2014-ம் ஆண்டு நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறுவதா அல்லது ஒரு குறித்த தொகைப் படைகளை தொடர்ந்து அங்கு இருக்க விட்டு எஞ்சிவர்கள் வெளியேறுவதா என்ற இழுபடும் பிரச்சனை இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது நேட்டோ நாடுகளின் படையினர் 52,000 ஆப்கானில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு பெரும் விரக்தியைக் கொடுக்கும் போராக 12 ஆண்டுகள் இழுபடும் ஆப்கான் போர் இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்தும் கந்தகார் நகரில் இருந்தும் தலிபான்களையும் அல் கெய்தாவையும் விரட்டிய நேட்டோப் படைகள் இன்னும் அவற்றை ஒழித்துக் கட்டவில்லை. ஆப்கான் அரசின் மொத்தச் செல்வில் 80% மேற்கு நாடுகளால் வழங்கப்படும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது.
2014-ம் ஆண்டு நேட்டோப் படையினர் வெளியேறிய பின்னர் ஆண்டு தோறும் ஆப்கான் படைத்துறையையும் காவற்துறையையும் மேம்படுத்த நான்கு பில்லியன் டொலர்களையும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் நான்கு பில்லியன் டொலர்களையும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளன.
2014-ம் ஆண்டு இறுதியில் நேட்டோப்படைகள் வெளியேறிய பின்னர் எஞ்சியிருக்கும் படையினர் ஆப்கானிஸ்த்தானிய சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். அப்படியில்லாமல் அவர்கள் அவர்களது தாய் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என நேட்டோப் படையினர் அடம் பிடிக்கிறார்கள். இந்தப் பிரச்சனையை ஆப்கானிஸ்த்தானின் பாராளமன்றம் தீர்மானிக்கட்டும் என்றார் ஆப்கானிஸ்த்தானின் அதிபர் ஹமீத் ஹர்ஜாய். ஆனால் பாராளமன்றம் இது தொடர்பாக முடிவெடுக்காமல் இழுத்தடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு இந்த 2013 ஒக்டோபர் மாதம் 31-ம் திகதிக்குள் தீர்வு காணவேண்டும் அல்லது அமெரிக்கப் படைகள் முற்றாக ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிவிடும் என்றும் ஆப்கானிஸ்த்தானிற்கு எந்தவித நிதி உதவிகள் வழங்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தப் பிரச்சனை உடன்பாடின்றித் தொடர்ந்து இழுபடுகின்றது. இதே பிரச்சனை ஈராக்கிலும் நேட்டோப் படைகளுக்கும் ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருந்து தீர்க்க முடியாமல் போனதால் நேட்டோப் படைகள் தமது படைவிலக்கலை துரிதப் படுத்தினர். ஈராக்கில் அல் கெய்தா இயக்கத்தினர் பெருமளவில் தலையெடுத்தனர். அங்கு இப்போது அடிக்கடி குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன.
ஆப்கான் அதிபர் ஹமீத் ஹார்ஜாய்யும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியும் 2013 ஒக்டோபர் 12-ம் திகதி சந்தித்திப் பேசி 2014இன் பின்னர் செய்ய வேண்டியவை தொடர்பாக ஒரு உடன்பாடு கண்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் எஞ்சி இருக்கும் படைகள் எந்த நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்பது தொடர்பாக என்ன உடன்பாடு காணப்பட்டது என்பது பற்றி தகவல்கள் ஏதும் வெளிவிடவில்லை. எத்தனை படையினர் தொடர்ந்தும் ஆப்கானில் தங்கியிருப்பார்கள் என்பது தொடர்பாகவும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் ஆறாயிரம் முதல் இருபதினாயிரம் வரையிலான படையினர் 2024-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்த்தானில் இருக்க வேண்டும் என மதிப்பிட்டுள்ளது.
நேட்டோப் படைகள் முற்றாக வெளியேறினால் ஆப்கானிஸ்த்தானில் மீண்டும் பெரும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் எனவும் பல கிராமப் புறங்களை தலிபான் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் ஆப்கானில் போதைப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் எதிரபார்க்கப் படுகிறது.
ஆப்கான் அதிபர் ஹமீத் ஹார்ஜாய்யிற்கு மேற்கு நாடுகள் பெருமளவில் நிதி உதவி செய்தன. அதை வைத்து அவர் நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தி மக்களுக்கு அவர் மீதான் நம்பிக்கையையும் பற்றையும் வளர்க்க வேண்டும் என மேற்கு நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் அவர் மோசடி மிக்க ஆட்சியை நடாத்தி மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். இதனால் தலிபானின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டின் பின்னரும் நேட்டோப் படைகள் இருப்பதை அதிபர் ஹர்ஜாய் விரும்புகிறார். தனது நாட்டின் படைத்துறையையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மேற்கு நாடுகள் கொடுப்பதாக உறுதியளித்த எட்டு பில்லியன்களுக்காக அவர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்.
அமெரிக்காவிற்கும் ஆப்கான் அதிபர் ஹமீத் ஹர்ஜாய்யிற்கும் இடையில் பகைமை வளர்வதற்கு வேறு காராணங்களும் உண்டு. ஆப்கான் ஆட்சியாளர்களின் உளவுத் துறையினர் தலிபான்களுடன் பேச்சு வார்த்தையை நடத்த முற்படும் போதெல்லாம் அமெரிக்கப் படையின் வலுக்கட்டாயமாகத் தலையிட்டு தலிபான்களை கைது செய்து விடுவார்கள்.
அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ஈராக்கும் ஆப்கானும் குடியரசுக் கட்சியினர் ஜோர்ஜ் புஷ் தலைமையில் உருவாக்கிய குப்பைகள் அதை மக்களாட்சிக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமா துப்பரவாக்குகிறார் எனக் கருதுகிறார்கள்.
அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது பெரும் தலையிடியான ஒரு செயலாகும். பெருமளவு தளபாடங்களை அது வெளியேற்ற வேண்டும். அதை உள்ளூரில் கால் விலை அரை விலைக்குக் கூட விற்க முடியாது. ஒரு ஒளிப்படப் பதிவுக் கருவியைக் கூட அது விட்டுச் செல்ல முடியாது. அவை தீவிரவாதிகள் கைகளுக்குச் செல்வது கூட ஆபத்தானது. அதிலுள்ள நேரத்துக்கு இயங்கும் பகுதி தீவிரவாதிகள் கைகளுக்குப் போனல் அதைவைத்து அவர்கள் குண்டுகளுக்குப் பொருத்தி நேரத்துக்கு வெடிக்கச் செய்யலாம். அமெரிக்கா பல தளபாடங்களை அழித்துவிட்டுச் செல்ல வேண்டும். சோவியத் படைகள் விட்டுச் சென்ற குப்பைகள் இப்போதும் ஆப்கானில் இருக்கின்றன. அமெரிக்கா ருமேனியாவூடாக தனது தளபாடங்களை எடுத்துச் செல்லஅந்த நாட்டுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
முழுமையாக அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஆப்கானில் தொடரவிருக்கும் நிகழ்வுகள் முக்கியமாக ஈரானின் காய் நகர்வுகள் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசுவதாகவே அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment