Sunday, 14 December 2014

அசிங்கப்பட்டாண்டா அமெரிக்காக்காரன்: சிஐஏயின் சித்திரவதை பற்றிய அறிக்கை.

உலகெங்கும் சிஐஏயின் வதை முகாம்கள்
ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏஇன் ஊழியர்கள் தம்முடன் பணிபுரிபவர்கள், தமது மேலாளர்கள், அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு தமது சித்திரவதைகள் பற்றிப் பொய்கள் கூறி வந்தமை இப்போது அம்பலமாகியுள்ளது. பயங்கரவாதிகள் எனக் கருதப்பட்டு சிஐஏயிடம் அகப்பட்டவர்களின் காதில் கைத்துப்பாக்கியும் உடலில் சுவரில் துளையிடு கருவியையும் (Cordless Drill) வைத்து மிரட்டப்படுவார்களாம்.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழு கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை செய்து தயாரித்த ஆறாயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட அறிக்கையில் பல தவிர்க்கப்பட்டு 528 பக்கங்கள் கொண்ட அறிக்கை மட்டும் 2014-11-09-ம் திகதி வெளியிடப்பட்டது. ஒரு நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 2001-09-11-ம் திகதி நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து அமெரிக்க அரசின் "பயங்கரவாத" எதிர்ப்பு நடவடிக்கையை ஒட்டி சிஐஏ உலகெங்கும் பிடித்த "பயங்கரவாதிகளை" விசாரித்த முறைகள் தொடர்பாக இந்த விசாரணை நடாத்தப்பட்டது.

அப்பாவிகளையும் கொடுமை செய்தனர்
சிஐஏ விசாரித்த அல்லது சித்திரவதை செய்த 119 பேர்களில் குறைந்தது 26 பேராவது ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. சிஐஏயினர் தமது சித்திரவதைகளுக்கு மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் (enhanced interrogation techniques) என்ற கௌரவப் பெயரைச் சூட்டியிருந்தனர். ஆகக் குறைந்தது இருபது பேரையாவது அமெரிக்க அரசின் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் தெரியாமல் சிஐஏயினர் கைது செய்து வைத்திருந்தமையும் அம்பலமாகியுள்ளது மூதவையின் புலனாய்வுக்குழுவின் அறிக்கைக்குப் சிஐஏ ஒரு 112 பக்கங்களைக் கொண்ட பதிலறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்ததை ஒப்புக் கொண்ட சிஐஏ அமெரிக்க அரசிற்கோ, அதிகாரிகளுக்கோ அல்லது மக்களுக்கோ பிழையான தகவல்கள் கொடுத்ததை மறுத்துள்ளது. ஆனால் உண்மையில் நடந்த சித்திரவதைகள் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல் களிலும் பார்க்க மிக மோசமானதாகவே இருந்தன. அறிக்கை வெளிவிட முன்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை உலகெங்கும் உள்ள தனது இராசதந்திரிகளை கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை விட்டிருந்தது.

மலவாசல் மூலம் உணவும் நீரும் ஊட்டப்பட்டனர்.
மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் மூலம் விசாரிக்கப்பட்ட கைதிகளைப் பட்டினி போட்டு விட்டுப் பின்னர் அவர்களுக்கு மலவாசல் மூலமாக உணவு உட்செலுத்தப்பட்டது. அவர்களை நீண்ட நாட்கள் தண்ணீர் பருகாமல் வைத்திருந்து விட்டுப் பின்னர் நீர்பற்றின்மை ஏற்படாதிருக்க மலவாசல் மூலம் நீர் உட்செலுத்தப்படும். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த சிஐஏ அதிகாரிகள் கைதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இது பின்பற்றப்பட்டது என்றார். அமெரிக்க முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் டிக் சேனி மலவாசல் மூலம் உணவூட்டப்பட்டமை மருத்துவ நோக்கங்களை மட்டுமே கொண்டது, அது சித்திரவதை அல்ல என்றார்.

Water Boarding  என்னும் நீர்ப்பலகை முறைமை சித்திரவதையே
தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Water Boarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. இந்தச் சித்திரவதையைப்பற்றி சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்பதுதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல. Water Boarding Interrogation Techniques மூலம் விசாரிப்பது ஒரு சித்திரவதை அல்ல என சிஐஏ சொல்லி வந்தது. ஆனால் மூதவையின் புலனாய்விற்கான குழுவின் அறிக்கை  இது ஒரு சித்திரவதையே எனச் சொல்கின்றது. இவ் விசாரணைக்கு உட்பட்டவர் வயால் நுரைதள்ளியபடி துடிதுடித்தமையை அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸில் உள்ள சிஐஏ சித்திரவதை முகாமில் Water Boarding மூலம் விசாரிக்கப்பட்ட கத்தோகிக்க குரு ஒருவர் இறந்துள்ளார். இதற்கான எந்த நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.  சில கைதிகளுக்கு அவர்களின் தாயாரின் கழுத்து அறுக்கப்படும் என்றும் அவர்களின் பிள்ளைகள் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. சிலர் பிணப்பெட்டியிலேயே நீங்கள் வெளியே செல்வீர்கள் எனவும் மிரட்டப்பட்டனர். பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும் நடைபெற்றன. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலிட் ஷேக் மொஹமட் 183 தடவை நீர்ப்பலககச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

கருங்குகை
கைதிகளை கோபால்ற் எனப்படும் இருட்டறைக்குள்  தொடர்ந்து 180 மணித்தியாலங்கள் நித்திரையின்றி மிகவும் உரத்த ஓசையில் இசைகளை எழுப்பி வைத்திருந்து பின்னர் விசாரிப்பது வழக்கம். ஆடையின்றி நிலத்துடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி குளிர்க்காய்ச்சலால் உயிர் விட்டார். கால் முறிந்தவர்கள் கூட தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்த்தானில் உள்ள ஒரு சிஐஏயின் "விசாரணை நிலையம்" இருட்டுச் சிறை என்றும் உப்புக் குகை என்றும் குறியீட்டுப் பெயர்களால் கைதிகளால் அழைக்கப்பட்டது. வேறு சில விசாரணை அறைகளில் மிக மிக அதிக அளவில் ஒளிபாய்ச்சப்பட்டு கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்படுவர். போலாந்தில் சிஐஏயின் கருங்குகை ஒன்று இருந்ததை போலாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அல் கெய்தாவினருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு போலாந்து முதலில் ஒத்துழைக்க மறுத்தது. பின்னர் அமெரிக்காவிடம் இருந்து பெரும் தொகைப்பணம் பெற்றுக் கொண்டு போலாந்து ஒத்துழைத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.
சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐஏ தனது சித்திரவதைச் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்க James Mitchell and Bruce Jesser ஆகிய இரண்டு மனோதத்துவ நிபுணர்களை பணிக்கு அமர்த்தி இருந்தது. அவர்களுக்கு எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வழங்கப்பட்டது. இந்த இரு மனோதத்துவ நிபுணர்களுக்கும் எதிராக எந்த வித சட்ட நடவடிக்கைகளையும் எவரும் எடுக்காதிருக்க உரிய காப்புறுதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்-பாக் பிரிவு
அல் கெய்தாவின் முக்கிய களம் ஆப்கானிஸ்த்தானிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசமாகும். இப்பிரதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ இல்லை. 9-11இன் பின்னர் சிஐஏயின் பிஏடி எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளன.

மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழு சிஐஏயின் சித்திரவதைகளை மட்டுமே விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. ஆளில்லாப் போர் விமான நடவடிக்கைகள் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்
அல் கெய்தாவினருக்கு எதிரான சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் வேறு சில செய்திகள் கூறுகின்றன. பின் லாடனைப் பிடித்துக் கொல்லப் போன அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மனைவி தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பின் லாடனைக் கொன்று பிடித்தனர்.

சிஐஏயிற்கு பாராட்டு மழை
சிஐஏ தனது சித்திரவதை விசாரணையான மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் மூலம் அமெரிக்க மக்களை அழிவில் இருந்து பாதுகாத்ததாக முன்னாள் சிஐஏ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிஐஏயைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது சிஐஏ எனப் பாராட்டியிருந்தார். மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் பாவிக்கக அனுமதி வழங்கியவர் ஜோர்ஜ் புஷ் ஆகும். குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சிஐஏ தவறிழைத்தமையை ஒத்துக் கொள்ளுவதுடன் சிஐஏ அமெரிக்கர்களைப் பாதுகாத்தது என்றும் பாராட்டுகின்றார். கடந்த 13 ஆண்டுகளாக அல் கெய்தாவை வலுவிழகக்ச் செய்ததில் சிஐஏ வெற்றிகண்டது என்றார் ஒபாமா.

அல் கெய்தாவின் பதில்
சிஐஏயிடம் அகப்பட்டால் அதன் சித்திரவதைகளை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாக அல் கெய்தா அமைப்பினர் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு கைநூலாக வெளியிட்டுள்ளனர். அவர்கள் இரகசியமாகப் பேணிய இந்த ஆவணம் பிரித்தானிய உளவுத்துறையிடம் அகப்பட்டுள்ளது.

ஐஎஸ் திவிரவாதிகள் பரவில்லை என்கின்றனர்
வேறு உளவுச் செயற்பாடுகள் மூலம் கிடைத்த தகவல்களை தமது மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பம் மூலம் பெற்றதாக சிஐஏ பொய்யான தகவல்கள் வழங்கியமையும் அம்பலமாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிஐஏயின் சித்திரவதைகள் மூலம் காத்திரமான தகவல்கள் ஏதும் பெறப்படவில்லை என்றும் எந்த ஒரு தாக்குதலையும் தடுக்கக் கூடிய தகவல்கள் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. தமது சித்திரவதை விசாரணையை நியாயப் படுத்த இப்பொய்கள் சொல்லப்பட்டன. சிஐஏயின் சித்திரவதை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையைப் பார்க்கும் போது கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவரைக் கொல்லும் இசுலாமியத் தீவிரவாதிகளின் செய்கைகளிலும் பார்க்க சிஐஏயின் சித்திரவதைகள் மோசமானவை எனத் தோன்றுகின்றன. அமெரிக்க மூதவை உறுப்பினரான ஜோன் காஸ் இசுலாமியத் தீவிரவாத அமைப்பான ஐ. எஸ் தனது சித்திரவதை தொடர்பான அறிக்கையை வெளிவிடுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்..

பயங்கரவாத ஒழிப்பு என்பது எல்லா நாடுகளிலும் போர்க் குற்றமே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...