Tuesday 27 May 2014

மோடியின் அமைச்சரவைத் தேர்வு கூறுவது என்ன?

மோடி          ராஜ்நாத்,           அருண்,        சுஸ்மா
மோடியின் தலைமையில் 24 அமைச்சர்களும்(Cabinet Ministers), 10 இணை அமைச்சர்களும் (Independent Minister of State)  12 துணை அமைச்சர்களும் (Minister of State) இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் அமைச்சரவையில் (Cabinet) அதிகப்பேர் இடம் பெறக் கூடாது என்பதற்காக இணை அமைச்சுப் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணை அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் தாமாகவே அந்த அமைச்சுப் பதவியை மற்றவர்களின் மேற்பார்வை இன்றி வகிப்பார்கள். துணை அமைச்சர்கள் அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவியாக இருப்பார்கள். இணை அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள்.

கடந்த காங்கிரசு அரசில் 34 அமைச்சர்கள் இருந்தனர்.

சிறிய அமைச்சரவை சிறந்த ஆட்சி என்ற உறுதி மொழியுடன் மோடி தன் அமைச்சர்களைத் தெரிவு செய்தார். பல்வேறு அரச திணைக்களங்களை சிறந்த முறையில் ஒருகிணைப்புச் செய்து செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என்றார் மோடி. அத்துடன் உயர் நிலை அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து கீழ்நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கபப்டும் என்றார். இந்திய அரசின் இருநூறு பில்லியன் (இரண்டாயிரம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டங்கள் நிறைவேற்றுப்படாமல் நிலுவையில் உள்ளன. சிவ சேனா அதிக அமைச்சுப் பதவிகளைக் கேட்கிறது. இந்தியாவில் அமைச்சரவையும் சாதிகளிடை சமநிலை பேணப்பட வேண்டிய ஒன்று. உத்தரப் பிரதேசம், மஹராஸ்ட்ரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் இந்த மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் புதிய அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்றில் அதிக அளவு ஆட்கள் கலந்து கொண்ட தலைமை அமைச்சர் பதவி ஏற்பு வைபவமாக மோடியின் பதவி ஏற்பு அமைந்தது. பதவி ஏற்பு வைபவத்தின் பின்னர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப் பெரும் தள்ளு முல்லு ஏற்பட்டது.

 முக்கேஸ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் தமது குடும்பத்தினருடனும் மேலும் அசோக் ஹிந்துஜா, சுனில் மிட்டல், ராஜன் மிட்டல்,  குமாரமங்கலம் பிர்லா, சசி ருய்யா, கௌதம் அடானி, வி என் தூட் ஆகிய பெரும் பணக்காரர்களும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப் பெரு முதலாளிகளின் மொத்தச் சொத்து மதிப்பு பெருமளவில் உயர்ந்து விட்டது. ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தை விலை அதிகரிப்பு ஆகியவற்றால் இது நடந்தது. ஏழைகளின் சொத்து மதிப்பு????

மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்து தமது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையில் வழமையாக பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், தலித்துக்கள் பெருமளவில் பாஜகவிற்கு வாக்களித்து இருந்தனர். மோடி பதவிக்கு வந்தால் இந்தியாவில் இலகுவாக முதலீடு செய்யலாம் என உலகெங்கும் வாழும் குஜராத்தியர்கள் மோடிக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள். 

தலைமை அமைச்சர் மோடியின் மாதச் சம்பளம் 50,000 ரூபா. இத்துடன் மேலதிகமாக மாதம் 65,000 ரூபாக்கள் வழங்கப்படும். இன்னும் constituency allowance என மாதம் 45,000 ரூபாக்கள் வழங்கப்படும். அவரது மாதாந்த மொத்த வருமானம் 160,000 ரூபாக்கள்.
நன்றி தினமணி

மோடியின் அமைச்சரவையில் முக்கியமானவர்கள்:
ராஜ்நாத் சிங் (உள்துறை ),
சுஸ்மா சுவராஜ் (வெளியுறவுத் துறை)
அருண் ஜெட்லி(நிதி, பாதுகாப்பு),
வெங்கையா நாயுடு(கிராம அபிவிருத்தி, பாராளமன்ற அலுவல்கள்),
நிதின் கட்காரி(தரைப் போக்குவர்த்து,  கப்பல் போக்குவரத்து),
உமா பார்தி (நீர்வளம், கங்கை சுத்தீக்ரைப்பு),
மனேக்கா காந்தி(பெண்கள், சிறுவர் அபிவிருத்தி),
ஆனந்த் குமார் (இரசாயனமும் உரமும், மேலதிகமாக பாராளமன்ற அலுவல்)
ரவி சங்கர் பிரசாத் (தொலைத் தொடர்பு, சட்டம், நீதி),
ஸ்மிரிடி இரானி(மனித வள மேம்பாடு),
ஹர்ஸ் வர்தன (சுகாதாரம், குடும்பநலம்)

கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளில் இருந்து அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட முக்கியமானவர்கள்:
ராம் விலாஸ் பஸ்வான்(லோக் ஜன சக்திக் கட்சி- பிஹார் மாநிலம்), ஹர்சிம்ரத் கௌர் பதல்(அகாலித் தளம் கட்சி- பஞ்சாம் மாநிலம்)
ஆனந்த் கீற்( சிவசேனா - மும்பாயைத் தலைநகராகக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலம்)
அசோக் கஜபதி ராஜு (தெலுங்கு தேசம் கட்சி - ஆந்திரா)

மோடியின் அமைச்சரவையில் ஒரே ஒரு முசுலிம் அமைச்சர் இடம்பெற்றுள்ளார். நஜ்மா ஹெப்துல்லா சிறுபானமை விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் அமைச்சரவையின் சராசரி வயது 57. மோடி தனது அமைச்சரவையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களை இணைக்கவில்லை. இதனால் எல் கே அத்வானி, முர்ளி மனோகர் ஜோஸி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். சுப்பிரமணிய சுவாமி தான் தனக்கு உள்ள அதிகாரத்தை(?) பாவித்து நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக சாதி உயர்த்துவதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்து மதப்படி ஒருவரின் சாதியை அவரது பிறப்பு நிர்ணயிக்கும். யாரையாவது மேல் சாதிக்கு உயர்த்துவதாயின் 101 பார்ப்பனர்கள் யாகம் செய்து தங்கத்தால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றுக்குள் அவரைச் செலுத்தி பின்னர் அவர் மீண்டும் இப்பூமியில் அப்பசுவின் வயிற்றில் இருந்து பிறப்பது போல் செய்து அவர் சாதி உயர்த்தப்படுவார். சு. சுவாமி எப்போதும் கோமாளித்தனமாக ஏதாவது செய்வார். குடும்பத்தை அடிப்படையாக வைத்து வந்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவில்லை. பாவம் வருண் காந்தி(இந்திராகாந்தியின் பேரனும், சஞ்சய் காந்தியின் மகனும்). ஆர்.எஸ்.எஸ் உறுதியாகச் சொல்லிவிட்டது 75 வயதிற்குக் கூடிய அத்வானி அவைத் தலைவர் (சபாநாயகர்) பதவி கூட ஏற்கக் கூடாது என்று.

இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் மனேக்கா(இயற்பெயர் மேனஹா) காந்திக்கு சுற்றுச் சூழல் துறை கொடுக்கப்படவில்லை. இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பிரச்சனை கொடுக்காமல் இருக்க அவரிடம் அத்துறை வழங்கப்படவில்லை.

 தேர்தலின் போது மோடியின் வலது கரமாகச் செயற்பட்ட அஜித் ஷாவிற்கு அமைச்சுப்பதவி கொடுக்கப்படவில்லை. அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக்கப்படலாம். மோடி தான் கட்சியைக் கைப்பற்ற இப்படிச் செய்திருக்கலாம்.

மலையாளிகள் எவரும் அமைச்சரவையில் இல்லை. மேற்கு வங்கத்தில் இருந்தும் யாரும் இல்லை, இந்த மாநிலங்களில் பாஜக படுதோல்வியடைந்தது. தமிழ்நாடு கன்னியாகுமரியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன் இராதாகிருஷ்ணனுக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  திருச்சியில் பிறந்த  நிர்மலா சீதாராமனுக்கு (M Phil in International Studies) வர்த்தக இணை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா மக்களவையிலோ(லோக்சபா) மாநிலங்களவையிலோ(ராஜ்ய சபா) உறுப்பினர் அல்ல.

பாஜக எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் மாநிலத்தில் இருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை என்பது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏழு பெண் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். 

 இராமாயணம் நாடகத் தொடரில் சீதையாக நடித்தவரும் ராகுல் காந்திக்கு எதிராக அமெதியில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஸ்மிரிடி இரானியும். இவருக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பட்டதாரி கூட இல்லாத ஸ்மிரிடி இரானி எப்படி மனைத வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகலாம் எனக் காங்கிரசுக் கட்சியினர் கேள்வி எழுப்பினர். இமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, மெகாலயா, நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுடன் ஆறு ஒன்றியப் பிரதேசங்களில் (Union Territories) இருந்து எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என காங்கிரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முஹர்ஜீ, ப சிதம்பரம், நட்வர் சிங், அர்ஜுண் சிங், சரத் பவார் ஆகியோரின் அனுபவம் கல்வியுடன் ஒப்பிடுகையில் புதிய அமைச்சரவை ஒரு தூசு என்கின்றனர் காங்கிரசுக் கட்சியினர்.

உலகிலேயே மிக நீண்ட கழிப்பிடமான இந்திய தொடரூந்துப் பாதையையும் உலகிலேயே மிக நீண்ட குப்பைத் தொட்டியான கங்கை நதியையும் எப்படி புதிய அமைச்சரவை எப்படிச் சமாளிக்கப் போகிறது?

 சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இடம் பெற்றது ஈழத் தமிழர்களுக்கு உகந்தது அல்ல.  பதவி ஏற்பு வைபத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டது ஒரு நல்ல ஆரம்பமும் அல்ல.

இந்திய வங்கிகளின் கடன் அறவிடும் விழுக்காடு குறைந்து கொண்டே போகின்றது. சென்ற ஆண்டு 3.8 விழுக்காடாக இருந்த அறவிட முடியாக்கடன் இந்த ஆண்டு 4.4விழுக்காடாக உயர்ந்து விட்டது.  இது புதிய அமைச்சரவைக்கு பெரும் சவாலாக அமையும். இந்தியா கடன் நெருக்கடியை நோக்கி நகராமல் பார்க்க வேண்டிய பொறுப்பு பெரும் பொறுப்பு. வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் பெரும் பூதாகாரப் பிர்ச்சனை. இந்தியாவில் உறுதியான நிலை ஏற்பட அதன் பொருளாதாரம் குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டும். இப்போது அதன் வளர்ச்சி ஐந்திலும் குறைவு.


புதிய அரசு செய்ய வேண்டியவை:

சிவப்பு நாடாக்களை அறுத்தெறிதல்
சட்டங்களை இலகுவாக்குதல்
உள்கட்டுமான அபிவிருத்தி (Infrastructure development)
நதிநீர்ப்பங்கீடு
வெளிநாட்டு முதலீடுகளைக் கவருதல்
உலகச் சந்தையில் இந்தியாவின் போட்டியிடு திறனை மேம்படுத்தல்
உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியை அபிவிருத்து செய்தல்
விவசாயிகள் தற்கொலைகளை நிறுத்துதல்
கிராமங்களுக்கு வங்கித் துறையை விரிவாக்குதல்.

சவால்கள்
1. இந்தியாவில் குஜராத்தியர்களுக்கு எதிரான இனவாதம் இனித் தூண்டப்படலாம். கேரளத்து ஊடகங்கள் அதை ஆரம்பித்து விட்டன.                    2. இந்தியாவின் வரலாற்றில் பார்ப்பனர் அல்லாதவர் தலமை அமைச்சரானால் அவர் இரண்டு ஆண்டுகள் கூட நீடித்ததில்லை.
3. அயல் நாடுகளுடனான உறவு
4. காங்கிரசு ஆதரவாளர்களைக் கொண்ட நிர்வாக சேவை
5. சிவ சேனா மும்பாய் நகரில் செய்யக் கூடிய கலவரங்கள்
6. பார்பர் மசூதியும் இந்துத்துவவாதிகளும்.
7. மாற்றுக் கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள்
8. காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்த குடியரசுத் தலைவர்
9. பாஜகவிலும் பார்க்க அதிக  காங்கிரசுக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை.
10. மனவலிமை இழந்த இந்தியப் படையினர்.
11. முன் அனுபவம் அதிகம் இல்லாத பல அமைச்சர்கள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...