Saturday, 9 November 2013

லிபியத் தலைநகர் திரிப்போலியில் கடும் சண்டை

நவம்பர் 7-ம் திகதி இரவு லிபியத் தலைநகர் திரிப்போலியில் இரு படைக்கலன் ஏந்திய குழுக்களுக்கிடையில் பெரும் மோதல் வெடித்தது. மும்மர் கடாஃபிக்குப் பின்ன்ர் லிபியாவில் பல படைக்கலன் ஏந்திய ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் செயற்படுகின்றன. லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை சென்ற மாதம் அல் கெய்தா ஆதரவுக் குழு ஒன்று இலகுவாகக் கடத்திச் சென்றமை லிபியாவின் திடமற்ற நிலையை எடுத்துக் காட்டியது.அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தலைமை அமைச்சர்கள் லிபியாவில் பதவியில் இருந்தனர்.

நவம்பர் 7-ம் திகதி இரவு மிஸ்ரட்டா பிராந்தியத்தில் செயற்படும் குழு ஒன்று திரிப்போலிக்குள் புகுந்து அங்கு செயற்படும் குழு மீது தாக்குதல் நடாத்தியது.
 தமது தளபதி நூரி ஃபிரிவான் கொன்றமைக்குப் பழி தீர்ப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் வலிமைமிக்க படைக்கலன்கள் பாவிக்கப்பட்டன. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

லிபிய அரசு ஒரு தேசிய படையமைப்பை கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறது. லிபியாவின் எரி பொருள் வளம் நிறைந்த கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் லிபியாவில் Federal system என்னும் இணைப்பாட்சி முறைமையில் கீழ் தமக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமது பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யப் படுவதையும் அவர்கள் தடுத்துள்ளனர்.

லிபிய மக்கள் சிலர் திரிப்பொலியில் இந்த மோதலுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். “Tripoli without weaponry” படைக்கலன்களில்லா திரிப்போலி என்ற சுலோக அட்டையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மோதும் குழுக்களுக்கு மூன்று நாள் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.  படைக்கலன்கள் ஏந்திய சிறு குழுக்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதை லிபிய மக்கள் பெரிதும் வெறுக்கின்றனர்.

கடாஃபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு லிபிய அரசு சம்பளம் வழங்கி வருகின்றது. இக்குழுக்கள் தமக்கென பிராந்தியங்க்களை வைத்துக் கொண்டு ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இவர்களை படைக்கலன்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு அரச படையில் இணையுமாறு லிபிய அரசு கேட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கான சம்பளங்கள் நிறுத்தப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.

 கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

லிபியா ஒரு கட்டுபாட்டில் இல்லாத நாடாகிவிட்டது என்றார் இத்தாலிய வெளிநாட்டமைச்சர் எமா பொனினோ. ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் லிபியாவிற்கான தூதுவர்கள் மோதலை நிறுத்தும் படி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நாடுகள் லிபியாவில் அல் கெய்தாவின் கை ஓங்குமா என அஞ்சுகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...