சிரியாவின் தொடரும் உள் நாட்டுப் போர், பொங்கும் துருக்கி, குண்டுகள்
வெடிக்கும் ஈராக் ஆகியவற்றின் மத்தியில் அணு உலையில் கொதிக்கும் ஈரானில்
தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஈரானைப் பற்றிய
அறிஞர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலின் கீழ் ஈரான்
ஈரான் அணுக்குண்டு உற்பத்தியில் தீவிரமாக இருப்பதால் அது அமெரிக்காவினது போர் மிரட்டல், இணையவெளித் தாக்குதல், ஆளில்லா விமானங்களால் வேவு பார்த்தல், பொருளாதாரத் தடை ஆகியவற்றிற்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலும் ஈரானிற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
சபைகள் நிறைந்த ஈரான்.
ஈரானியத் தேர்தல் சற்று வித்தியாசமானது. அதன் அதிகாரக் கட்டமைப்பும் சற்று வித்தியாசமானது. ஈரானின் அதிகாரமிக்கவராக அதன் உச்சத் தலைவரான தற்போது கொமெய்னி அயத்துல்லா அலி கமெய்னி இருக்கிறார். உச்சத்தலைவரை அறிஞர் சபை(Assembly of Experts) தேர்ந்தெடுக்கும்.
அவரின் கீழ் படைத்துறை அணு ஆராய்ச்சித் துறை உட்பட பல முக்கிய துறைகள்
இருக்கின்றன. ஈரானிய அதிபரின் கீழ் இருக்கும் துறைகளில் முக்கியமானது
நிதித் துறை. ஈரானில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளமன்றமும்
இருக்கிறது. அறிஞர் சபை(Assembly of Experts) எட்டு ஆண்டுகளுக்கு
ஒரு தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 88 உறுப்பினர்களைக் கொண்டது.
உச்சத்தலைவரை இச்சபையால் பதவி நீக்கமும் செய்ய முடியும். செனட் சபை போல்
செயற்படும் பாதுகாவலர் சபையும்
(Guardian Council)இருக்கிறது. இதன்12 உறுப்பினர்களில் 6 பேர் உச்சத்
தலைவராலும் மீதி 6 பேர் பாராளமன்றத்தாலும் தெரிவு செய்யப்படுவர். ஈரானில்
அதிபர் தேர்தலில்
போட்டியிடுபவர்கள் முதலில் தேர்தல் சபையினதும் பின்னர் பாதுகாவலர்
சபையினதும்
(Guardian Council) அங்கீகாரம் பெறவேண்டும். பெண்கள் போட்டியிடுதல்
மறுக்கப்படுகிறது. இம்முறை தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உட்பட 689
பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டு
போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அயத்துல்லா அலி கமைனிக்கு உகந்தவர்கள்
மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட எட்டு வேட்பாளர்களில் இருவர் போட்டியில் இருந்து விலகிக்
கொண்டனர்.
பிழையாகிப் போன எதிர்பார்ப்பு
தீவிரப் போக்குடையவரும் மேற்கு
நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற
கருத்துடையவரும் உச்சத் தலைவருக்கு மிகவும் வேண்டப்பட்டவருமான சயீத்
ஜலிலீதான் வெற்றி பெறுவார் என்றும் மிதவாதப் போக்கும் சீர்திருத்தக்
கொள்கையும் உடையவரான ஹசன் ரொஹானி
(Hassan Rohani) என்ற வேட்பாளரை வெற்றி பெற ஈரானிய மதவாதிகள் அனுமதிக்க
மாட்டார்கள் என பல அமெரிக்கா ஆய்வாளர்கள் எதிர்வு கூறி இருந்தனர்.
இவற்றுக்கெல்லாம் மாறாக பன்னாட்டு இராசதந்திரத்தில் அனுபவம் கொண்டவரான ஹசன் ரொஹானி
(Hassan Rohani) அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். ஹசன் ரொஹானிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகப் பல வன்முறைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்டன.
உச்ச முடியாத் உச்சத் தலைமை
ஈரானில்
உச்சத்தலைமையை ஆதரிக்கும் தீவிரப்போக்குடைய பழமைவாதிகள், உச்சத் தலைமையுடன் உடன்பட்டுச்
செயற்படும் சீர்திருத்தவாதிகள், உச்சத் தலைமையை மறுக்கும் தாராண்மைவாதிகள்
என மூன்று பெரும் பிரிவினர் இருக்கின்றனர். இதில் தாராண்மைவாதிகள்
தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டவர்களில் சீர்திருத்தவாதியான ஹசன்
ரொஹானி வெற்றி பெற்றுள்ளார். ஹசன்
ரொஹானி ஒரு சீர்திருத்தவாதி எனச் சொல்லப்பட்ட போதிலும் அவரது பெரும்பான்மையான அரசியல் வாழ்வு பழமைவாதிகளுடனேயே இருந்தது. படைத்துறை ஆலோசகராக, பன்னாட்டு இராசதந்திரியாக, அணுவலுப் பேரப்பேச்சாளராக, இப்படிப் பலதரப்பட்ட துறைகளில் ஹசன்
ரொஹானி செயற்பட்ட போதெல்லாம் உச்சத்தலைமைக்கு கீழ்ப்படிந்தவராகவே செயற்பட்டார். இவர் பலர் எதிர்பார்ப்பது போன்ற ஒரு "சிறந்த சீர்திருத்தவாதி" அல்ல எனச் சிலர் வாதிடுகின்றனர். ஈரானில் ஏற்பட்டது ஆட்சி மாற்றமல்ல ஆனால் ஒரு அணுகு முறை மாற்றத்திற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கருதப்படுகிறது.
பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்த தேர்தல்
அதிக இளம் வயதினரைக் கொண்ட ஈரானில்17 விழுக்காட்டினர் வேலையின்றி இருக்கின்றனர். பணவிக்கம் 22 விழுக்காடு. 40 விழுக்காடு மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஹசன் ரொஹானியின் வெற்றி ஈரானிய
மக்கள் அணுக்குண்டு தயாரிக்கும் தலைவரிலும் பார்க்க தமது தனிமனித
சுதந்திரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பன்னாட்டு உறவையும்
மேம்படுத்தக் கூடிய ஒரு தலைவரை விரும்புகின்றனர் என்பதை எடுத்துக்
கட்டுகிறது. 64 வயதான ஹசன் ரொஹானி 2003ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை ஈரானின்
அணு வலுத்துறை பேரப்பேச்சுவார்த்தையாளராக இருந்தவர். ஸ்கொட்லாந்துப்
பல்கலைக் கழகமொன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற ரொஹானி ஈரானின் உச்ச
பாதுகாப்புச் சபைச் செயலராகவும் இருந்தவர். தற்போதைய உச்சத் தலைவர்
கொமெய்னியுடன் நல்ல உறவைப் பேணுபவர். ஹசன் ரொஹானியால் பொருளாதாரச்
சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியும் ஆனால் பொருளாதாரத் தடைக்குக் காரணமான
அணுக் குண்டு உற்பத்தியை நோக்கிய ஈரானின் முன்னேற்றத்தை தடுக்க முடியுமா
என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வி. அணு உற்பத்தித் துறை உச்சத் தலைவர்
கொமெய்னியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஈரானிய மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுமா?
ஈரானிய மக்கள் சமூகவிடுதலையையும் பொருளாதார மேம்பாட்டையும் விரும்புகின்றனர் என்பதைத் தேர்தல் முடிவு சுட்டி நிற்கிறது. இதை ஈரானிய உச்சத் தலைமை ஏற்றுக் கொண்டு ஈரானில் மாற்றங்களை ஏற்படுத்த ஹசன்
ரொஹானிக்கு அனுமதி கொடுக்குமா? அல்லது வெளிநாட்டு வலுக்கள் ஈரானிலும் அரபு வசந்தம் என்னும் பெயரில் பெரும் கிளர்ச்சி ஒன்றிற்கு தூபம் போட சந்தர்ப்பம் வழங்கப்படுமா?
ஈரானின் பிராந்திய ஆதிக்கம்
ஈரான்
லெபனானிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இயங்கும் போராளிக் குழுக்களுக்கும்
ஜப்பானில் இயங்கும் செம்படை, அமெரிக்காவில் இயங்கும் இரகசியப்படை, குர்திஷ்
போராளிக் குழுக்கள், சூடானில் இயங்கும் இசுலாமியப் போராளிக்குழுக்கள்
போன்ற பல போராளிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. சியா முசுலிம்களைப்
பெரும்பான்மையினராகக் கொண்ட ஈரான் சவுதி கட்டார் போன்ற சுனி முசுலிம்களை
அதிகமாகக் கொண்ட நாடுகளுடன் நல்ல உறவில் இல்லை. சுனி முசுலிம்களைப்
பெரும்பான்மையினராகக் கொண்டாலும் சியா முசுலிம்களின் ஒரு பிரிவு
இனக்குழுமமான அலவைற்றினரின் ஆட்சியின் கீழ் சிரியா இருக்கிறது. தனது ஒரே
ஒரு நட்பு நாடான சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு ஈரான்
பேருதவி செய்து வருகிறது. ஈரான் தனது படையினர் 4000 பேரை சிரியாவிற்கு
அனுப்பும் என அறிவித்ததும் பஷார் அல் அசாத்தின் படைகள் அலேப்பே நகரைச்
சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து மீளக் கைப்பற்றுவதை அனுமதிக்க
முடியாது என துருக்கி அறிவித்ததும் கட்டார் நாட்டின் நிதி உதவியில்
தங்கியிருக்கும் எகிப்த்து சிரியாவுடன் தனது உறவை முறித்துக் கொள்வதாக
அறிவித்ததும் சிரியாவில் ஒரு விமானப்பறப்பு தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தை
உருவாக்குதை அமெரிக்கா கருதுவதும் மத்திய கிழக்கில் பெரும் படை மோதலை
உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment