சோமாலியாவில் இருந்து செயற்படும் அல் ஷபாப் அமைப்பினர் 2015 ஜூலை மாதம் 7-ம் திகதி கென்யா நாட்டிற்குள் புகுந்து ஒரு தாக்குதலை நடாத்தி 14 அப்பாவிகளைக் கொன்றதுடன் மேலும் 11 பேரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப் பட்டவர்களில் பெரும் பான்மையானவர்கள் கல் அகழ்வு செய்யும் ஏழைத் தொழிலாளர்கள். அல் கெய்தாவின் இணை அமைப்பாகக் கருதப்படும் அல் ஷபாப் அமைப்பு சோமாலியாவிலும் அதைச் சூழ உள்ள நாடுகளிலும் உள்ள பல வலுவற்ற இலகு இலக்குக்கள் மீது தாக்குதல்கள் நடாத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சோமாலிய எல்லையை ஒட்டிய கென்யாவின் மந்தேரா நகரில் அதிகாலை ஒரு மணியளவில் கடும் வெப்பம் காரணமாக வெளியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது முதலில் கைக்குண்டுகளாலும் பின்னர் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடாத்தப் பட்டது. தாக்குதல் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் கென்யாவின் காவற்துறையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். அதற்குள் தாக்குதலாளிகள் தப்பி ஓடிவிட்டனர். கென்யாவில் பல சோமாலியர்கள் வாழ்வதால் அல் ஷபாப் போராளிகளால் அங்கு இலகுவாக நுழைய முடிகின்றது.
கொடூரமான தாக்குதல்
2014-ம் ஆண்டு டிசம்பரிலும் கென்யாவிற்குள் நுழைந்த அல் ஷபாப் போராளிகள் 36 முஸ்லிம் கற்குழித் தொழிலாளர்களைக் கொன்றிருந்தனர். 2015-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் அல் ஷபாப் அமைப்பினர் தமது தாக்குதல்களிலேயே கொடூரமான ஒரு தாக்குதலை வட கிழக்குக் கென்யாவில் உள்ள கரிஸ்ஸா பல்கலைக்கழக்த்தில் செய்திருந்தனர். அதில் இஸ்லாமியரல்லாத 147 பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். முகமூடி அணிந்த நான்கு அல் ஷபாப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கரிஸ்ஸாப் பல்கலைக்கழகத் தின் அறைகளுக்குள் அதிகாலை 5 மணியளவில் சென்று அங்குள்ள கிறிஸ்த்தவ மாணவர்களைக் கொன்றனர். எந்த ஒரு முன்னேற்பாடோ பாதுகாப்போ எமது தாக்குதல்களில் இருந்து எவரையும் பாதுகாக்க மாட்டாது என அல் ஷபாப் அமைப்பினர் அப்போது சூளுரைத்தனர். நைரோபியில் வெஸ்ற்கேற் கடைத் தொகுதியில் அல் ஷபாப் அமைப்பினர் செய்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் பங்கு பற்றினர். அந்தத் தாக்குதலின் காணொளியை அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களிடம் காட்டி மேலும் பல கடைத் தொகுதிகளில் தாக்குதல் செய்வதற்கு போராளிகள் தேவை எனப் பரப்புரை செய்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது.
யார் இந்த அல்-ஷபாப் அமைப்பினர்?
ஹரகட் அல்-ஷபாப் அல்-முஜாகிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெயருடைய அமைப்பை சுருக்கமாக அல்-ஷபாப் என அழைப்பர். அல்-ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்படும். மத ரீதியாக அல்-ஷபாப் அமைப்பு சவுதி அரேயாவின் வஹாப் வகை இசுலாமை தமது இறை நம்பிக்கையாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியம் எனப்படும் மதவாத அமைப்பின் இளைஞர் பிரிவில் இருந்து அல் ஷபாப் உருவானது. இதை அல் கெய்தா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்லப்பட்டதுண்டு. 2006-ம் ஆண்டில் இருந்து சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷஹாப் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. பின்னர் அமெரிக்க நிதியுதவியுடன் ஆபிரிக்க ஒன்றியப்படைகள் பல பிரதேசங்களில் இருந்து விரட்டினர். இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-ஷஹாப் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது அல் ஷபாப் அமைப்பில் ஒன்பதினாயிரம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அல் ஷபாப்பின் மீது அமெரிக்கா நேரடித் தாக்குதல்.
2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவினர் சோமாலியக் கடற்கரையில் இரவில் இரகசியமாகத் தரையிறங்கி அல் ஷபாப் போராளிகளின் நிலை ஒன்றின் மீது ஓரு ஈரூடகத் தாக்குதல் நடாத்தினர். இவர்களின் நகர்வை அல் ஷபாப் அமைப்பின் போராளி ஒருவர் அவதானித்து மற்றப் போராளிகளை உசார் படுத்தி விட்டார். இதில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கர்கள் தேடிச்சென்ற அல் ஷபாப் தலைவர் அஹ்மட் கொடேன் அகப்படவில்லை. இத்தாக்குதல் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த படியால் இடை நிறுத்தப்பட்டது. அமெரிக்கப்படையினர் 15 நிமிடச் சண்டையின் பின்னர் பின்வாங்கி விட்டனர். இருந்தும் அமெரிக்க தரப்பில் எந்தவித ஆளணி இழப்பும் ஏற்படவில்லை.
கவன ஈர்ப்புப் போர்
அல் ஷபாப் அமைப்பினர் ஆபிரிக்க மக்களின் கவனத்தைத் தம்பக்கம் ஈர்ப்பதற்கும் நிதி திரட்டுவதற்கும் அடிக்கடி தாக்குதல்களை நடாத்துகின்றனர். அடிக்கடி செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கின்றது. நிதி திரட்டலில் அவர்கள் அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா அமைப்பினருடனும் மக்ரப் பிராந்தியத்திற்கான அல் கெய்தா அமைப்பினருடனும் அவர்கள் போட்டி போட வேண்டி இருக்கின்றது. ஐந்த் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்தும் வட அமெரிக்காவில் இருந்தும் இளைஞர்கள் அல் ஷபாப்பில் இணைந்தனர். ஆனால் தற்போது அது குறைந்து பலர் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பில் பலர் இணைகின்றனர்.
ஐ எஸ்ஸின் பின்னால் பொக்கோ ஹரம்
2015 மார்ச் மாதம் நைஜீரியாவில் இருந்து அபுபக்கர் செக்கௌ தலைமையில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பு தாம் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக ஐ எஸ் அமைப்பினரும் ஒலி நாடா மூலம் பிரகடனப் படுத்தினர். நைஜீரியா, நிஜர், கமரூன் ஆகிய நாடுகள் இணைந்து பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராகத் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் பொக்கோ ஹரம் அமைப்பினர் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பொக்கோ ஹரம் அமைப்பினர் வலுவிழந்து விட்டவில்லை என அவர்கள் அண்மைக்காலங்களாக நடாத்தும் தாக்குதல்கள் சுட்டிக் காட்டுகின்றன. பொக்கோ ஹரம் அமைப்பின் வலுவின்மை என்பது அதன் ஒற்றுமை இன்மையாகும். மற்ற இஸ்லாமிய மதவாத அமைப்புக்களில் இல்லாத அளவிற்கு பல உட் பிரிவுகளும் பிளவுகளும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் இருக்கின்றன. பொக்கோ ஹரமினரின் நட்பை ஏற்றுக் கொண்ட ஐ எஸ் அமைப்பினர் அவர்களது தாக்குதல்களை எதியோப்பியா, தன்சானியா ஆகிய நாடுகளிற்கும் விரிவு படுத்தும் படி கூறினர்.
எடுத்த உறுதி மொழி
அல் ஷபாப் அமைப்பினர் அல் கெய்தா அமைப்பினருடன் இணைந்து செயற்படும் தமது விருப்பத்தை 2009-ம் ஆண்டு தெரிவித்திருந்தனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2012-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் அல் ஷபாப் அமைபினருக்கு பயிற்சிகளும் படைக்கலங்களும் புதிய தொழில்நுட்பங்களும் வழங்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் பல அல் ஷபாப் போராளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அல் கெய்தாத் தலைவர் அய்மன் அல் ஜவஹிரிக்குத் தமது கீழ்ப்படிவை உறுதி செய்வதாகத் தெரிவித்து அல் ஷபாப் அமைபினர் ஒரு காணொளிவை வெளியிட்டனர். அரபுக்களைக் கொண்ட அல் கெய்தா, ஐ எஸ் அமைப்பு போன்றவற்றிற்கு அரபுச் செல்வந்தர்களிடமிருந்து கிடைக்கும் நிதி உதவி போல் பொக்கோ ஹரமிற்கோ அல்லது அல் ஷபாப்பிற்கோ கிடைப்பதில்லை. இதனால் பொக்கோ ஹரம் எஸ்ஸிற்கும் அல் ஷபாப் அல் கெய்தாவிற்கும் தமது கரங்களை நீட்டிக் கொண்டனர்.
வளரும் ஐ எஸ்ஸும் தேயும் அல் கெய்தாவும்
அல் கெய்தா அமைப்புத் தேய்ந்து கொண்டும் ஐ எஸ் அமைப்பு வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் அல் ஷபாப் அமைப்பு ஐ எஸ் உடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து அல் ஷபாப் அமைப்பினரிடையே வலுத்து வருகின்றது. அமெரிக்க உளவுத் துறையினர் அல் கெய்தாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து அதன் தொடர்பாடல்களை முடக்கியிருக்கையில் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் தனது கிளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏற்கனவே அல் கெய்தாவுடன் இணைந்து கொள்வதாக உறுதி மொழி எடுத்த அல் ஷபாப் அந்த மத ரீதியான உறுதி மொழியை மீற முடியாததாக இருக்கின்றது. ஆனால் பொக்கோ ஹரம் அந்த மாதிரியான உறுதி மொழி எதையும் அல் கெய்தாவிற்குச் செய்யவில்லை. அல் ஷபாப்பின் அரசியல் பிரிவினர் அல் கெய்தாவிடம் அதிக பாசமும் அல் ஷபாப்பின் படைப் பிரிவினர் ஐ எஸ்ஸிடம் அதிக நாட்டமும் வைத்திருக்கின்றனர். அல் ஷபாப்பின் உறுப்பினரான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான அபு சல்மன் என அறியப்படும் ஷேக் ஹசன் ஹுசேய்ன் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு மத ரீதியான தடைகள் ஏதும் இல்லை என்றார்.
பிளவு பட்ட அல் கெய்தாஈராக்கிற்கான அல் கெய்தாவாக இருந்தவர்கள் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டுக் கொண்டு தமது பெயரை ஈராக்கிற்கும் சிரியாவிற்குமான இஸ்லாமிய அரசு எனப் 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெயர் மாற்றிக் கொண்டனர். அல் கெய்தா அமைப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வட அமெரிக்கா நாடுகளுக்கும் எதிரானதாக உள்ளது.ஆனால் ஐ எஸ் அமைப்பு சியா முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றது. அமெரிக்கா அடக்கப் பட்ட பின்னரே ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் படலாம் என்பது அல் கெய்தாவின் கொள்கை. ஆனால் ஐ எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு இஸ்லாமிய அரசைப் பிரகடனப்படுத்தி விட்டது.
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
ஆப்கானிஸ்த்தானில் செயற்படும் தலிபான், பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையுடன் இணைந்து செயற்படும் ஹக்கானி வலையமைப்பு மற்றும் இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சி மீள் நிலை நிறுத்தப்படவேண்டும் என்ற கொள்கையுடைய லக்சர் இ தொய்பா ஆகியவை நெருக்கமாக உள்ளன. சிரியாவில் இருந்து செயற்படும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பு அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாகும். இது ஐ எஸ் அமைப்புடன் அடிக்கடி மோதிக் கொள்வதுண்டு. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகவோ அல்லது பலஸ்த்தீனியப் போராளிகளுக்கு ஆதரவாகவோ இந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் காட்டும் அக்கறை போதாது என்ற குறையும் உண்டு. அல் கெய்தா அமைப்பு தனது போக்கை விரைவில் தனது நிதிவளம் படை வலு மற்றும் தாக்குதல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அல்லது அல் ஷபாப் போன்ற இணை அமைப்புகள் திசை மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment