Friday 9 August 2013

அமெரிக்காவை அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை அதிகரிக்கிறது சீனா

உலகிலேயே அதிக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீர்வேக ஏவுகணைகளையும் (ballistic and cruise missiles) உற்பத்தி செய்யும் நாடாக சீனா தற்போது இருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடிய JL-2 எனப்படும் ஏவுகணைகள் 14,000 கிமீ (8,699மைல்கள்) பாய்ந்து தாக்கக் கூடியவை. அணுக்குண்டுகளை தாக்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகள் தென் சீனக் கடலில் இருந்தோ அல்லது போஹாய் கடலில் இருந்து வீசினாலே அமெரிக்காவைத் தாக்கக் கூடியவை.

சீனாவின் Type-094 (Jin-Class) அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில்  JL-2 எனப்படும் ballistic missile பொருத்தப்படவுள்ளன. இவை 1,050 முதல்  2,800 வரையிலான கிலோகிராம் எடையுள்ள  குண்டுகளைத் தாங்கிச் செல்லவும் கூடியவை. ஒரு ஏவுகணை இரண்டு முதல் எட்டு வரையிலான குண்டுகளைத் தாங்கிச் செல்லம் திறனுடையவை. இந்த ஏவுகணைகள் அடுத்த ஆண்டில் இருந்து பாவனையில் ஈடுபடுத்தப்படும்.

சீனாவிடம் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக்கூடிய Type-094 (Jin-Class) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் (nuclear-powered ballistic missile submarines (SSBN))மூன்று இருக்கின்றன. இந்தவகையான மேலும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை சினா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சீனா மட்டுமல்ல ஈரானும் வட கொரியாவும் தமது  நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளின் பாய்ச்சல் திறன்களை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இரு நாடுகளும் அமெரிக்காவைத் தாக்கக் கூடிய வல்லமை பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உலகிலேயே வலிமை மிக்கதாகக் கருதப்படும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பற் படையைச் சமாளிக்க சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை எண்ணிக்கை ரீதியிலும் தர ரீதியிலும் அதிகரித்து வருகிறது. சீனா 13,000கிலோமீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கினால் அவற்றின் மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைத் தாக்க சீனாவால் முடியும். ஆனால் 8000கிலோ மீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளையே பல தொழில்நுட்பப் பிரச்சனைகள் தோல்வியில் முடிந்த சோதனைகள் ஆகியவற்றின் மத்தியிலேயே உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம்.

அமெரிக்கா தனது நாடு மற்ற நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்க ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் முதற்கட்ட பொறிமுறை இஸ்ரேலில் காசாவில் இருந்து ஹமாஸ் போராளி அமைப்பு ஏவிய ஈரானிய ஏவுகணைகளுக்கு எதிராக 2012இல் சோதித்துப் பார்க்கப்பட்டது. இவை முற்றாக வெற்றியளிக்கவில்லை. இத் திட்டம் மேலும் மேபடுத்தப் பட வேண்டும் என சில அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது செலவு மிகுந்தது எனவும் முழுமையான பாதுகாப்பைத் தரவல்லன அல்ல எனவும் சிலர் வாதாடுகிறார்கள். எதிரி நாட்டில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட முயலும் பட்சத்தில் அவற்றை எதிரி நாட்டிலேயே வைத்து வெடிக்கச் செய்யும் பொறிமுறையையும் உருவாக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருக்கிறது.  அதிபர் பராக் ஒபாமா ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறார்.

அமெரிக்காவிற்கே இந்தளவு ஆபத்தென்றால் அயல்நாடான இந்தியாவின் நிலை?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...