சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைந்திருந்தார். ஆனால் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுப்பதை இரசிய அதிரபர் விளடிமீர் புட்டீன் தடுத்து விட்டார். சிரியா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக சவுதி அரேபியாவின் மீது இரசியா குண்டுகளை வீசும் என புட்டீன் இரகசியமாக எச்சரித்திருந்தார் எனச் சொல்லப்படுகின்றது. இரசியாவின் ஆசீர்வாதம் இன்றி அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்திருந்திருக்க மாட்டார் என விவாதிப்போரும் உண்டு. ஈரானின் அணுக் குண்டு உற்பத்திக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் புட்டீன் முட்டுக்கட்டையாக இருந்தார். இவற்றிற்கான பின் விளைவுகளை இப்போது இரசியப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது..
முற் கூட்டிய தாக்குதல்
இரசியா மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான தனது எரிவாயு விநியோகத்தைத் தடை செய்தால் அங்கு பெரும் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு. இரசிய எரிவாயு இன்றி மேற்கு ஐரோப்பியர் குளிரில் நடுங்க வேண்டியிருக்கும். அப்படி ஒன்றைச் செய்யும் அளவிற்கு இரசியப் பொருளாதாரம் வலுவானதாக இல்லாமல் பண்ண இரசியாவின் நாணயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதா என்ற ஐயமும் உண்டு.
இரசியாவின் இருண்ட செவ்வாய்
இரசியாவின் ரூபிள் நாணயம் மசகு எண்ணெய் விலையுடன் இணைந்து விழுந்து கொண்டிருக்கின்றது. ரூபிளின் வீழ்ச்சியால் இரசியாவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரசிய மக்கள் பொருட்கள் மேலும் விலை அதிகரிக்க முன்னர் விழுந்தடித்துப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். செல்வந்தர்கள் தம்மிடமுள்ள ரூபிளை விற்று டொலர்களையும் யூரோக்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 2014 டிசம்பர் 16-ம் திகதி செவ்வாய்க் கிழமை இரசிய மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக அதிகரித்தது. அடுத்த நாள் புதன் கிழமை இரசிய வங்கி தனது தொடர் நடவடிக்கைகளால் ரூபிளின் பெறுமதியைச் சற்று நிமிர்த்தியது. புதன்கிழமை ரூபிளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இரசிய மைய வங்கியுடன் இரசிய நிதி அமைச்சும் இணைந்து கொண்டது. நிதியமைச்சும் தன்னிடம் உள்ள வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்களை விற்று ரூபிளை வாங்கியது. இந்த ரூபிள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தான் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நாணயங்களைச் செலவிடத் தயாராக இருப்பதாக இரசிய நிதி அமைச்சு அறிவித்தது. 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டொலருக்கு 33 ரூபிள்கள் என்றிருந்த பெறுமதி தற்போது 66 ரூபிளாக மாறியுள்ளது. இரசியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவங்களின் விற்பனை நிலையங்கள் டிசம்பர் 16-ம் திகதி செவ்வாய்க் கிழமை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன விலைக்கு தமது பொருட்களை விற்பது என்ற குழப்ப நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இரசியாவின் இருண்ட 2014
2014-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் 16-ம் திகதி வரை இரசியாவின் நாணயமான ரூபிள் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக 52.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணம் மசகு எண்ணெய் விலை அதே காலப்பகுதியில் 46.1 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இரசியப் பொருளாதாரத்தில் சிறப்பு அம்சம் அதனிடம் உள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு. ரூபிளின் பெறுமதியைப் பாதுகாக்க இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணியில் 20 விழுக்காட்டை இழந்துள்ளது. இரசியா வெளிநாட்டு நாணயங்களை விற்று ரூபிளை வாங்கி அதன் ரூபிளில் பெறுமதியை அதல பாதாளத்திற்கு செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக கையிருப்பு 499பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்போது அது 400பில்லியன் டொலர்களாகக் குறைந்துவிட்டது. அமெரிக்க மைய வங்கியின் ஆளுநர் 2015-ம் ஆண்டு அமெரிக்காவில் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று சொன்னது இரசியாவின் நாணயத்தைப் பொறுத்தவரை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. இரசிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. இரசியாவின் மொத்தப் பங்குகளின் பெறுமதி (equity market's total capitalization) $345.9 bi647.4 பில்லியன் டொலரில் இருந்து 345.9 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
திருப்பெருந்துறையில் உதை
இரசியாவில் ஒரு நகைச்சுவை ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன், ரூபிள், மசகு எண்ணெய் விலை ஆகிய மூன்றிற்கும் உள்ள ஒற்றுமை என்ன? மூன்றும் 2015-ம் ஆண்டு 63ஐ அடையும். அதாவது 2015இல் புட்டீனின் வயது 63 ஆகும், டொலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு 63 ஆகும், உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை 63 டொலர்களாகும். எண்ணெய் ஏற்று மதியில் அதிகம் தங்கி இருக்கும் 2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் தாக்குப் பிடிப்பதற்கு மசகு எண்ணெயின் விலை தொண்ணூற்றி ஒன்பது டொலர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தற்ப்போது அந்த நகைச்சுவையிலும் மோசமாகிவிட்டது. டிசம்பர் 16-ம் திகதி மசகு எண்ணெய் விலை அறுபது டொலர்களுக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் டொலருக்கு எதிரான ரூபிளின் பெறுமதி எண்பதையும் தாண்டி இருந்தது. இரசியப் பொருளாதாரம் எரிபொருள் உற்பத்தித் துறையில் பெரிதும் தங்கி இருக்கின்றது. இந்த எரிபொருள் பெரும் துறையின் மீது அடித்தால் இரசியாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இரசிய அரசும் அதன் பெரு நிறுவனங்களும் வாங்கிய வெளிநாட்டுக் கடன்களுக்கான மீளளிப்புச் சுமை தற்போது இரு மடங்காகிவிட்டது எனச் சொல்லலாம்.
புட்டீனின் பரிவாரங்கள் மீது உதை
இரசியாவின் அதிபர் விளடிமீர் புட்டீன், அவரது நண்பர் குழாம், அவர்களது தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை பொருளாதார ரீதியில் பாதிக்கக் கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. இவர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் வகையில் பொருளாதாரத் தடைகளும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. உலக நிதிச் சந்தை இரசியப் பொருளாதாரத்தின் மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யப்படுகின்றன. இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது புட்டீனின் ஆதரவுத் தளமான இரசியப் சிலராண்மை முதலாளிகள் (oligarchs) பாதிப்படைவார்கள். இரசியாவின் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளான வொட்கா போன்ற மதுபான வகைகளின் உலக விநியோகம் ஒரு சில முதலாளிகளின் கைகளில் இருக்கின்றன. இவர்கள் திட்டமிட்டு உலகச் சந்தையில் இரசிய மதுபானங்களின் விலைகள் விழாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.
இரசியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்
எரிபொருள் விலை வீழ்ச்சியை ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி சமாளிக்கும் என முதலில் விளடிமீர் புட்டீன் நம்பினார். தனது நாட்டு மக்களையும் நம்ப வைத்தார். ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியாவில் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது. உலகெங்கும் பல நாடுகள் தமது நாடில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இரசியாவில் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. இரசியாவில் பணவிக்கம் 9விழுக்காட்டிலும் அதிகமாக உள்ளது. 2014-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் 4.5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் 2015-ம் ஆண்டு 5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் இரசிய மைய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
இரசியாவின் அடுத்த நடவடிக்கை
2014-12-18 வியாழக்கிழமை விளடிமீர் புட்டீன் வழமையான ஆண்டு இறுதி உரையை நாட்டு மக்களுக்காக நிகழ்த்தினார். அதில் அவர் தன்னை ஒரு மச்சோ மான் ஆகக் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. அவர் தனது உரையில் உக்ரேன் விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்ய மாட்டார் என்ற சமிக்ஞையை வெளிவிட்டார். அவரது உரையில் எந்த வித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை.
அடங்காத இரசியா
இரசியா தனது அடுத்த நடவடிக்கையாக நாட்டில் இருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்யலாம். ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற செய்தி கசியும் முன்னரே நாட்டிலிருந்து பெருமளவு மூனதனம் வெளியேறிவிடும் என்கின்றனர். இதற்கு மலேசியாவில் நடந்தவற்றை உதாரணத்திற்குக் காட்டுகின்றனர். ஆனால் இரசியர்கள் தமது நாணயம் உலகச் சந்தையில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். புட்டீன் நாட்டு மக்களுக்கான தனது உரையில் வீழ்ச்சியடைந்த ரூபிள் இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கதிருக்க எல்லா உதவிகளும் வழங்கப்படும் என உறுதி உரைத்தார். கரடி அமைதியாக தன் பாட்டிற்கு தேனையும் பழங்களையும் உண்டு கொண்டிருந்தால் எதிரிகள் அதைச் சும்மா விடமாட்டார்கள் அதைச் சங்கிலியால் கட்டி அதன் பற்களையும் நகங்களையும் புடுங்குவார்கள் என்றார் புட்டீன். இரசியாவிடமிருந்து சைபீரியாவைப் பறிக்க மேற்கு நாடுகள் முயல்கின்றன என்றார் புட்டீன்
பரவலான பாதிப்பு
பொருளாதார நிபுணர்களின் கருத்துப் படி எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியாவின் பொருளாதாரத்தைப் பரவலாகப் பாதித்துள்ளது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை வீழ்ச்சியடையும் போது அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் துறை மட்டுமே பாதிக்கப்படும். இரசிய ஏற்றுமதி வருவாயில் 68 விழுக்காடு எரிபொருள் மூலம் இரசியாவிற்|குக் கிடைக்கின்றது. அதன் பாதீட்டில் உள்ள வருவாயில் அரைப்பங்கு எரிபொருள் மூலம் கிடைக்கின்றது. இரசியப் பொருளாதாரம் ஏற்கனவே ஊழலாலும் திறனற்ற நிர்வாகத்தாலும் சிறப்பாகச் செயற்படாமல் இருந்தது. அத்துடன் இரசியா தனது ரூபிள் நாணயத்தை செயற்கையயக அதிக மதிப்புடன் வைத்திருந்தது. இரசியா தனது நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தனது அந்நிய நாட்டுச் செல்வாணிக் கையிருப்பை பாவித்தால் அதுவே இரசியாவின் நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கவும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு ஒரு நாணயத்தின் பெறுமதிக்கு ஆதாரமான ஒன்றாகும். இரசியாவின் கடன்படு திறனும் குறைய வாய்ப்புண்டு. இரசியாவின் வங்கிகள் ஒன்றுக்கு ஒன்று குறுங்காலக் கடன்கள் வழங்கத் தயங்குகின்றன. இதனால் வங்கிகளுக்கு இடையிலான கடனுக்கான வட்டி விழுக்காடு 25 ஆக உயர்ந்துள்ளது. வங்கிகளின் இந்த மிகையான வட்டி விழுக்காடு அவற்றின் வாடிக்கையாளர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
முன்னை இட்ட தீ உக்ரேனிலே
இரசியா மத்திய கிழக்கில் செய்யும் மிரட்டல்களுக்கு பதிலடியாக முதலில் உக்ரேனை இரசியப் பிடியில் இருந்து விடுவிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. உக்ரேனின் பாராளமன்ற உறுப்பினர்களை இரசியாவிற்கு எதிராகத் திருப்ப அமெரிக்கா பத்து பில்லியன் டொலர்களைப் பாவித்தாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் உலகின் தற்போது உள்ள அரச தலைவர்களில் மிகவும் திறமை மிக்கவராகக் கருதப்படும் விளடிமீர் புட்டீன் தனது காய்களை துரிதமாகவும் தீவிரமாகவும் நகர்த்தினார். இதனால் உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியா 2014- மார்ச் மாதம் 18-ம் திகதி இரசியாவுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பிரிவினைவாதக் கிளர்ச்சி உருவானது. உக்ரேனில் புட்டீனின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மார்ச் மாதம் 6-ம் திகதி இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தன.
அமெரிக்காவுடன் கை கோர்த்த சவுதி அரேபியா
இரசியாவை வீழ்த்த உலக எரிபொருள் விலையை விழச்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியாவும் கை கொடுத்தது. சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா எரிபொருள் விலையை விழச் செய்வதால் சியா முசுலிம் நாடான இரானை வலுவிழக்கச் செய்யலாம் என உறுதியாக நம்பியது. சவுதி அரேபியாவைப் போலவே மற்ற சுனி இசுலாமிய நாடுகளும் தமக்கு மூக்குப் போனாலும் ஈரானுக்கு சகுனம் சரியில்லாமல் போனால் சரி என்ற நிலையில் இருக்கின்றன. 2014 டிசம்பர் 10-ம் திகதி சவுதி எரிபொருள் துறை அமைச்சர் தமது நாடு நாள் ஒன்றிற்கும் 97 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்தார். எரிபொருளுக்கு உலகில் இருக்கும் தேவையைப்பற்றித் தான கவலைப்படவில்லை என்றார். ஈரானிய அதிபர் இதை மறைமுகமாகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். 2006-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து ஈரானிற்கு நட்டம் ஏற்பட சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து 2009-ம் ஆண்டு ஒரு பீப்பாய் எண்ணெய் விலையை $147இல் இருந்து $33இற்கு விழ வைத்தது.
தேவைக்கு மேலான உற்பத்தி
சிரிய உள்நாட்டுப் போர், லிபியாவில் தொடரும் மோதல்கள், ஈராக்கில் உள்நாட்டுப் போர், ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகியவற்றையும் தாண்டி அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உலக எரிபொருள் விலையைத் தொடர்ந்து விழ வைத்துக் கொண்டிருக்கின்றன. வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட பெருமளவு ஷேல் எரிபொருள் இருப்பும் ஒபெக் நாடுகளின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும், பக்கவாட்டில் துளையிடும் தொழில் நுட்ப வளர்ச்சியும், எரிபொருள் உற்பத்தித் துறையில் மேற்கொண்ட அதிகரித்த முதலீடுகளும் உலக எரிபொருள் வழங்கலை அதிகரித்துக் கொண்டே போகின்றன. சீனா இந்தியா உட்படப் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வேகங்கள் குறைந்தமை உலக எரிபொருள் தேவையைக் குறைத்தன. உலக எரிபொருள் உற்பத்தி உலக எரிபொருள் தேவையிலும் பார்க்க அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது அடுத்த ஆண்டு ஒரு பீப்பாய் 33 டொலர்கள் வரை விழலாம் எனப்படுகின்றது.
வட துருவத்திற்கு உரிமை கொண்டாடும் டென்மார்க்
வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் வட துருவத்தைக் கொண்ட ஆட்டிக் பனிக்கடலில் இரசியாவிற்குப் போட்டியாக டென்மார்க்கும் கனடாவும் உரிமை கொண்டாட்டப் போட்டியில் இறங்கிவிட்டன. 56 இலட்சம மக்களைக் கொண்ட டென்மார் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான இரசியாவிற்குப் போட்டியாக இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளின் ஆதரவு நிச்சயம் பின்புலமாக இருக்க வேண்டும். ஒன்பது இலட்சம சதுர் கிலோ மீட்டர் பனிக்கடற்பரப்ப்பு தன்னுடையது என டென்மார்க் ஐக்கிய நாடுகள் சபையில் உரிமை கோரியுள்ளது. இதே வேளை இரசியாவின் செய்மதி நாடான கியூபாவுடன் அமெரிக்கா தனது முரண்பாடுகளை நீக்கி நட்பை வளர்க்கவும் முயற்ச்சி செய்கின்றது. மத்திய அமெரிக்கக் கண்டத்திலும் எரிபொருள் அரசியல் வேலை செய்கின்றது. கியூபாவிற்கு நிதி உதவி செய்யும் நெருங்கிய நட்பு நாடான வெனிசுவேலா எரிபொருள் விலை அதிகரிப்பால் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துத் கொண்டிருக்கின்றது. இதனால் கியூபா தனது பொருளாதாரத்தைக் காப்பாற்ற மாற்று வழிகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
ஜேர்மனியைப் பாதிக்கும் இரசியப் பொருளாதார வீழ்ச்சி
இரசியப் பொருளாதாரம் உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாகும். இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அதனுடன் இணைந்து பல நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிப்படையும். இரசியாவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யும் ஜெர்மனியின் பொருளாதாரம் முதலில் பாதிப்படையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஜேர்மனியப் பொருளாதாரம் பாதிப்படையும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படையும். இரசியாவின் ஏற்றுமதியில் 70 விழுக்காடு எரிபொருள் ஆகும். உலக மொத்த உற்பத்தியில் இரசியாவின் உற்பத்தி மூன்று விழுக்காட்டிலும் குறைவானதே.
அசையாத புட்டீனின் செல்வாக்கு
1999-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால் அப்போதை அதிபர் பொறிஸ் யெல்ஸ்ரின் பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த புட்டீன் இரசியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றார். இதை வைத்து உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தையும் மீளக் கட்டியெழுப்ப புட்டீன் முயல்கையில் ஐக்கிய அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இரசியாவை ஒரு மோதல் நிலை உருவானது. உக்ரேனின் கிறிமியாவை இரசியாவுடன் இணைத்ததில் இருந்து இரசியாவில் புட்டீனுக்கான மக்கள் ஆதரவு 85 விழுக்காட்டிலும் மேலாக அதிகரித்தது. இரசியாவிற்குப் பொருளாதார நெருக்கடிகள் கொடுப்பதன் மூலம் புட்டீனின் செல்வாக்கை சரிக்கலாம் என அவரது எதிரிகள் நம்புகின்றனர். ஆனால் இப்போதும் 80 விழுக்காடு இரசியர்கள் புட்டீனை ஆதரிக்கின்றனர். உலகில் இந்த அளவு செல்வாக்குடன் ஆட்சி செய்பவர்கள் மிகக் குறைவு. புட்டீன் மீது அதிருப்தி கொண்டவர்கள் உக்ரேன், ஜேர்ஜியா, மோல்டோவா ஆகிய நாடுகளிற்குத் தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். உக்ரேனில் ஒரு நாடு கடந்த அரசை இவர்கள் நிறுவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பதினைந்து நாடுகளாக புட்டீனை எதிர்த்து வரும் ஒல்கா குர்னொசொவா என்னும் பெண் இதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வாதாக நமபப்படுகின்றது. இவர் உலகெங்கும் உள்ள புட்டீன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பதாகவும் நம்பப்படுகின்றது. இவர்களை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் வசமாக்கலாம் அல்லது ஏற்கனவே இவர்கள் அவர்கள் வசம் இருந்து செயற்படலாம். ஆனால் புட்டீனால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ஒல்கா குர்னொசொவா புட்டீனைப் பதவி இறக்கும் வாய்ப்பு 5 விழுக்காடு மட்டுமே என்கின்றார். புட்டீனின் காலை ஒடிக்கும் நிலை அண்மையில் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment