கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள Westgate Mall என்னும் ஆடம்பர மூன்று மாடிக் கடைத் தொகுதிக்குள் செப்டம்பர் 21ம் திகதி ஒரு திவிரவாதக் குழு ஒன்று நுழைந்தது. அது அங்கு நின்றவர்களை கண்டபடி சுட்டுக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தும் வைத்தது. தமது தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே டுவிட்டர் மூலம் வெளி உலகிற்கு தெரியப் படுத்திக் கொண்டே இருந்தது.
Westgate Mall கடைத் தொகுதிக்குள் நுழைந்த அல்-ஷபாப் அமைப்பினர் அங்குள்ளவர்களிடம் நபிகள் நாயகத்தின் தாயாரின் பெயரைக் கூறும் படி வற்புறுத்தினர். சரியாக ஆயிஷா என்று சொன்னவர்கள் இசுலாயர்கள் எனக் கருதப்பட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கென்யாவின் படையினர் அல்-ஷபாப் போராளிகளுடன் நான்கு நாட்காள் போராடி நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 62பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடரும் சுத்தீகரிப்பு வேலையில் மேலும் இறந்த உடல்கள் அகப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கென்யா தெரிவித்தது. ஆனால் அல்-ஷபாப் அமைப்பினர் தம்மிடம் போதிய ஆண் போராளிகள் இருக்கிறார்கள் நாம் எமது சகோதரிகளைப் போரில் ஈடுபடுத்தத் தேவையில்லை என டுவிட்டரில் தெரிவித்தனர்.
யார் இந்த அல்-ஷபாப் அமைப்பினர்?
ஹரகட் அல்-ஷபாப் அல்-முஜாகிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெயருடைய அமைப்பை சுருக்கமாக அல்-ஷபாப் என அழைப்பர். அல்-ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்படும். மத ரீதியாக அல்-ஷபாப் அமைப்பு சவுதி அரேயாவின் வஹாப் வகை இசுலாமை தமது இறை நம்பிக்கையாகக் கொண்டவர்கள். இதை அல் கெய்தா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்லப்படுகிறது. 2006-ம் ஆண்டில் இருந்து சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷஹாப் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. 2011-ம் ஆண்டு கென்யா நாட்டுப் படைகளின் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் நிதி உதவியுடன் ஆபிரிக்க ஒன்றியப் படைகள் சோமாலியாவிற்கு நுழைந்தன. அப்போது சோமாலியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அல்-ஷஹாப் அமைப்பினரை பல இடங்களில் இருந்து கென்யப் படைகள் விரட்டினர். அல்-ஷஹாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகங்கள் கென்யப் படையினரால் கைப்பற்றப்பட்டன. முக்கியமாக கிஸ்மயோ துறைமுகத்தை இழந்தமையால் அல்-ஷஹாப் அமைப்பின் வருமானம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-ஷஹாப் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கென்யப் படையினர் சோமாலியாவிற்கு நுழைந்ததில் இருந்து அல்-ஷஹாப் அமைப்பினர் தாம் கென்யத் தலைநகர் நைரோபியில் இருக்கும் வானாளாவிய கட்டடங்களைத் தாக்குவோம் என எச்சரித்துக் கொண்டே இருந்தனர். சோமாலியாவின் முக்கிய நகரங்களில் இருந்து விரட்டப்பட்ட அல்-ஷஹாப் வலுவிழந்து விட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நைரோபியில் இருக்கும் Westgate Mall கடைத் தொகுதியில் அல்-ஷஹாப் அமைப்பினர் தாக்குதலை நடாத்தினர்.
எதியோப்பியாவின் சிலுவைப் போர்
கென்யப் படையினருடன் கிருத்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட எதியோப்பிய படையினரும் அல்-ஷஹாப்பிற்கு எதிராகப் போராடுவது இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியிருந்தது. எதியோப்பியப் படையினரின் தாக்குதலை ஒரு சிலுவைப் போர் என அவர்கள் விமர்சிக்கின்றனர்.
அமெரிக்காவின் அச்சம்
நைரோபிய நகரின் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதல் அமெரிக்காவை இருவகையில் அச்சமடைய வைத்துள்ளது. ஒன்று ஆப்கானிஸ்தானிலும் யேமனிலும் இருந்து இசுலாமியத் தீவிரவாதீகள் தப்பி ஓடி சோமாலிய அல்-ஷஹாப் அமைப்பில் இணைகிறார்களா என்ற அச்சம். இரண்டாவது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் சோமாலியர்கள் சோமாலியா சென்று அல்-ஷஹாப் அமைப்பின் இணைகிறார்கள் என்ற அச்சம். ஆரம்ப நிலைத் தகவல்களின் படி ஒர் பிரித்தானியா வாழ் சோமாலியப் பெண் ஒரு சுவீடன் வாழ் சோமாலியர் இரு அமெரிக்க வாழ் சோமாலியர்கள் நைரோபிய நகர் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment