Friday, 7 March 2014

அமெரிக்காவின் உளவுத்துறை சிஐஏஇற்கு உக்ரேனிலும் தோல்வி

உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம் இன்னும் ஒரு தோல்வியை உக்ரேனில் சந்தித்துள்ளது.

உக்ரேனில் ஆட்சிக் கவிழ்ப்பில் முன்னின்று செயற்பட்டது போலந்து நாடு ஆகும். உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அதிக நன்மை அடையப் போவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை நாடான போலந்து ஆகும். ஐக்கிய அமெரிக்கா, போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஒன்றிணைந்து செயற்பட்டன. உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளரைப் பதவியில் இருந்து அகற்றினால் இரசியாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் அவர்களுக்கு அவசியமானதும் முக்கியமானதுமாகும். அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவல்கள் பிழையாகிப் போய்விட்டன.
சிஐஏயின் தோல்விப்பட்டியலில் மிக மோசமான தோல்வி நியூயோர்க் நகரில் இருந்த இரட்டைக் கோபுரத்தில் நடந்த் 9/11 தாக்குதலைப் பற்றி அறிய முடியாமல் போனது. ஆனால் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) சிஐஏயிற்கு இது தெரிந்திருந்தது என்றும் இன்னொரு சதிக் கோட்பாடு சிஐஏதான் அதைச் செய்தது என்றும் சொல்கின்றது. மக்களைக் குழப்புவதற்காக சிஐஏயே இந்தச் சதிக்கோட்பாடுகளைப் பரப்பியிருக்கலாம்.

பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு உற்பத்தி செய்யப்போவதை  சிஐஏ அறிந்திருக்கவில்லை. இது பற்றிய சதிக்கோட்பாட்டின்படி இந்தியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சமநிலைப்படுத்த பாக்கிஸ்த்தானை அமெரிக்கா அணுக்குண்டு உற்பத்தி செய்ய அனுமதித்தது.

ஈராக்கிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் படைக்கலன்கள் இல்லை என்பதை சிஐஏ அறிந்து கொள்ள முடியாமல் போனது அதன் தோவி என்கின்றனர். ஆனால் இது சதிக்கோட்பாட்டின் உச்சம். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் நன்கு தெரியும் அப்போதைய ஈராக் ஆட்சியாளரிடம் வேதியியல் படைக்கலன்களை இல்லை என்று.

உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச்சைப்  பதவியில் இருந்து நீக்கி மேற்கு நாட்டு ஆதரவாளர்களின் கையில் உக்ரேனின் ஆட்சியை ஒப்படைத்தால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் படைநடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார் என அமெரிக்க உளவுத் துறை வெள்ளை மாளிகைக்கு அறிவித்திருந்தது. ஆனால் இது பிழைத்துப் போய் உலகெங்கும் ஒரு பதட்ட நிலையையும் பங்குச் சந்தைகளிலும் பெரும் பாதிப்பையும் உக்ரேன் விவகாரம் ஏற்படுத்தியது.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் உளவுத்துறைக்கான உப குழு இப்போது சிஐஏ பிழையான தகவலைக் கொடுத்தது எப்படி என விசாரிக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...