கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறவில்லை. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது.
ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization), பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
1979-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தத்தால் சீனப் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி கண்டு அறுபது கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் தனது வேகத்தை இழக்கும் என பல மேற்கத்தையப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல் இல்லாத படியால் சீனா இதில் உண்மை இருக்கிறது என உணர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தடையின்றித் தொடரச் செய்ய சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் அவசியம் என சீனப் பொதுவுடமைக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2013-11-09-ம் திகதி ஆரம்பமான சீனப் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்திருத்தப்படுவது இந்தக் கூட்டத் தொடரில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்படும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு ஆண்டு தோறும் கூட்டம் நடத்தும். இதில் மூன்றாம் ஆண்டு நடத்தப்படும் கூட்டத்தில் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப் படும். 1978-ம் ஆண்டில் நடந்த 11வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரிலேயே சீனப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனை அதிகரிப்பதற்கும் மேற்கு நாடுகளுடன் போட்டியிடுவதற்கும் சீனாவின் பொருளாதாரம் மேற்கத்தைய பொருளாதாரப் பாணியை நோக்கி மேலும் தாராண்மைப் படுத்தப் படவேண்டும் என்ற கருத்து இருநூற்று ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் முன்றாவது கூட்டத்தொடரின் முக்கிய அமசமாக இருக்கிறது. திறனற்ற பொருளாதாரம், வருமான சமபங்கீட்டின்மை, ஊழல், நில உடமைப் பிரச்சனை, மோசமான உள்ளூராட்சி நிர்வாகம் ஆகியவை சீனப் பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனையாகும். அத்துடன் ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரத்துக்குரிய வங்கி முறைமை, முதலீட்டுச் சந்தை ஆகியவை சீனாவில் இல்லை. இந்தப் பிரச்சனைகள் சீன ஆட்சியாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
சீனா இனிவரும் காலங்களில் செய்யவிருக்கும் மாறுதல்களும் செய்ய வேண்டிய மாறுதல்களும்:
அரசுடமையில் இருந்து தனியுடைமைக்கு மாறுதல்
சீனாவின் உற்பத்தித் துறையில் பெரும்பான்மையானவை தற்போதும் அரச கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அரசுடைமை நிறுவனங்களின் செயற்படு திறன் குறைந்தவையாக இருப்பதால் சீன வளங்களை பயன்படுத்தும் திறன் பல வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவாகவே இருக்கின்றன. இந்த இடைவெளியை சீர் செய்ய சீனா தனது பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவிருக்கிறது. பல அரசுடைமை நிறுவனங்கள் சீன பொதுவுடைமைக் கட்சியில் முக்கிய தலைவர்களின் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களின் எதிர்ப்பை சமாளித்தே தனியார் மயமாக்கலைச் செய்ய வேண்டிய நிலையில் சீனப் பொதுவுடமைக்கட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கின்றனர். சீனா பல வர்த்தக மற்றும் உற்பத்தித் துறையில் தனியார் முதலீட்டை 90விழுக்காடாக அதிகரிக்கும் திட்டத்துடன் இருக்கிறது. பல சேவைத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவிருக்கிறது.
கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல்
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
ஊழல் ஒழிப்பு
சீனாவில் ஊழல் பல நிலையிலும் பல தரப்பிலும் பரந்து காணப்படுகின்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் சீனாவில் ஊழலை ஒழிக்கும் திட்டத்தை ஏற்கனவே செயற்படுத்தத் தொடங்கிவிட்டார்.
வங்கித் துறைச் சீர்திருத்தம்
சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனுக்கு தடையாக இருப்பவற்றில் மோசமானது அதன் அரச வங்கிகளாகும். அரச வங்கிகள் அரச நிறுவங்களிற்கு மட்டும் கடன் வழங்குவது அவற்றிற்கு ஒரு பாதுகாப்பான நடவடிக்கைகளாகும். மேற்கு நாடுகள் போல் போட்டி அடிப்படையில் சிறந்த இலாபமீட்டும் உற்பத்தித் துறைக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தினால் சீனாவின் வளங்கள் சிறந்த முறையில் பயங்படுத்தப் படும். சீனாவின் வங்கி வட்டி வீதத்தையும் சீன நாணய மாற்று வீதத்தையும் சுதந்திரமாக தீர்மானிக்க சீன அரசு அனுமதிக்கும் திட்டமும் உள்ளது.
உலக நாணயமாக சீனாவின் நாணயம்
சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் போது அமெரிக்கப் பொருளாதாரத்திலோ அதன் நாணயமான டொலரிலோ ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க சீனா தனது நாணயமான யுவானை உலக நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு பத்தாண்டுத் திட்டம் சீனாவிடம் இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சீன வங்கித் துறையும் சீன நிதிச்சந்தையும் பெரும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உள்ளாக வேண்டும். இதுவரை காலமும் சீனா தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைந்து வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டு இருக்கின்றது. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாயின் அதன் பெறுமதியை உலக நாணயச் சந்தையில் சீன நாணயத்தை வாங்குவதற்கான விரும்பமும் விற்பதற்கான விருப்பமுமே தீர்மானிக்க வேண்டும். இதனால் சீன நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் சீனாவின் ஏற்றுமதிச் சந்தையை இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் கைப்பற்றலாம். இது சீனாவின் உற்பத்தித் துறையை பெரிதும் பாதிக்கலாம்.
திட்டமிடலால் திண்டாடும் மக்கள்
சீனாவில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. கிராமப் புறமக்கள் அங்கு கொண்டு சென்று குடியமர்த்தப்படுவார்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில் இவர்கள் தெருத் துப்பரவாக்கும் வேலைகள் நகரப் பூங்கா பராமரிப்புச் செய்யும் வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகுவதுண்டு. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய நகரங்களுக்கு சென்று விரும்பிய வேலை செய்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டிய நிலைமையும் சீனாவில் உண்டு. ஹுக்கௌ என்னும் பதிவு முறைமை மூலம் சீனா இந்த மக்கள் நகர்வுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதை மாற்றக்கூடிய திட்டம் சீனாவிற்கு அவசியம். சீன அரசு மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளின் காணிகளை கட்டாயப்படுத்தி வாங்கி வேறு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றமையும் சீனாவில் பரவலாக நடந்ததுண்டு.
மக்களின் கொள்வனவு வலு
சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏற்றுமதியிலும் உள் நாட்டில் பெருந்தெருக்கள், விமான நிலையங்கள் போன்ற கட்டுமான அபிவிருத்தியிலும் தங்கி இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் அதன் மக்களின் கொள்வனவு வலுவில்தான் பெரிதும் தங்கியிருக்கும். சீன மக்களின் வருமானம் அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை சீனா எடுக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நிலையில் சீனா தனது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்யும் முடிவை எடுக்கிறது. சீனப் பொதுவுடமைக் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி ஒக்டோபர் மாதம் முடிவடைந்த ஆண்டில் 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிகமாகும்.
சீனா வெறுமனவே பொருளாதாரத் சீர் திருத்தத்தை மட்டும் அறிமுகம் செய்து அதன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது அது அரசியல் சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டும் என சில மேற்கதைய அரசியல் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சீனாவின் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரில் அப்படி ஒரு திட்டம் முனவைக்கப்படவில்லை. இந்த மாற்றம் இன்றி தனது பொருளாதாரத்தை தேற்ற சீனாவால் முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment