ஆட்சியில் இருப்போரின் ஊழல், வேலைவாய்ப்பின்மை, வறுமை, தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம், காவற்துறையினரின்
முறைகேடுகள், தனிமனித சுதந்திரமின்மை ஆகியவை அரபு வசந்தம் எனப்படும்
அரபு நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்தன.
அமெரிக்க அரசும் இசுலாமியத் தீவிரவாதிகளும் வேறு முனையில் அரபு மக்களின்
உண்மையான பிரச்சனையை அறியாமல் மோதிக்கொண்டிருந்தன. அமெரிக்க உளவுத் துறையோ
இசுலாமியத் தீவிரவாதத் தலைமைகளோ அரபு வசந்தத்தை எதிர்பார்க்கவில்லை.
உலகெங்கும் தகவல்களைத் திருடி உலகில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் தனது பெருவிரலில்
இருக்க வேண்டும் என்ற இறுமாப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்க
உளவுத் துறையான சிஐஏ நிறுவனத்திற்கு அரபு வசந்தம் அதிலும் முக்கியமாக
எகிப்தியப் புரட்சி பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஆட்சியாளர்களுக்கு
எதிராக மனம் கொதித்துக் கொண்டிருந்த அரபு மக்களுக்கு
துனிசியாவில் காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காறி உமிழப்பட்டு
கடுமையாகத் தாக்கப்பட்ட மொஹமட் பௌஜிஜி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை
செய்தமை பெரும் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. துனிசிய தனித்தன்னாட்சியாளர்
பென் அலி பதிவியில் இருந்து விரட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து மும்மர்
கடாஃபி லிபியாவில் இருந்தும், ஹஸ்னி முபாரக் எகிப்தில் இருந்தும்
விரட்டப்பட்டார். சிரியாவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்ப்பலியுடன்
அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது. அது சியா-சுனி
முசுலிம்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. அரபு வசந்த்தில்
மக்களின் எழுச்சி துனிசியா, லிபியா, எகிப்து சிரியா, யேமன் ஆகிய நாடுகளில்
மட்டும் தொடங்கவில்லை. சவுதி அரேபியா, பாஹ்ரெய்ன். குவைத், அல்ஜீரியா,
ஈராக், மொரக்கோ, ஜோர்தான், ஓமான் போன்ற நாடுகளிலும் மக்கள்
ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
அரபு
வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி
ஆரம்பித்தது. அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள்
கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம்
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது
கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான
சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள்
அடக்கப்பட்டனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி
ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான
காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது. அது
அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப்
பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான
இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். சவுதி அரேபியா, ஜோர்தான் போன்ற வட
அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் உகந்தவை என்பதால்
அங்கு மக்களின் கிளர்ச்சிகள் இலகுவாக அடக்கப்பட்டன.
2011இன்
ஆரம்பப் பகுதியில் ஆரம்பமான அரபு வசந்தம் 2013இல் திசை மாறிப்போய்
இருக்கிறது. துனிசியாவில் அரபு வசந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்
ஒரு மதவாதியான அலி லாரயத் ஆட்சிக்கு வந்தார். அவரைக் கடுமையாக விமர்சித்த
எதிர்கட்சித் தலைவர் மொஹமட் பிராஹிமி 2013 ஜூலை 26-ம் திகதி
கொல்லப்பட்டார். இதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் இன்னும் ஒரு
எதிர்கட்சித்தலைவர் சோக்ரி பெலய்ட் கொல்லப்பட்டார். துனிசியப் பாராளமன்றம்
கலைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை துனிசியாவில் வலுத்து வருகிறது.
ஐம்பதிற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளமன்றம் கலைக்கப் படவேண்டும் எனச்
சொல்லி தம் பதவிகளைத் துறந்துள்ளனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் தாம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் பதவிக்காலம் முடியும் வரை தாம்
விலகப்போவதில்லை என்கின்றனர். துனிசியாவில் ஒரு உள்நாட்டுக் கலவரம்
எந்நேரமும் மோசமாக வெடிக்கலாம்.கொல்லப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களைச் சாட்டாக வைத்துக் கொண்டு கவிழ்க்கப்பட்ட ஆட்சியாளரான பென் அலியின் ஆதரவு ஊடகங்கள் நாட்டில் பெரும் கலவரத்தைத் தூண்டி விடுகின்றன.
லிபியாவில் மதவாதிகளின் பணிமனைகள்
தாக்கப்படுகின்றன. படைத்துறையினர் கொல்லப்படுகின்றனர். புதிதாக முளைத்த
ஆயுதக் குழுக்கள் படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகின்றன. உள்துறை
அமைச்சர் பதவி விலகப் போகிறேன் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
லிபியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்கலாம்.
பெரும்
இரத்தக்களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து
விலக்கிய எகிப்திய மக்கள் ஒரு இசுலாமியவாதிகளிடம் தமது ஆட்சியை
ஒப்படைத்தனர். அவர்கள் நாட்டில் இசுலாமியச் சட்டங்களை அமூலாக்குவதிலும்
தமது பிடியை ஆட்சியில் இறுக்குவதிலும் அதிக கவனம் செலுத்தினர். நாட்டின்
பொருளாதாரம் மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விளைவு
மீண்டும் மக்கள் கிளர்ச்சி. படைத்துறையினர் தலையிட்டு மொஹமட் மேர்சியை
பதவியில் இருந்து விலக்கினர். இப்போது எகிப்தில் மக்கள் இரு கூறாகப்
பிரிந்து கலவரம் செய்கின்றனர். மீண்டும் ஆட்சி படைத்துறையினரின் கையில்.
சிரியாவில்
ஹிஸ்புல்லா இயக்கம் ஆட்சியாளர்கள் பக்கமும் அல் கெய்தா இயக்கம்
கிளர்ச்சிக்காரர்கள் பக்கமுமாக நின்று மோதிக் கொள்கின்றன. சிரியாவில்
மக்கள் எழுச்சி திசைமாறி சிய-சுனி இசுலாமிய மோதலாக மாறி அங்கு பெரும்
இரத்தக் களரி நடக்கிறது.
சியா சுனி மோதல்
அரபு வசந்தம் திசைமாறிப் போய்க்
கொண்டிருப்பது வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும்
ஈரானுக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டியாகும். வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிரியாவில்
சியா-சுனி முசுலிம்களிடையான மோதலைப் வளரவிட்டுப் பார்த்துக்
கொண்டிருக்கின்றன . அது மற்ற
நாடுகளுக்கும் பரவினால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றன.
ஈரானின் பிராந்திய ஆதிக்கத் திட்டம்
ஈரான்
ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி
அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி
மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா
முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின்
அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது.
ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில்
இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித
தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது.
ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து
செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான்
இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட்
மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல்
கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான்.
ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன.
சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது
உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது
கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது.
ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக
எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச்
செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச்
செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும்
ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி
செய்கின்றன.
சவுதி - ஈரான் ஆதிக்க வெறி
சவுதி அரேபியாவும் ஈரானும் அரபு பிராந்தியத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக மோதிக் கொள்கின்றன. அவற்றிற்கான மோதல் களமாக அரபு வசந்தம் நிகழும் நாடுகள் மாறியுள்ளன. அங்கு புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் யாருடைய சார்பாக இருக்க வேண்டும் என்ற போட்டியால் அரபு வசந்தம் திசை மாறிவிட்டது.
அரபு வசந்தம் ஏற்பட்ட எந்த ஒரு நாட்டிலும் அமைதி ஏற்படவில்லை. சுபீட்சத்தை நோக்கி நாடு இட்டுச் செல்லப்படவில்லை. இதற்கான பொறுப்பை அரபுப் பிராந்தியத்தில் ஆதிக்கத்திற்குப் போட்டி போடும் நாடுகளும் இசுலாமியத் தீவிரவாதிகளும் ஏற்க வேண்டும். இவர்களில் எந்திஅ ஒரு பிரிவினரும் மக்களின் நலனுக்காக எந்த ஒரு விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லை.
ஹிஸ்புல்லாவும் அல் கெய்தாவும் உலகிலேயே பலமிக்க
போராளி அமைப்புக்களாகும். பாரிய பொருளாதாரத் தடைகள் மத்தியிலும் அணுக்
குண்டு உற்பத்தியை நோக்கி நகரும் ஈரான் இந்த இரண்டு அமைப்புக்களுடன்
இணைந்தால் அவர்களால் உலகச் சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
அரபு வசந்தம் மேற்கு நோக்கி நகர்வதை அவர்களால் தடுக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment