Tuesday 4 June 2013

குழம்பிய ஈராக் குட்டையில் மீன் பிடிக்கும் சீனா

அமெரிக்கா தலைமையில் நேட்டோப் படைகள் ஈராக்கில் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை சதாம் ஹுசேய்ன் வைத்திருக்கிறார் அதை அழிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு  அந்த நாட்டை ஆக்கிரமித்தன. ஆனால் அவர்கள் பேழிவு விளைவிக்கும் படைக்கலன்கள் எதையும் கண்டு பிடிக்கவில்லை.

சியா முசுலீம்களைக் கொண்ட ஈரானை எதிர்க்கும் ஆட்சியாளராக சதாம் ஹுசேய்ன் இருந்தார். இப்போதைய ஈராக்கிய ஆட்சியாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற ஈரான் ஈராக்கினூடாக படைக்கலன்களை அனுப்புகிறது. சதாமின் ஆட்சியின் போது ஈராக்கில் சீரான மின் விநியோகம் இருந்தது, தூய்மையான நீர் மக்களுக்குக் கிடைத்தது, அமெரிக்க வர்த்தகர்கள் உள்ளூர் வர்த்தகர்களை பாதிக்கவில்லை, நகரத் தெருக்களில் அடிக்கடி குண்டுகள் வெடிக்கவில்லை.

சதாமின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. ஒபெக் நாடுகளில் சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ஈராக் மாறியுள்ளது. தற்போது ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியில் அரைப்பங்கு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈராக்கிய எண்ணெய் வயல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான Exxon Mobil Corporation இடமிருந்து சீனா வாங்கவிருக்கிறது. சதாம் ஆட்சியில் இருக்கும் போது ஈராக்கிய எண்ணெய் உற்பத்தியும் ஏற்றுமதியும் பொருளாதாரர்த் தடைகளால் பாதிப்படைந்திருந்தன. தற்போது சீனா ஈராக்கை சுரண்டும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. தனது உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்காவிடில் அது  ஆட்சியாளர்களுக்கு எதிரான பெரும் கிளர்ச்சியில் முடியும் எனக் கருதும் சீனா அபிவிருத்திக்கான உதவி என்ற போர்வையிலும் முதலீடு என்ற போர்வையிலும் தனது மக்களை பல நாடுகளுக்கு அனுப்பி அங்கு பணிபுரிய வைக்கிறது.  ஈராக்கில் ஆண்டுதோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலிட்டு அங்கு நூற்றுக்கணக்கான சீனர்களை வேலைக்கு அமர்த்திவருகிறது.

சில அமெரிக்க பாதுகாப்புத் துறை  நிபுணர்கள் ஈராக்கில் தாம் சீனாவிடம் தோல்வியடைந்து விட்டதாகக் க்ருதுகின்றனர். ஈராக்கை ஒட்டிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு நிலை கொண்டு "அமைதியைப் பேண" சீனாவிற்கு பாதுகாப்பாக எண்ணெய் வழங்கல்கள் நடக்கின்றன என்கின்றர் அவர்கள். ஈராக்கில் சீனா தனது தொழிலாளர்கள் வசதியாகப் போய்வர சொந்த விமான நிலையத்தையும் உல்லாச விடுதிகளையும் அமைத்துள்ளது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் சீனா ஈராக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்கின்றனர். ஈராக்கிய எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பும் சீனக் கொள்வனவும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏறாமல் இருக்க உதவும் என அவர்கள் கருதுகின்றனர். ஈராக்கிய அரசுக்கு அதிக பணம் கிடைப்பதும் பொருளாதாரம் மேம்படுவதும் ஈராக்கின் பிரதேசவாதம் பிரிவினைவாதம் போன்றவற்றால் உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வலுவைக் கொடுக்கின்றன.  மேலும் சீன அரச வர்த்தக நிறுவனங்கள் உள்ளூர் அரசியலில்தலையிடாமலும் இருக்கின்ற்ன.

ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு சீனர்களின் எளிமையும் அவர்கள் பழகும் விதமும் பிடித்திருக்கிறது. மேற்கு நாடுகளின் முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் சீன முதலீடுகள் துரிதமாகவும் ஆபத்துக்களைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமலும் செய்யப்படுவதாக ஈராக்கிய ஆட்சியாளர்கள் சொல்கின்றனர். சீனாவிற்கும் மேற்கு நாடுகளிற்கும் இடையான போட்டி மோசமடையாம ஈராகிய ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளாவிடில் மீண்டும் ஈராக் எரியலாம்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...