் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றார். ஈரானிலும் பார்க்க P-5+1 நாடுகளே அதிக அளவு விட்டுக்கொடுப்புகளைச் செய்தன.
ஈரானுடனான உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
1. ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும். ஈரானுடனான உடன்பாடு நிறைவேற்றப்பட்டால் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் 100பில்லியன் விடுவிக்கப்படும். ஈரான் மீண்டும் சுதந்திரமாக எரிபொருள் ஏற்றுமதி செய்யலாம். உடன்பாடு எட்டிய செய்தி வெளிவந்தவுடன் உலகச் சந்தையில் எரிபொருள் விலை இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
2. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் ஈரானில் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பான நிலையங்களை பார்வையிட ஈரான் அனுமதி வழங்குவதற்கு அந்த நிலையங்களில் அணுக்குண்டு தொடர்பான நடவடிக்கைகள் நடப்பதற்கான ஆதாரங்களை கண்காணிப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாடற்ற பரிசோதனை செய்யும் உரிமை ஐநா கண்காணிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஈரான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடற்ற அனுமதி ஈரானின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகமானது என ஈரான் எதிர்த்தது.
3. உடன்பாட்டை ஈரான் மீறினால் 65 நாட்களில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்
4. ஈரானுக்கான ஐநாவின் படைக்கல ஏற்றுமதித் தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும். இதை இரசியாவும் சீனாவும் எதிர்த்த போதிலும் தடை நீக்கப்படவில்லை. மரபுப் படைக்கலன்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை உடன் நீக்க வேண்டும் என ஈரான் அடம் பிடித்திருந்தது.
5. The International Atomic Energy Agency என்னும் பன்னாட்டு அணு வலு முகவரகமும் ஈரானும் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலின் படைத்துறை மயமாக்கலைத் தடுத்தல் தொடர்பாக Roadmap எனப்படும் ஒரு பாதைத்திட்டம் ஒன்றிற்கான உடன்படிக்கை 2015-ம் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டும். இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
6. ஈரான் யூரேனியத்தை 5 விழுக்காடு மட்டுமே பதப்படுத்தலாம். அணுக்குண்டு செய்வதற்கு 98 விழுக்காடு பதப்படுத்த வேண்டும் .
7. ஈரானில் உள்ள நட்டான்சில் நிலத்துக் அடியில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையத்தை விஞ்ஞான ஆய்வு நிலையமாக ஈரான் மாற்றும். அங்கு தற்போது இருக்கும் யூரேனியப் பதப்படுத்தும் 10,000உருளைகளில் 5000 உருளைகளை மட்டுமே அங்கு பாவனையில் இருக்கும். ஆனால் இன்னும் எட்டு ஆண்டுகளில் ஈரான் மேம்படுத்தப்பட்ட உருளைகளை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது..
8. ஈரானிடமிருக்கும் மேலதிக யூரேனியங்களை நாட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும். தற்போதைய பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தின் இருப்பை 98 விழுக்காட்டால் குறைக்க வேண்டும்.
ஈரானுக்கு எதிரான தடைகள்
தொடர்ந்து 1995-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் தனது ஆணை மூலம்
ஈரானில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தார்.
1996-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை ஈரானில் முதலீடு
செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஈரானின்
யூரேனியம் பதப்படுத்தலுக்கு
எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஈரானுடன் அணு உற்பத்தி
தொடர்பான எந்தவித வர்த்தகமும் செய்யக் கூடாது என்ற தடை 2006-ம் ஆண்டு
விதிக்கப்பட்டது. இத்தடை 2007-ம் ஆண்டு மேலும் இறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும்
ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. ஐநா பாதுகாப்புச்
சபையில் ஈரானுக்கு எதிராக 2008-ம் 2010-ம் ஆண்டுகளில் மேலும் பொருளாதாரத்
தடைகள் விதிக்கப்பட்டன.
ஈரானுடனான உடன்பாட்டில் பல குறைபாடுகள் இன்னும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. பெரிய பிரச்சனைகள் பாதியளவுதான் தீர்க்கப்பட்டுள்ளன (big issues only semi-resolved) என்பது ஒரு பரவலான கருத்தாக இருக்கின்றது. ஈரான் தன்னிடம் இருக்கும் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை அணுக்குண்டாக்க முயற்ச்சிக்கக்கூடாது என்பதில் உடன்படிக்கை உறுதியாக இருக்கின்றது.
ஈரானுடனான உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நட்பு சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடனும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடனும் தொலைபேசியில் உரையாடினார். சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையை பெரிதும் வலியுறுத்தி வந்தன. ஈரானுடனான உடன்படிக்கைக்கு இரசியா வழங்கிய ஒத்துழைப்பு அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். உடன்படிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகம் இன்று நிம்மதியாக மூச்சு விடுகின்றது என்றார். ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக ஒரு பரந்த கூட்டணியை இனி அமைக்கலாம் என்றான் இரசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
இந்த உடன்படிக்கை பராக் ஒபாமாவிற்கும் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானிக்கும் பெரு வெற்றியாகக் கருதப்படுகின்றது. ஈரானுடனான உடன்படிக்கையை சரித்திரச் சரணாகதி என இஸ்ரேல் கண்டித்துள்ளது. பராக் ஒபாமாவின் எதிர்க்கட்சியும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலுவைக் கொண்டதுமான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஈரானுடனான உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். The American Israel Public Affairs Committee எனப்படும் அமெரிக்க இஸ்ரேலியப் பொதுவிவகாரக் குழு ஈரானுடானான உடன்பாடு ஈரானின் அணுக்குண்டு உற்பத்திப்பாதையைத் தடுக்கத் தவறிவிட்டது என்கின்றது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஜோன்ன் பௌனர் உலகத்தை குறந்த அளவு அபாயகரமானதாக மாற்றுவதை விட்டு இந்த உடன்படிக்கை ஈரானை ஓர் உறுதி மிக்க நாடாக மாற்றி அதன் பயங்கரவாதத்திற்கான ஆதரவை ஊக்குவிக்கின்றது என்றார்.
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைத் தலைவர் இந்த உடன்படிக்கையை எதிர்த்துள்ளார். இந்த உடன்படிக்கையை அமெரிக்க்ப் பாராளமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்தால் பராம் ஒபாமா தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து பாராளமன்றத்தின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் நிறைவேற்று ஆணையப் பிறப்பிப்பார் எனத் தெரிவித்துள்ளார். போர் விரும்பும் பழமைவாதிகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான குடியரசுக் கட்சியினர் சிலரும் இந்த உடன்பாட்டைக் குழப்ப ஒபாமா அனுமதிக்கப்போவதில்லை. ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் உடன்பாட்டிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
உடன்பாடு ஏற்பட்டவுடன் ஈரானியர்கள் தெருவில் இறங்கி மகிழ்ச்சி ஆராவாரப்பட்டனர். ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தனது நாட்டை மக்களாட்சியை நோக்கி நகர்த்தும் முயற்ச்சிக்கும் இந்த உடன்படிக்கை வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர், உச்ச மத சபை ஆகிய மூன்று அதிகார மையங்கள் இருக்கின்றன. ஈரானிய உச்சத் தலைவரின் அங்கீகாரம் உடன்படிக்கைக்கு அவசியமாகும். ஈரான் மனித உரிமைகளை மீறுகின்றது, பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது போன்ற காரணங்களுக்காக அதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தடைகள் தொடர்ந்து இருக்கும்.
ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் போது அது அதிக நிதியைப் பெறும். அதைக் கொண்டு அது மத்திய கிழக்கின் சமநிலையைக் குழப்ப பெரும் முயற்ச்சி எடுக்கலாம் என சில சுனி முஸ்லிம் தலைவர்கள் கரிசனை கொண்டுள்ளனர். ஆனால 400 பில்லியன் பெறுமதியான ஈரானிற்கு மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யத் தொடங்கும் போது உலகப் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வாய்ப்புண்டு. அத்துடன் எரிபொருள் விலை குறைவதும் பல நாடுகளுக்கு வாய்ப்பாக அமையும்.
சவுதி ஒரு புறம் இஸ்ரேல் மறுபுறம்
ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக இஸ்ரேல் மட்டுமல்ல சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டிருந்தது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்தால் சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யலாம் என அஞ்சப்பட்ட்டது. இதனால் ஒரு அணுப் படைக்கலப் பரவலாக்கம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்படலாம் எனவும் அஞ்சப்பட்டது . லிபியா, துனிசியா, அல்ஜீரியா, பாஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகின்றது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்பியது. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இத்னால் சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது.
புவிசார் அரசியல் நிலை மாறுமா
உடன்பாட்டைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவு சீரடையலாம். இது மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் புவிசார் அரசியலைத் தலைகீழாக மாற்றலாம். துருக்கி-ஈரான் - அமெரிக்கஆகியவற்றின் முக்கூட்டு உறவு ஒன்று உருவாகும் சாத்தியம் உண்டு. இதன் மூலம் தற்போது உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் சிரியா, ஈராக், லெபனான், காசா நிலப்பரப்பு, யேமன் ஆகிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஈரானுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி ஈரானில் உள்ள வலது சாரிகளையும் மேற்கு நாடுகள் சார்பானவர்களையும் ஊக்கப்படுத்துவதும் அமெரிக்காவின் ஒரு நோக்கமாக இருந்தது. 1979 இல் முறிந்து போன ஈரானிய அமெரிக்க உறவை மீண்டும் புதுப்பித்து வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதி பேணலில் ஈரானையும் ஒரு பங்காளியாக்கும் ஒபாமாவின் கனவு நிறைவேறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது.
No comments:
Post a Comment