Monday 30 September 2013

ஈரான் மீதான் பொருளாதாரத் தடையும் அமெரிக்ககவின் பொருளாதாரத் தேவையும்

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது.

ஈரான் அணுக் குண்டைத் தயாரிப்பதற்காக யூரேனியத்தைப் பதப் படுத்துவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சொல்லிக் கொண்டிருக்கிறன. ஈரான் சமமாதான நோக்கத்திற்காகவே தான் யூரேனியத்தைப் பதப்படுத்துவதாக அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை தொடர்ந்து மேற்கொள்வேன் என அடம்பிடித்தது. ஈரான் அணு குண்டு தாயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதியாக அறிவித்தன. ஈரான் அசையவில்லை. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்கள் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தும் தனித்தனியாகவும் நடாத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஈரானின் அணு விஞ்ஞானிகள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலைக் கைவிடவில்லை. ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது விமானங்கள் மூம் தாக்குதல் நடாத்த வேண்டும் என இஸ்ரேல் அமெரிக்காவை வலியுறுத்தியது. பராக் ஒபாமா நிர்வாகம் பொறுமையக் கடைப்பிடித்து தந்திரமாகக் காய்களை நகர்த்தி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் அமூல் படுத்தியது. பன்னாட்டு வங்கி கொடுப்பனவு முறைமையான SWIFT இல் இருந்து தந்திரமாக ஈரானை வெளியேற்றியது.

தவிக்கும் ஈரானியர்கள்
ஈரான் பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்வது உண்மை. 2011இல் நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த  எரிபொருள் ஏற்றுமதி  2013இல் பாதியாக்குறைந்து விட்டது.  ஈரானில் இப்போது பணவீக்கம் 35 விழுக்காடாக உள்ளது. ஈரானிய நாணயமான ரியாலின் பெற்மதி 80 விழுக்காடு தேய்மானம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு ஈரானியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பூச்சியமாகவே இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. சரியான மருந்துகள் இன்றிப் பல ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் தன்மீதான் பொருளாதாரத் தடையை தனது நட்பு நாடுகளான ஈராக், துருக்கி ஆகியவற்றினூடாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. துருக்கியில் இருந்து ஏராளமான தங்கம் ஈரானுக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. இவை பொருளாதாரரத் தடையை மீறி ஈரான் செய்யும் ஏற்றுமதிகளின் வருமானமாகும்.

2013ஜூன் மாதம் ஈரானில் நடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையே முக்கியமாக அடிபட்டது. தீவிரப் போக்குடையவரும் மேற்கு நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற கருத்துடையவரும் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னிக்கு மிகவும் வேண்டப்பட்டவருமான சயீத் ஜலிலீதான் வெற்றி பெறுவார் என் எதிர் பார்க்கப்பட்டது.  மிதவாதப் போக்கும் சீர்திருத்தக் கொள்கையும் உடையவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani) என்ற வேட்பாளரை வெற்றி பெற ஈரானிய மதவாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் என பல அமெரிக்கா ஆய்வாளர்கள் எதிர்வு கூறி இருந்தனர். இவற்றுக்கெல்லாம் மாறாக பன்னாட்டு இராசதந்திரத்தில் அனுபவம் கொண்டவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani)  அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். ஹசன் ரொஹானிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகப் பல வன்முறைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்டன. ஹசன் ரொஹானியின் வெற்றி ஈரானிய மக்கள் அணுக்கூண்டிலும் பார்க்க பொருளாதாரப் பிரச்சனனயில் இருந்து ஒரு மீட்சியையே விரும்புகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியது.

ரொஹெய்னிக்கு அதிகாரம் வழங்கிய உச்சத்  தலைவர்

ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி குடியரசுத் தலைவர் ஹசன் ரொஹானிக்கு உலக அரங்கில் யூரேனியம் பதனிடுதல் மற்றும் பொருளாதாரத் தடை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளார்.  இது முன் எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாகும்.

நாக்கைத் தொங்கவிடும் அமெரிக்க வர்த்தகர்கள்.

ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் அது தமக்கு ஈரானுக்கு ஏற்றுமதியை பெருமளவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் என பல அமெரிக்க வர்த்தகர்கள் காத்திருக்கின்றனர். ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் உலகச் சந்தையில் எரி பொருள் விலையையும் குறைக்கும் வாய்ப்பு உண்டு. அமெரிக்காவினது ஈரானினதும் குடியரசுத் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் செப்டம்பர் மாதம்  ஆற்றிய உரைகள் இரு நாடுகளும் பொருளாதாரத் தடை நீக்கத்தால் நன்மை பெறக் காத்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் ஐநா பொதுச் சபையில் உரையாற்றி விட்டு நாடு திரும்பிய ரொஹெய்னிக்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அதே வேளை இசுலாமிய தீவிரவாதிகளால் முட்டைகளும் பாதணிகளும் அவர் சென்ற வாகனத் தொடரணி மீது வீசப்பட்டன. அவர்கள் சாத்தான் என்று வர்ணிக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவருடன் ரொஹெய்னி தொலை பேசியில் உரையாடியது அவர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் எதிர்ப்பு
அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதரத் தடையை நீக்கக் கூடாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரரன் தனது யூரேனியம் பதனிடும் செயற்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஆனால் இஸ்ரேல் இரகசியமாக அணுக் குண்டுகளைத் தயாரித்து வருகிறது. அணுக் குண்டுகளைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணணகளை உற்பத்தி செய்வதற்கான உதிரிப்பாகங்களை இஸ்ரேல் ஜேர்மனியில் இருந்து அண்மையில் இறக்குமதி செய்தது இஸ்ரேலிடம் அணுக்குண்டுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் நெருங்கி வந்தால் அது மத்திய கிழக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் வாஷிங்டனில் செயற்படும் வலிமை மிக்க இஸ்ரேலிய அரசியல் தரகர்கள்(lobbyist)  இதை நடக்க விடுவார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...