பத்து நாட்கள் நடந்த தொடர் மோதலின் பின்னர் 04/06/2013 புதன்கிழமை சிரிய
அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவான படையினர் அவருக்கு எதிரான
கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து குவாசியருக்கு அண்மையில் உள்ள கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த தபா விமான நிலையத்தை மீளக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் டமஸ்கஸ் நகரின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசங்களையும்
அவர்கள் மீளக் கைப்பற்றியுள்ளனர்.
குவாசியர் நகரைக் கட்டுப்படுத்துவர்களால் சிரியாவின் மத்திய பகுதியைக் கட்டுப்படுத்த முடியும். சிரியாவின் மத்திய பகுதியைக் கைப்பற்றுபவர்களால் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார் பிரிகேடியர் ஜெனரல் யஹியா சுலைமான்.
தபா விமான நிலையம்
கிளர்ச்சிக்காரர்களுக்கும் அசாத்தின் படைகளுக்கும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். இது அவர்களின் விநியோகப் பாதையில் முக்கியத்துவமானதாகும்.
சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள கிளர்ச்சிக்காரர்களிற்கும்
தெற்குப் பிராந்தியத்தில் உள்ள கிளர்ச்சிக்காரர்களிற்கும் இடையிலான
தொடர்புகளைத் துண்டிக்க தபா விமான நிலையத்தையும் அதை ஒட்டிய
பிராந்தியங்களையும் கைப்பற்றியது அசாத்திற்கு உதவும். வேறு பல முனைகளிலும்
அசாத் ஆதரவுப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைப் பின்வாங்க வைத்துள்ளனர்.
டமாஸ்கஸ் நகரைச் சூழவுள்ள பிராந்தியத்தில் 80 விழுக்காட்டைத் தாம் மீளக்
கைப்பற்றியதாக சிரிய அரசு சொல்கிறது.
அரபு வசந்தத்தில் 2011 மார்ச்
மாதம் தொடங்கி தொண்ணூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்டும் பல
இலட்சக் கணக்கானவர்களை இடப்பெயர்விற்கு உள்ளாக்கியும் தொடரும் சிரிய
உள்நாட்டுப் போரில் 2013 ஏப்ரலில் இருந்து பஷார் அல் அசாத்திற்கு எதிரான
கிளர்ச்சிக்காரர்கள் பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றனர். கிளர்ச்சிக்காரர்களிடை பெரும் படைக்கலன் தட்டுப்பாடு நிலவுகின்றமை இதற்குக் காரணமாகும். தமக்கு படைக்கலன்கள் கொடுக்கும் படி அவர்கள் அமெரிக்காவைக் கெஞ்சினர்.
சியா-சுனி மோதல்
சியா
முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்த
பிரித்தானியாவில் மருத்துவம் படித்த பஷார் அல் அசாத்தும் அவரது தந்தையும்
1970-ம் ஆண்டிலிருந்து சுனி முசுலிம்களைப் பெரும்பானமையாகக் கொண்ட சிரியாவை
ஆண்டு வருகின்றனர். அசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விடாமல் இருக்க சியா
இசுலாமிய நாடான ஈரானும் சியா இசுலாமியப் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவும்
பெரிதும் உதவுகின்றன. ஹிஸ்புல்லாப் போராளிகள் சிரிய உள்நாட்டுப் போரில்
நேரடியாக ஈடுபட்டுள்ளனர். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான
ஐம்பதினாயிரம் படையினர்
இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா
அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம்
இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன.
அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில்
இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக்
கைப்பற்றினால் அது மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில்
தந்திரோபாய
சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது.
ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக்
கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் அசாத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களை சீனாவும் இரசியாவும் இணைந்து இரத்துச் செய்தன. மூன்றாவது தீர்மானம் இரசியாவால் இரத்துச் செய்யப்பட்டது. சிரியாவானது
ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை
இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி
அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகின்றன.
ஹிஸ்புல்லாவை களத்தில் இறக்கிய ஈரான்
சிரியக் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் ஹிஸ்புல்லாப் போராளிகள் நடுநிலை வகித்தனர். ஆனால் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தால் தான் மத்திய கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவேன் என உணர்ந்த ஈரான் ஹிஸ்புல்லாவை அசாத்திற்கு ஆதரவாகக் களமிறக்கியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நன்கு பயிற்றப்பட்ட போராளிகள். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிலர் தமது இயக்கத்தின் எதிர்காலம் சிரியாவில் பணயம் வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகின்றனர். சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சுனி இசுலாமியர் யூதர்களிலும் மோசமான எதிரிகள் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்கின்றனர். வேறுபல நாடுகளில் இருந்தும் சியா முசுலிம் போராளிகள் பலர் அசாத்தின் படைகளுடன் இணைந்துள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சில தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிரியப் போரில் இருந்து வெளியேறாவிடில் மேலும் தாக்குதல்கள் நடக்கும் எனவு எச்சரித்துள்ளனர். அண்மைக்காலங்களாக ஹிஸ்புல்லா அதிக அளவிலான தனது போராளிகளை சிரியாவின் பல முனைகளில் களமிறக்கியுள்ளது. சுதந்திர சிரியப்படையின் தளபதி சலீம் இத்திரிஸ் லெபனானில் ஹிஸ்புல்லாமீது போர் தொடுக்கத் தயார் என்கிறார். மேலும் அவர் தமது படைகள் பின்னடைவைச் சந்திக்கவில்லை என்கிறார்.
பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள்
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல வேறுபட்ட
இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா
படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும்
வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை
பயங்கரவாத அமைப்புக்களாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப்
படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய
ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக
சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். இவற்றுடன் இசுலாமிய
சகோதரத்துவ அமைப்பு போன்ற மதவாத அரசியல் கட்சிகளும் சிரியாவில்
செயற்படுகின்றன. அசாத்தின் படைகளை பல முனைகளில் பின்வாங்கச் செய்த
கிளர்ச்சிக்காரர்கள் தலைநகர் டமஸ்கஸை நெருங்கும் வேளையில் தமக்குள் மோதத்
தொடங்கினர். இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இரசியாவும் பல புதிய தரப் படைக்கலன்களை சிரியாவிற்கு வழங்கிவருகிறது.
S-300 எனப்படும் விமான மற்றும் சீர்வேக ஏவுகணைகளை எதிர்த்தழிக்கும்
முறைமையை சிரியாவிற்கு வழங்க இரசியா ஒத்துக் கொண்டது இஸ்ரேலை கடும்
விசனத்திற்கு உள்ளாக்கியது. S-300 பாதுகாப்பு முறைமை சிரியா வந்தால் அது
செயற்பட முன்னர் அதை இஸ்ரேல் தனது விமானத்தாக்குதல்கள் மூலம் தாக்கி
அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தடவை சிரியாமீது
இஸ்ரேல் விமானத் தாக்குதலை நடாத்தியுள்ளது. சிரியாவ்
ஒபாமாவின் செங்கோடும் சரின் வாயுக் குண்டும்
சிரியாவில்
சரின் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அங்கிருந்து கடத்தி
வந்ததாக பிரான்ஸும் பிரித்தானியாவும் தெரிவிக்கின்றன. அசாத்தின் படைகள்
வேதியியல் படைக்கலன்களைப் பாவித்ததாக 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து
செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அசாத் வேதியியல் படைக்கலன்கள்
பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியதாக அமையும் என்று பலதடவை அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார். ஒரு துளி சரின் ஒரு ஆளைக் கொல்லக்
கூடியது. ஆனால் அமெரிக்கா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்
இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை
அல் கெய்தா ஆதரவு ஜபத் அல் நஸ்ரா
இயக்கத்தினரின் இருப்பது அமெரிக்காவின் தயக்கத்திற்குக் காரணம் எனச்
சொல்லபடுகிறது. தனது தலையீடு இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா சிரியாவில் தலையிடாமல் இருப்பது பல தரப்பில் இருந்தும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரியக்
கிளர்ச்சிக்காரர்களுக்கு உறுப்பு நாடுகளுக்கு விதித்த தடையை
நீக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரித்தானியாவையும் பிரான்ஸ்சையும் தமக்கு
படைக்கலன்களை வழங்கும் படி சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கெஞ்சத்
தொடங்கியுள்ளனர். சிரியப் பிரச்சனையைப் பேச்சு வார்தை மூலம் தீர்க்க
ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்படவுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை முடியும்
வரை பிரித்தானியாவும் பிரான்ஸும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு
படைக்கலன்களை கொடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. அதற்குள் அசாத்தின் படைகள்
கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment