Tuesday, 4 March 2014

உக்ரேனின் கிறைமியா இரசியாவிற்கு சொந்தமானதே

இரசியாவின் பொருளாதாரத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது உக்ரேன் விவகாரம். இரசியாவின் பங்குச் சந்தையில் இரசிய வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் தமது பெறுமதியில் 34 பில்லியன்  (மூவாயிரத்து நானூறு கோடி) டொலர்களை இழந்தன. இரசிய அரசு தனது நாணயமான ரூபிளின் பெறுமதி மோசமடையாமல் இருக்கு பத்து பில்லியன் வெள்நாட்டுச் செலவாணியை இழக்க வேண்டி இருந்தது.

இரசியாவின் வட்டி வீததத்தை5.5% இல் இருந்து 7% இற்கு அதிகரிக்க வேண்டி இருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை அமெரிக்காவிற்கு முந்தி இரசிய நிதிச் சந்தை கடுமையாகத் தண்டித்து விட்டது என்கின்றது. உலகெங்கிலும் உக்ரேன் விவகாரத்தால் பங்குகள் விழ்ச்சியடைந்தன. அமெரிக்க டொலரினது பெறுமதி உயர்ந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தது.

இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேனும் அதன் ஒரு பகுதி எனச் சொல்லப்படும் கிறைமியாவும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்தவையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளுக்குப் போனால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை வல்லுனர்களின் கருத்தாகும். கிறைமியா என்பது கருங்கடலில் உக்ரேனின் கிழக்கே உள்ள ஒரு குடாநாடு ஆகும். அது உக்ரேனுடன் நிலத் தொடர்புடையது. இதன் இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) மக்களில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இரசியர்களே. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு கிறிமியாவிலேயே நிலை கொண்டுள்ளது. இரசியா மத்திய தரைக் கடலிலும் மத்தியக் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு கிறைமியாவில் உள்ள அதன் கடற்படைத்தளம் முக்கியமான ஒன்றாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதறிய போது உக்ரேன் ஒரு தனி நாடாகியது. அப்போது இரசியக் கடற்படை கிறைமியாவின் செவஸ்ரப்போல் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க இரசியாவும் உக்ரேனும் ஒத்துக் கொண்டன. இந்த உடன் படிக்கையின் படி கிறைமியா உக்ரேனின் ஒரு பகுதி என்பதாகும். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது கிறைமியா இரசியாவினுடையதே.

இரசியாவின் பிராந்தியமாக இருந்த கிறைமியாவை 1954-ம் ஆண்டு அப்பொதைய இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். அவர் ஒரு உக்ரேனியர் என்பதால் இப்படிச் செய்தார்.

    1783-ம் ஆண்டு இரசியா கிறைமியாவைத் தனதாக்கியது.

    1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப்பறிக்க ஒட்டொமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது.

 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது.

    1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது. 

    1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது.

    1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர். 

    1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது.  .

    1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது.

    1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார்.

    1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...