Monday, 1 July 2013

ஐரோப்பாவை ஜேர்மனி புதியவிதமகாக் கைப்பற்றுகிறதா?

ஐநூறு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பும் சந்தையுமான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முன்னணி நாடு ஜேர்மனியாகும். பெரும் பொருளாதாரச் சரிவை எதிர் கொண்ட இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு ஜேர்மனி கைகொடுத்து உதவியது. யூரோ நாணயம் இல்லாமல் போவதில் இருந்து பாதுகாக்க ஜேர்மனி பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக ஜேர்மனி எதை எதிர்பார்க்கிறது?

உலகின் இரு பெரும் போரை ஆரம்பித்தது ஜேர்மனி. ஐரோப்பாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஜேர்மனி இரண்டு தடவை எடுத்த முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேர்மானிய சமூகவியலாளர் உல்ரிச் பெக் (Ulrich Beck) தனது புத்தகத்தில் ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்கம் இப்போது போரில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என வாதிடுகிறார்.

கடன் பளுவுக்குள் சிக்கிய தென் ஐரோப்பிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி அங்கு தனது நிபந்தனைகளைப் புகுத்தி வருகிறது ஜேர்மனி. தமது அரசுகளின் சிக்கன நடவடிக்கையால் பாதிப்பப்பட்ட பல மில்லியன் ஐரோப்பியர்கள் தமது வாழ்கை முறைமை பெர்லின் (ஜேர்மன் தலைநகர்) இருந்தும் பிரஸ்ஸல்ஸில் (ஐரோப்பிய ஒன்றியத் தலைநகர்) இருந்தும் எடுக்கப்படும் தீர்மானங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகின்றனர். தமது வாழ்வாதாரத்தை ஜேர்மனி பறித்து விட்டது என்கின்றனர்.ஜேர்மானிய இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் அதிபர் அஞ்சேலா மெர்க்கெல் ஜேர்மனியச் சிந்தனைகளை பொருளாதார வலுவிழந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகுத்தி வருவதாக சமுகவியலாளர் உல்ரிச் பெக் கருதுகிறார். மேலும் அவர் அஞ்செலா மெர்கெல்  ஐரோப்பாவின் ஒரு முடிசூடா ராணியாக மாறிவருகிறார் என்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியும் இணைந்த போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியது. கடுமையான சிக்கன நடவடிக்கையின் பின்னர் ஜேர்மனி முதல்தர ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது. ஜேர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளை உலகச் சந்தையில் போட்டியிடக்கூடிய நாடுகளாகவும் உற்பத்தித் துறையில் வளர்முக நாடுகளுக்கு ஈடானவையாகவும் மாற்ற உதவி செய்கின்றது என்கின்றனர் ஜேர்மன் ஆட்சியாளர்கள். ஜேர்மனியர்களைப் பொறுத்தவரை "கடின உழைப்புக்கு மாற்று வழி இல்லை; வரிசெலுத்துவது எம் கடமை". ஜேர்மனை தனது மக்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்கிறது. எமது பயிற்றுவிக்கும் முறைமை வேலைக்கு ஆட்களை அமர்த்துவோர்க்கு உகந்ததாக இருக்கிறது என ஜேர்மனியர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். சில ஜேர்மனியர்கள் கிரேக்கர்கள் போன்ற ஐரோப்பாவின் சோம்பேற்களுக்கு ஜேர்மனியப் பண்ம் வீணாகிறது என்கின்றனர். கிரேக்கம், சைப்பிரஸ் போன்ற நாடுகளுக்கு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க ஜேர்மனின் நிர்ப்பந்தித்தது. அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் சிரமத்தை ஜேர்மனியர்கள் "துயரம் அனுபவித்தல் தூய்மையாக்கிறது" என்கின்றனர்.

கவலைப்படாத பிரித்தானியாவும் ஆத்திரப்படும் இரசியாவும்
ஐரோப்பாவில் ஜேர்மனியன் ஆதிக்கம் வளர்ந்து வருவதையிட்டு பிரித்தானியா பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பாதி-இணைப்பு நிலையைப் பேணிக்கொண்டு தனது தனித்துவத்தையும் தனது நாணயமான ஸ்ரேலிங் பவுண்டையும் பாதுகாத்துக் கொண்டு இருக்க பிரித்தானியா விரும்புகிறது. ஜேர்மனி மீண்டும் படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாறி பிரித்தானியா போல் தன்னுடன் ஒரு பங்காளியாக இணைவதை ஐக்கிய அமெரிக்கா விரும்புகிறது. ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்க வளர்ச்சியால் அதிக ஆத்திரமடையும் நாடாக இரசியா இருக்கிறது. 1991இல் நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் முன்பு போல் ஒரு உலக ஆதிக்க நாடாக மாற இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கிறது. தனது சோவித் ஒன்றிய நாடுகளும் முன்னாள் நட்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருவது இரசியாவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது. ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான எல்லைக் கோடு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போல்ரிக் நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்த போது முந்தி விழுந்து அவற்றை அங்கீகரித்தது ஜேர்மனி. அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குரிய உகந்த பொருளாதார சூழ் நிலையை அந்த நாடுகளில் உருவாக்க ஜேர்மனி பெரிதும் உதவியது. 1994இல் இரசியப் படைகள் போல்ரிக் நாடுகளில் இருந்து வெளியேறுவதற்கும் ஜேர்மனி உதவியது. போல்ரிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தவுடன் இரசியா அந்த நாடுகளுக்கு தான் விற்பனை செய்யும் எரிவாயுக்களின் விலைகளைக் கண்டபடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாடுகளில் மாற்று எரிவள உபயோகங்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களைச் செய்தது.

இரண்டு பெரிய போர்களின் பின்னர் தமது எல்லைகளை தீர்மானித்துக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை ஜேர்மனி தனது பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒன்றுபட்ட இணைப்பாட்சி நாடாக்கி அழிக்க முயலாமல் பார்த்துக் கொள்ளும் அறிவும் அனுபவமும் மேற்கு ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது. ஜேர்மனிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பல நாடுகளைப் பொறுத்தவரை தற்காலிகமானதே. இதை நன்கு உணர்ந்து செயற்படும் நாடு பிரான்ஸ் ஆகும். போல்ரிக் நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஒன்றாகுவது இரசியாவை ஆத்திரப்படுத்தி இன்னும் ஒரு பெரும் போருக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கும் ஜேர்மனிக்கும் இருக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...