Monday, 22 September 2014

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் ஜப்பானும்

மந்த நிலையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஜப்பானியப் பொருளாதாரம்.
உக்ரேன் விவகாரத்தால் இரசியாவிற்கு எதிராக வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதற்கட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தன. அப்போது ஜப்பான் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அமெரிக்காவுடனான கேந்திரோபாய உறவுக்கும் இரசியாவுடனான இராசதந்திர உறவிற்கும் இடையில் ஒரு தந்திரமான தெரிவை ஜப்பான் செய்தது. புவிசார் அரசியலா பொருளாதார வளர்ச்சியா என்ற இரு முனைகளுக்கு நடுவில் ஜப்பான் அகப்பட்டுள்ளது

2014 ஓகஸ்ட் மாதம் இரசியாவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடைகள் கிறிமியாவுடன் தொடர்புள்ள இரசியாவின் சில நிறுவனங்களுக்கும்40 பணமுதலைகளுக்கும் எதிரானதாக இருந்தது. அப்போது ஜப்பானின் நிலை பற்றி இப்படிக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது:
  • “Japan needs to show it shares the same values as the West, but it also wants to keep an opening with Russia.”
2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட தடைகள் இரசியாமீது பாதிப்பு ஏற்படுத்தாத படியால் மேலும் சில  பொருளாதாரத் தடைகள் இரசியாமீது ஐக்கிய அமெரிக்காவாலும் அதனது மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளாலும் கொண்டு வரப்பட்டன. இதில் முக்கியமானது இரசியா மேற்கு நாட்டு நிதிச் சந்தையில் இருந்து நீண்டகாலக் கடன்களையோ முலதனங்களையோ பெறுவதைத் தடுப்பது. இதன் மூலம் சீனாவிற்கு இரசிய எரிவாயு குழாய்கள் மூலம் விநியோகிக்கும் திட்டத்திற்கான நிதி கிடைப்பதைத் தடுக்க முயலப்படுகின்றது. மேலும் இரசியாவிற்கு படைக்கலன்கள் தொடர்பான ஏற்றுமதியும் எரிபொருள் அகழ்வு தொடர்பான தொழில்நுட்ப ஏற்றுமதியும் தடைசெய்யப்பட்டுள்ளன. இரசியாவின் எரிபொருள் நிறுவனம் காஸ்புறோம் மீதும் அதன் கிளை நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட், ரான்ஸ்நெஃப்ட், காஸ்புறோம்நெஃப்ட் ஆகியவற்றின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நியூட்டனின் மூன்றாம் விதி.
இரசியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் இரசியா மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை இரசியாமீது பொருளாதாரத் தடை விதிக்கும் நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.  2013-ம் ஆண்டு ஜேர்மனியின் இரசியாவிற்கான ஏற்றுமதி 51 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானதாகும். அத்துடன் ஜேர்மனியில் எரிபொருள் தேவையின் 30 விழுக்காடு இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. இந்த இரண்டும் ஜேர்மனியப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இரசியாவிற்கான ஏற்றுமதித் துறை ஜேர்மனியில் நான்கு இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொன்டிருக்கின்றது.  ஐரோப்பிய ஒன்றியத்தின் இரசியவுடனான வர்த்தகம் 270 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். இரசியாவும் பதிலடியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்க நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யும் விவசாயப் பொருட்களுக்குத் தடைவ் விதித்தது. இதற்கான மாற்றீடாக சீனா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகளை இரசியா அதிகரித்தது.

ஜப்பானிய இரசிய வர்த்தகம்
ஜப்பானின் வர்த்தகத்தில் மிகப்பெரும் பகுதி இரசியாவுடன் நடைபெறுகின்றது. அத்துடன் சீனாவின் மிரட்டலைச் சமாளிக்க ஜப்பனிற்கு அமெரிக்காவின் உறவு அவசியம். ஜப்பான் தனது வெளிப்பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. அதே வேளை கடந்த 30 ஆண்டுகளாகத் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜப்பானியப் பொருளாதாரம் உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவிற்கான ஏற்றுமதி அவசியமாகின்றது. இரசியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டால் ஜப்பானிய மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.2 விழுக்காடு வீழ்ச்சியடையும். இது ஜப்பானைப் பொறுத்தவரை பெரிய இழப்பாகும்.

அபேயும் புட்டீனும்
2014-08-21-ம் திகதி ஜப்பானியத் தலைமை அமைச்சரும் சின்ஷோ அபேயும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒரு உச்சி மாநாட்டை நடத்த ஒத்துக் கொன்டுள்ளனர்.  உக்ரேன் விவகாரத்திற்கு முன்னர் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்ஷோ அபே இரசியாவுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்புக்குத் திட்டமிட்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானின் நிலங்களை இரசியா அபகரித்திருந்தது. நான்கு தீவுகளைக் கொண்ட ஒரு நிலப்பரப்பானது இரசியாவில்  South South Kurils என்றும் ஜப்பானில் வட நிலப்பரப்பு என்றும் அழைக்கப்படும். இரசிய ஜப்பானிய உறவில் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.  அவை தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த‌ முறுகல்களை தீர்க்கவும் அபே திட்டமிட்டிருந்தார். அண்மையில் இத் தீவுக் கூட்டங்களில் இரசியா செய்த படை ஒத்திகையை ஜப்பான் கடுமையாக ஆட்சேபித்திருந்தது. இந்தப் படை ஒத்திகை ஜப்பான் 2014‍ம் ஆன்டு ஓகஸ்ட் மாதம் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டு வந்த பொருளாதாரத் தடையை ஜப்பான் ஒத்துழைத்தமைக்கு எதிரான இரசியாவின் பதிலடியாகும்.

வெறும் கையுடன் திரும்பிய உக்ரேன் அதிபர்.
அமெரிக்காவிற்குப் பயணம் செய்த உக்ரேன் அதிபர் பெட்றொ பொறொஷெங்கோ படைக்கலன்கள் ஏதும் வழங்காமல்  ஒரு 53 மில்லியன் டொலர் பெறுமதியான பொதியை மட்டும் கொடுத்து அனுப்பினார் பராக் ஒபாமா. இதில் 46 மில்லியன் பெறுமதியானவை தாக்குதல்களுக்குப் பயன்படுத்த முடியாத படையினரின் கவச ஆடைகள், தொலைநோக்கிகள், முதலுதவிப் பொருட்கள் அடங்கும். எஞ்சிய 6 மில்லியன்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களாகும்.

புட்டீனிற்கான எதிர்ப்பலைகள்    
இரசியாவில் ஒரு பொருளாதார நெருக்கடியை  ஏற்படுத்தி அதன் மூலம் புட்டீனிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து இரசியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதே மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையின் நோக்கமாகும். ஆனால் முதலாவது பொருளாதாரத் தடை கொண்டு வந்த பின்னர் இரசியாவில் புட்டீனின் செல்வாக்கு உயர்ந்தது.  இரசிய மக்கள் இரசியாவை மாஃபியாக்களின் கைகளில் இருந்து மீட்டு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர் என நம்புகின்றனர். இரண்டாவது கட்ட பொருளாதாரத் தடையின் பின்னர் இரசியால் சிறு எதிர்ப்பலைகள் உருவானது. இரசியாவின் ஆட்சி அதிகாரமும் அதன் பொருளாதாரமும் Oligarch எனப்படும் சிலராணமை பணக்காரர்களின் கைகளிலேயே இருக்கின்றது. புட்டீனும் இவர்களில் ஒருவர். புட்டீன் உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவர். இரசியாமீதான் பொருளாதாரத் தடை இந்த சிலராணமை பணக்காரர்களை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றது. இவர்களில் ஒருவரான விளடிமீன் யெவ்டுஷெங்கோ புட்டீனிற்கு எதிராகத் திரும்பியதால் அவரை புட்டீன் கைது செய்துள்ளார். இவர் இரசியாவின் முன்னணிச் செல்வந்தர்களில் ஒருவராவர். இதற்கு எதிராக இரசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் புட்டீனிற்கு முறைப்பாடு செய்துள்ளார். புட்டீன் உக்ரேனில் தலையிட்டமைக்கு எதிராக இரசிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. புட்டீன் வலுவிழக்கும் இரசியப் பொருளாதாரத்தால் உள்நாட்டின் தனக்குப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே உக்ரேனை ஆக்கிரமித்தார் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

வலுவிழந்த உக்ரேன்
படைத்துறை ரீதியில் உக்ரேனால் இரசியக் கரடிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது. உக்ரேனைப் படைத்துறை ரீதியில் பலப்படுத்தாமல் இரசியாவிற்கு எதிராக வெறும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதால் மட்டும் இரசியாவை அடக்க முடியாது. இரசியா மீதான பொருளாதரத் தடையின் மறுதாக்கம் பொருளாதாரத் தடைவிதிப்பவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...