2013இறுதிப் பகுதியில் நடந்த டில்லி சட்ட சபைத் தேர்தலில் மொத்தம் எழுபது
தொகுதிகளில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி
கட்சி ஆளும் காங்கிரசுக் கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதுடன் பாரதிய
ஜனதாக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்தது. தமது கட்சியை
பொது மகன் கட்சி என்பதற்காக ஆம் ஆத்மி எனப் பெயரிட்டு தாம் நாட்டைச்
சுத்தப்படுத்துவதற்காக வந்தவர்கள் என்பதற்காக தமது கட்சியின் சின்னத்திற்கு
துடைப்பத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
இனியும் பொதுமகன் அல்ல
தன்னைப் பொது மகன் எனச் சொல்லிக்
கொண்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதும்
காங்கிரசுக் கட்சியின் வெளியில் இருந்து வழங்கும் ஆதரவுடன் டில்லி சட்ட
சபையின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதனால் அவர் தனக்குத் தானே சூட்டிக்
கொண்ட பொது மகன் என்னும் பட்டத்தை இழந்து ஒரு பிரபலம் ஆனார். அரவிந்த்
கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதும் 700 லீட்டர் தண்ணீரை இலவசமாக
வழங்கினார். மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் கணக்குகளும் அவை
மக்களிடம் அறவிடும் கட்டணமும் கடுமையான கணக்காய்விற்கு உட்படுத்த
உத்தரவிட்டார். டெல்லி வாசிகளின் குறைகளை நேரடி யாகக் கேட்டு, அவற்றுக்கு
தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்பார் எனப்படும் மக்கள்
அரசவை நடத்தப்படும் என்றார். ஆனால் மக்கள் தமது குறைகளைச் சொல்ல மிகப்
பெருமளவில் திரண்டு வந்து தடைகளையும் மீறி அரவிந்தைச் சந்திக்க முயன்றதால்
பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இந்தத் திட்டத்தை அரவிந்த் கைவிட்டு
மக்கள் தமது குறைகளை இணையவெளியூடாக தனக்குத் தெரிவிக்கலாம் என்றார். ஆனால்
எல்லாப் பொதுமக்களுக்கும் அந்த வசதி இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்களிடம்
இருந்து வந்தது.
அந்நிய முதலீடு இரத்து
டில்லியில் அந்நிய
முதலீடுகளுக்கு முன்னைய மாநில காங்கிரசு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்ததும் இதை இரத்துச் செய்தார். இதனால்
டில்லியில் கடைத் தொகுதிகளை அமைத்திருந்த வால்மார்ட், ரெஸ்க்கோ போன்றவை
அவற்றை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழக்க நேரிட்டது.
அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்குள்ளும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
ராஜஸ்த்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிஜ
ஜனதாக் கட்சி இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை. இது பற்றி மீள்பரிசீலனை
செய்வதாக அறிவித்தது.
மலையாளத் தாதிகள் கறுப்பிகள்
அடுத்த அடி
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவரது கட்சியின் நகைச்சுவைப் பரப்புரை செய்யும்
குமார் விஸ்வா என்பவரால் விழுந்தது. விஸ்வா தனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சி
ஒன்றில் கேரளத்து மலையாள கறுப்புத் தோல் தாதிகளைப் பார்க்கும் எந்த ஆணும்
அவர்களை "சிஸ்டர்" என்றுதான் அழைப்பான் எனக் கிண்டலடித்தார். இது ஒரு
இனவாதக் கருத்து என்ற கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. பொதுவாக வட இந்தியர்கள்
தென் இந்தியர்களை குறைந்த சாதியினர் என்று ஒரு நினைப்புடன் இருப்பார்கள்.
இத்தனைக்கும் குமார் விஸ்வா ஒரு சாதாரண ஆளல்ல அவர் ஒரு பேராசிரியர். அவர்
இந்த நகைச்சுவையைக் கூறியது ஒன்றும் சாதாரண இடமுமல்ல. கவிஞர்களின் தேசிய
மாநாடு ஒன்றில் அவர் இந்த நிறவெறி நகைச்சுவையைக் கூறினார். இதில் கவனிக்கக்
கூடிய இன்னும் ஒரு அம்சம் குமார் விஸ்வா இந்த நிறவெறி நகைச்சுவையச்
சொன்னது 2008-ம் ஆண்டு. காங்கிரசுக் கட்சியினர் இதைத் தேடி எடுத்து
யூரியூப்பில் போட்டு மீண்டும் தீ மூட்டினார்கள். கேரளாவின் ஆம் ஆத்மி
கட்சியினரின் பணிமனை அடித்து நொருக்கப்பட்டது. குமார் விஸ்வா பகிரங்கமாக
மன்னிப்புக் கோரினார்.
விக்கி ஐயாவைப்போல் காவலில்லா அரவிந்த்
இந்தியாவில்
பொதுவாக மாநில அரசுகளின் கீழ் மாநிலக் காவற்துறை இருக்கும். ஆனால் விக்கிய
ஐயாவின் வடமாகாண சபை போல் டில்லி மாநில அரசின் கீழ் டில்லிக்கான காவற்துறை
இல்லை. டில்லிக்கான காவற்துறை மைய அரசான காங்கிரசு அரசின் உள்துறை
அமைச்சின் கீழ் இருக்கின்றது. டில்லியில் ஒரு வீட்டில் ஆபிரிக்க நாடுகளைச்
சேர்ந்த பெண்கள் விபச்சாரமும் போதைப் பொருள் வியாபாரமும் செய்வதாக அரவிந்த்
கேஜ்ரிவாலின் அமைச்சரவையின் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி குற்றம்
சாட்டி அவர்களை கைது செய்யுமாறு வேண்டினார். நீதிமன்ற ஆணையில்லாமல்
அவர்களைக் கைது செய்ய முடியாது என காவற்துறையினர் மறுத்து விட்டனர்.
ஆத்திரமடைந்த சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி தனது ஆதரவாளர்கள் புடை சூழ
அந்த வீட்டுக்குள் புகுந்து இரு இரு உகண்டா நாட்டுப் பெண்களையும் இரு
நைஜீரிய நாட்டுப் பெண்களையும் பிடித்து நடுத்தெருவில் வைத்து அவர்களின்
சிறுநீர் மாதிரிகளை வற்புறுத்திப் பெற்றுக் கொண்டனர். அந்தப் பெண்கள் தமது
கைப்பேசிகளை எடுத்து காவற்துறையுடன் தொடர்பு கொள்ள முயன்றபொது ஆம் ஆத்மி
கட்சியினர் அவர்களின் கைப்பேசிகளைப் பறித்து நிலத்தில் வீசி எறிந்து எம்
நாட்டுக் காவற்துறையினரிடம் எம்மைப்பற்றி குற்றம் சாட்டுவீர்களா கறுப்பிகளே
என கூறினர். இது காங்கிரசு அரசையும் வெளியுறவுத் துறை அமைச்சையும் கடும்
ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. இந்திய உள்துறை அமைச்சர் மனிஷ் திவாரி
இந்தியாவும் ஆபிரிக்க நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேணிவந்த நிறவெறிக்கு
எதிரான ஒற்றுமையான போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சியினர் கெடுத்துவிட்டனர் எனச்
சாடினார். உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் சோம்நாத் பார்த்திக்கு எதிராக
காவற்துறையில் புகாரும் கொடுத்துள்ளார். காங்கிரசுக் கட்சியினர் அரவிந்த்
கேஜ்ரிவாலில் சட்ட அமைச்சர் சோம்நாத் திவாரி பதவி விலக வேண்டும் என
கூச்சலிட்டனர். ஆபிரிக்கப் பெண்கள் டில்லியில் நிர்வாண நடனம் ஆடும்
நிலையங்கள் பாலியல் தொழில் நிலையங்கள் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சியினர்
குற்றம் சாட்டுகின்றனர். டில்லியில் ஒரு இளம் பெண் தீ மூட்டிக்
கொல்லப்பட்டமை டென்மார்க் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை ஆகியவை ஆட்சி
மாறினாலும் டில்லியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மாறாது என சுட்டிக்
காட்டியது. பல பெண்ணுரிமை அமைப்புக்கள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அது நடக்காவிட்டால் டில்லி சட்ட சபையின் அரவிந்தின் அரசுக்கு காங்கிரசுக் கட்சியினர் வெளியில் இருந்து வழங்கும் ஆதரவை நிறுத்தலாம். எந்நேரமும் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு.
காங்கிரசுக்குள் குழப்பம்
தனது சட்டத்துறை
அமைச்சரின் அடாவடித்தனத்தை கண்டிக்காத அரவிந்த் கேஜ்ரிவால் டில்லி மாநில
அரசிடம் காவற்துறை இல்லாததால்தான் இத்தனை பிரச்சனை எனக் கூறி தனது மாநில
அரசின் கீழ் காவற்துறை கொண்டு வரப்பட வேண்டும் என தனது ஆதரவாளர்களைத்
திரட்டி தெருவில் இருந்து போராட்டம் ஆரம்பித்தார். இந்தப் போராட்டத்திற்கு
அரவிந்த் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்கள் திரளவில்லை. ஆனாலும் டில்லியில்
தெருக்கள் மூடப்பட்டு பெரும் போக்கு வரத்து நெருக்கடிஏற்பட்டது. ஜனவரி
26-ம் திகதி இந்தியக் குடியரசு தினம் என்பதாலும் அதற்கு ஜப்பானியத் தலைமை
அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதாலும் டில்லியில் பெரும்
பாதுகாப்பு ஏற்பட்டுகள் செய்ய வேண்டி இருந்தது. அரவிந்த் தெருவில் இருந்து
போராட்டம் செய்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
பின்னர் மைய அரசின் உட்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயும் அரவிந்த்
கேஜ்ரிவாலும் பேச்சு வார்த்தை நடாத்தி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தியின்
வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத மூன்று காவற்துறையினரையும் சம்பளத்துடன்
கூடிய விடுமுறையில் அனுப்புவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இந்த உடன்பாடு
காங்கிரசின் தலைமைக்குத் தெரியாமல் செய்யப்பட்டதால் சோனியாவும் அவரது பேபி
ராகுலும் கடும் ஆத்திரம் அடைந்தனர். காங்கிரசின் உச்ச சபை கூடி உள்துறை
அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயைக் கண்டித்தது. பாரதிய ஜனதாக் கட்சியினர்
அரவிந்தின் போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கேலி செய்தனர்.
ஊழல் ஒழிப்பு எங்கே
ஊழலை
ஒழித்து அரசியலைச் சுத்தப்படுத்துவேன் என்ற கூக்குரலுடன் அரசியலுக்கு வந்த
அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் ஒழிப்பைத் தவிர வேறுபல செய்கின்றார். நீண்ட கால
அரசியல் அனுபவம் பெற்ற காங்கிரசுக் கட்சியினர் எதிர்க் கட்சிக்குக்
கிடைக்கவிருக்கும் வாக்குகளைப் பிரித்தெடுப்பதில் பலே கில்லாடிகள். அதற்குரிய பணமும் அவர்களிடம் இருக்கிறது.
காங்கிரசுக் கட்சியினர் முலாயம் சிங் யாதவ்வின் சமாஜவாதக் கட்சியையும்
மாயாவதியின் பகுஜன் சமாஜவாதக் கட்சியையும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப்
பிரிக்கப்பயன்படுத்தினர். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்தைத்
தனித்துப் போட்டியிட வைத்தது எதிர்க்கட்சிகளின் வாக்கை காங்கிரசுக்
கட்சியினர் பிரித்தாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடன் தொல்லையில் இருந்த்து விடுபட அது விஜயகாந்திற்கும் வசதியாக இருந்த்தாகவும் சொல்லப்பட்டது. காங்கிரசுக் கட்சி அரவிந்த்
கேஜ்ரிவாலையும் எதிர்க்கட்சிகளின் வாக்கைப் பிரிக்கப் பயன்படுத்துவதாக
ஐயம் எழுகின்றது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி
வந்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைம அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடியை
ஓரம் கட்டுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment