Thursday, 16 May 2013

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா? சுதந்திரப் போருக்கு எதிரான பயங்கரவாதமா?

"முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம். விழவிழ எழுவோம்."  இது அவசியமானதும் தேவையானதுமான முழக்கம் என்கின்றனர் சிலர். "படைக்கலன்கள் மட்டும்தான் மௌனிக்கப்பட்டன போராட்டம் முடியவில்லை. அது வேறுவடிவத்தில் தொடரும்." இது சரியான நிலைப்பாடுதான் என்கின்றனர் சிலர்.

மாற்றுக் கருத்துக்கள்
"வெளிப்படைத்தன்மை இல்லாமல் எமது போராட்டம் நடந்துவிட்டது. அதனால் அது தோல்வியடைந்து விட்டது." என்று அர்த்தம் கற்பிக்கின்றனர் சிலர்.  "மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி எமது போராட்டம் நடக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை" என தத்துவம் பேசுகின்றனர் சிலர்.

முற்போக்கா போகாமல் குறுக்கால போனாங்கள்

"ஒடுக்கப்பட்ட ஐரிஸ் மக்களுடனோ, அடக்கப்பட்ட சிங்களத் தொழிலாளர்களுடனோ, நசுக்கப்பட்ட இந்திய தலித்துக்களுடனோ நாம் கைகோர்த்துப் போராடாமல்

மாற்றானின் கருத்துக்கள்

"பிராந்திய வல்லரசு இந்தியாவை அனுசரித்துப் போகாத படியால்தான் எமது போராட்டம் தோற்றது.  நாம் அந்தத் தவறை உணர்ந்து இனி இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும்" இப்படிப் போதிக்கின்றனர் சிலர். "இதைப்பற்றி ஒரு அருமையான கட்டுரையை நான் எழுதினனான்" என்கிறார் ஒருவர்.  "ஒண்டும் வேண்டாம். இனியும் ஒரு அழிவு வேண்டாம். எல்லாத்தையும் விட்டுட்டு பேசாமல் இருப்பம்" எனச் சலிக்கின்றனர் சிலர்.

புலிக்கொடியை மடிச்சு வையுங்கோடா

இனிப் புலி என்ற கதையே வேண்டாம். உந்தப் புலிக்கொடியை இனி மடிச்சு வையுங்கோ. நாங்கள் ஒரு நியாயமான போராட்டத்தை மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி முன்னெடுத்து பன்னாட்டு மட்டத்தில் எமது போராட்டத்தை எடுத்துச் சென்று நாம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும்" என வீராப்புப் பேசுகின்றனர் சிலர்.

ஒன்றாக இணைவோம்
"எல்லா அமைப்புக்களையும் ஒன்றாக இணைத்து இனி ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். யாரையும் துரோகி என்று சொல்லக் கூடாது" என்றும் சிலர் சொல்கின்றனர்.

காலம் மாறக் கருத்து மாறுகிறது.
"2007இல் எங்களுக்கு ஒண்டும் வேண்டாம் எங்களை இப்படியே நிம்மதியா இருக்க விட்டால் காணும்" என்றவர்கள் 2009இல் எல்லாத்தையும் தொலைச்சிட்டு எங்களை நடுத்தெருவில் விட்டிட்டாங்கள்" என்றார்கள். இன்று "அவங்கள் இருந்திருந்தால் இப்படியேல்லாம் நடக்குமா?" என்கிறார்கள்.

பன்னாட்டு மயப்படுத்தி விட்டோம்
எமது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையால் விசாரிக்கப்பட்டதுடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; எமது போராட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; தமிழகத்தில் மாணவர்கள் பொங்கி எழுந்து விட்டனர்; பொதுநலவாய நாடுகள் சபையில் முப்பது நாடுகள் இலங்கையில் அதன் உச்சி மாநாடு நடப்பதை விரும்பவில்லை; உலகின் எல்லா முன்னணி ஊடகங்களும் எமது பிரச்சனையைப் பற்றி குறிப்பிடுகின்றன. மொத்தத்தில் எமது பிரச்சனை பன்னாட்டு மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது இப்படி ஆர்ப்படிக்கின்றனர் சிலர்.

9/11இன் பின்னர் மோசமான உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம்.
உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம் 1991 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மோசமாகியது. அதன் பின்னர் உலகத்தின் காவற்துறை அதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்துக் கொண்டது. 2001 செப்டபர் 11-ம் திகதி நடந்த அமெரிக்க நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனத்தை மேலும் மோசமாக்கியது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது மட்டும் போர்ப் பிரகடனம் செய்யலாம் என இருந்த நிலமையை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களான 1368உம் 1373உம் தனிப்பட்டவர்களால் நடாத்தப்படும் அமைப்புக்கள் மீதும் ஒரு நாடு போர்ப்பிரகடனம் செய்யலாம் என மாற்றியது. எல்லை தாண்டிச் சென்று கொல்லுதல், ஆட்கடத்தல், காணமற் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான விசாரணை, சட்டத்திற்குப் புறம்பான சிறை, சட்டத்திற்குப் புறம்பான சித்திரவதை ஒழுங்காக நடைபெற்றது. இதைப் பாவித்து அமெரிக்கா உலகப் பந்தையே ஒரு போர்க்களமாக்கியது. இதை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக வஞ்சகமாகத் திசைதிருப்ப கொழும்பிற்கு புது டில்லி உதவியது. இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதமும் இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதமும் இணைந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கின. 1987இல் முன் கதவால் வந்து சாதிக்க முடியாததை 2008இல் பின்கதவால் வந்த இருபதினாயிரம் கொலை வெறிப்படைகள் சாதித்தன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றிச் சொல்லுபவர்கள் ஊடகங்களாக இருக்கட்டும் ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கை அரச படைகள் போரின் போது செய்த அத்து மீறல்கள் தொடர்பாக உரையாற்றும் ஒரு ஐரோப்பிய நாட்டு இராசதந்திரியாகட்டும் ஐநா பொதுச் செயலராகட்டும் அமெரிக்க அரசத்துறைச் செயலராகட்டும் மோசமான பயங்கரவாதத்தை இலங்கை அரசு ஒழித்துக் கட்டியது என்று சொல்லத் தவறுவதில்லை. 2009இற்கு முன்னர் எமது போராட்டத்தைப் பயங்கரவாதம் எனச் சொன்னதிலும் பார்க்க 2009இன் பின்னர் எமது போராட்டத்தை பயங்கரவாதம் என அதிகமாக உரத்துச் சொல்கின்றனர் பன்னாட்டு சமூகம் எனத் தம்மை சொல்லிக் கொள்பவர்கள். இலங்கை அரசுக்கு தாம் கொடுத்த ஆதரவு பிழை என அவர்கள் உணர்ந்து கொண்டுதான் 2009இன் பின்னர் அவர்கள் எமது போராட்டத்தை அதிக உரப்புடன் பயங்கரவாதம் என்கின்றனர். எமது போராட்டத்திற்கு பானாட்டரங்கில் நீதி கிடைக்க வேண்டுமென நாம் கருதினால்; நமது பிரச்சனைக்கு பன்னாட்டரங்கில் தீர்வு கிடைக்க வேண்டுமென நாம் கருதினால் எமது போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல ஓர் எல்லை மீறிய பயங்கரவாத அரசிற்கும் ஒர் எல்லை தாண்டிய  பேரினவாத அரசிற்கும் எதிரான நியாயமான போராட்டம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எமது தலையில் உள்ளது.

1978இல் அவ்ரோ விமானத்தில்  குண்டு வைத்துத் தகர்த்தது பயங்கரவாதமல்ல கழுத்து நெருக்கப்பட்ட ஓர் இனம் இக்கட்டான நிலையில் தன்னைப் பாதுகாக்க செய்த ஒரு நகர்வு மட்டுமே என்பதை நாம் மற்றவர்க்கு உணர்த்த வேண்டும். பயணிகள் இறங்கிப் போன பின்னர் வெடிக்கும் படி குண்டு வெடிக்கும் நேரத்தை தயார்படுத்தி வைத்தமை எமது மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகிறது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். எமது பல நகர்வுகள் உலகத்தின்
அளவுகோலில் பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அழிவின் விழிம்பில் நின்று கொண்டு நாம் செய்த தவிர்க்க முடியாத நகர்வுகள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். எமக்கு எதிராகக் குற்றம் புரிந்த பன்னாட்டுச் சமூகத்தின் குற்றத்தை நாம் நிரூபிக்காமல் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாம் நின்று செயற்பட்டால் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சில அத்து மீறல்கள் நடைபெற்றன அவை தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையும் ஒரு (வரைவிலக்கணமில்லா) நல்லிணக்கமும் தேவை என்ற ஒரு சிறு புள்ளிக்குள் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவை அடக்கப்பட்டுவிடும். அமெரிக்காவும் இந்தியாவும் எம்மை ஏமாற்றத் தயார். நாம் ஏமாறத் தயாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...