Tuesday, 16 April 2013

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடும் அசிங்க டீல்களும்

ஐம்பத்தி நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒரு பன்னாட்டு அரசியல் கூட்டமைப்பு அல்ல. இதன் தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் ராணி. 1965-ம் ஆண்டு இலண்டனில் நடந்த பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாட்டில் பொதுநலவாய நாடுகளிற்கு என ஒரு பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. தற்போதைய பொதுச் செயலாளராக கமலேஷ் சர்மா என்பவர் இருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பெயரைப் படித்தவுடன் இவர் ஒரு தமிழின விரோதியாக இருக்க வேண்டும் எனச் சிந்திக்கலாம்.

பொதுநலவாய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்ற கருத்து 1884இல் உருவானது. அதற்கான சட்டபூர்வ அங்கீகாரம் 1921இல் செய்யப்பட்ட ஆங்கிலோ - ஐரிஸ் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. பொதுநலவாய நாடுகளில் மொசாம்பிக் ருவண்டா ஆகிய இரு நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடுகளாகும். இவை 22-01-1971இல் செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரகடனத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன.  அப்பிரகடனத்தில்:

These relationships we intend to foster and extend, for we believe that our multi-national association can expand human understanding and understanding among nations, assist in the elimination of discrimination based on differences of race, colour or creed, maintain and strengthen personal liberty, contribute to the enrichment of life for all, and provide a powerful influence for peace among nations.

பிரித்தானிய அரசி முடி சூடி 60வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கமலேஷ் சர்மா ஒரு பொருளாதார மாநாட்டை ஒழுங்கு செய்தார். அந்த மாநாட்டை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தொடக்கி வைக்க கமலேஷ் சர்மா ஏற்பாடு செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சே ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை தமிழர்களின் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் எங்காவது ஓர் இடத்தில் உரையாற்றியே தீருவேன் என்ற மஹிந்தவின் உறுதிமொழியை இந்தியரான கமலேஷ் சர்மா நிறைவேற்ற முயன்றதாகக் கருதப்பட்டது. தமிழர்கள் இதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் மஹிந்த ராஜபக்சே ஆரம்பித்து வைக்க இருந்த மாநாட்டில் "பங்குபற்றுவதற்கு" ஐம்பது தமிழர்கள் பெரும் தொகைப்பணம் செலுத்தி நுழைவுச் சீட்டும் பெற்றிருந்தனர். இவர் மாநாட்டில் எதைத் தூக்கி மஹிந்த மேல் வீசுவார்கள் என்று தெரியாமல் விழித்த கமலேஷ் சர்மா கடைசி நேரத்தில் மாநாட்டின் அரைப்பகுதியை இரத்துச் செய்துவிட்டார்.

பொதுநலவாய நாடுகள் சபை மனித உரிமை விவகாரத்தில் காட்டும் கரிசனை போதாது என்ற குற்றச் சாட்டு நெடுநாளாக இருந்து வருகிறது. மனித உரிமை மீறல்களைக் கையில் எடுத்தால் எல்லா நாடுகளுமே குற்றவாளிகள் தான். 2010 வெளியில் கசிந்த ஓர் இரகசிய அறிக்கையின் படி பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தனது அதிகாரிகளுக்கு மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது தெரிய வந்தது.  பொதுநலவாயா நாடுகளின் குடிமக்களான தமிழர்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதை பொதுநலவாய நாடுகள் கண்டு கொள்ளவில்லை.

உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கு பெறும் பொதுநலவாய மாநாட்டின் அடுத்த உச்சி மாநாடு இலங்கையில் 2013 நவெம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கையின் மனித உரிமை மீறலகளைக் காரணம் காட்டி கனடியப் பிரதமர்  ஸ் ரீபன் ஹார்ப்பர் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டை ஏற்படுத்தாவிடில் தான் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாயநாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து விட்டார்.

ஒஸ்ரேலிய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையில் டீலா நோ டீலா?
இலங்கையில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பி ஓடும் தமிழர்களைத் தனது நாட்டுக்கு வராமல் இலங்கை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஒஸ்ரேலியா கண்டுக்காமல் இருக்கும் என ஒஸ்ரேலியா இலங்கையுடன் ஒரு டீல் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.  ஒஸ்ரேலியாவிற்கு தப்பி ஓடுவதற்கு இலங்கையில் ஒரு தமிழ் குடும்பம் தனது வீட்டையும் காணியையும் விற்று வரும் பணத்தை ஒரு முகவரிடம் கொடுக்கும். ஆனால் அந்தத் தமிழ் குடும்பத்திற்கு தெரியாது தமது காணியை வாங்குவதே அந்த முகவர் கும்பல்தான் என்று. பின்னர் அந்த தமிழ் குடும்பத்தை மேலும் பல குடும்பங்களுடன் சேர்ந்து கப்பல் ஏற்றி ஒஸ்ரேலியாவிற்கு அனுப்பும். பின்னர் அதே முகவர் கொடுக்கும் தகவலை வைத்து இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்துவிடும். இப்படிச் செய்வதால் இலங்கையில் இருந்து ஒஸ்ரேலியாவிற்கு செல்பவர்களைத் தடுக்கலாம். இந்த கைங்கரியத்தைப் புரியும் முகவர்கள் இலங்கையில் மிக முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியப் பிரதமர் மீது அழுத்தங்கள் பலதரப்பில் இருந்தும் பிரயோகிக்கப்படுகின்றன. ஒஸ்ரேலியப் பிரதமரும் கனடியப் பிரதமரைப் பின்பற்றி ஒஸ்ரேலிய பிரதமரும் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் ஃபிரேசர், ஒஸ்ரேலிய தமிழ் காங்கிரசைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ ராஜேஸ்வரன், ஒஸ்ரேலிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த லீ ரியனன் உட்பட பல பாராளமன்ற உறுப்பினர்கள், மூதவை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா ஜில்லார்ட்டிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒஸ்ரேலியா இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளாவிடில் இலங்கையில் இருந்து பல அகதிகள் ஒஸ்ரேலியாவிற்கு செல்வார்கள் என்ற அச்சத்தில் ஒஸ்ரேலிய அரசு இருக்கிறது. இது ஒருவகையான கருப்பு மிரட்டல் எனச் சொல்லாம். ஒஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் பொப் கார் 2012 டிசம்பரில் இலங்கை சென்று இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்குப் பாதுகாப்பான நாடு என்றார். ஆனால் பல மனித உரிமை அமைப்புக்கள் இதனை மறுத்தன.

பிரித்தானியாவும் கடும் அதிருப்தி
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடந்தால் அதில் பிரித்தானிய மகராணி இரண்டாம் எலிசபெத், பிரித்தானியப் பிரதமர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளன.  அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பங்கு பற்றுவார்களா என்பதுபற்றி சரியாகத் தெரியவில்லை. நியூசிலாந்தும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிலேயே உள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியா கடும் அதிருப்தியில் உள்ளது. கனடாவைப் போலவே பிரித்தானியாவும் தமது நாடுகளில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கபப்டுகிறது.பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளான தொழிற்கட்சியினதும் பழமைவாதக் கட்சியினதும் முன்னாள் வெளிநாட்டமைச்சர்களான டேவிட் மில்லி பாண்டும் மல்கம் ரிஃப்கிண்டும் பிரித்தானிய மகாராணியார் இலங்கை செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.2012 நவம்பர் 14-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றத்தின் வெளிவிவகாரத் தெரிவுக் குழு பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்தது.

இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலியாக இந்தியா
அண்மைக்காலங்களாக இலங்கையின் ஒரு இராசதந்திரக் கைக்கூலி போல் இந்தியா செயற்பட்டு வருகிறது. இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மநாட்டைப்பற்றி இந்தியா பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்காத போதிலும் திரைமறைவில் அது இலங்கையில் மாநாடு நடப்பதைத் தீவிரமாக ஆதரிக்கிறது. சீனா பொதுநலவாய நாடுகள் சபையில் இல்லை. இந்தியா உதவாவிட்டால் சீனா உதவும் என்ற நொண்டிச் சாட்டை இங்கு இந்தியா முன்வைக்க முடியாது. இலங்கையின் மனித உரிமைகளைத் தூக்கிப்பிடித்தால் காஷ்மீரில் இந்தியா செய்யும் மனித உரிமை மீறல்களை பாக்கிஸ்த்தான் தூக்கிப் பிடிக்கும் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றது.

பொதுநலவாய நாடுகளின் பட்டயத்தை(charter) மீறும் செயல்
பொதுநலவாய நாடுகளுக்கு என்று ஒரு பட்டயத்தை பிரபலங்களின் குழுவினரின் (Eminent Persons Group - EPG) ஆலோசனையின் பேரில் அங்கீகரித்தது. அதன்படி உறுப்பு நாடுகள்:
 "We are committed to equality and respect for the protection and promotion of civil, political, economic, social and cultural rights including the right to development, for all without discrimination on any grounds as the foundations of peaceful, just and stable societies".

பிரபலங்களின் குழுவைச் சேர்ந்தவர்களே இப்போது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அங்கு மாநாடு நடைபெறக் கூடாது எனச் சொல்கின்றனர்.


ஆனால் இந்தியரான கமலேஷ் சர்மா இலங்கையில் இருந்து மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்கிறார். எல்லாம் தட்சணை செய்யும் வேலையா? ஏப்ரில் மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் அமைச்சு செயற் குழுவின் (Commonwealth Ministerial Action Group) கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் இலங்கையில் இருந்து மொரீஸியஸ் தீவிற்கு மாநாட்டை இடமாற்றம் செய்யும் முன்மொழிவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர்குற்றம் நடந்தமைக்கான போதிய ஆதரங்கள் இருப்பதாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டிய நிலையில் மஹிந்த ராஜபக்ச அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமப் பொறுப்பில் இருப்பதை இந்தியா போன்ற மானம் கெட்ட நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும். கனடாவும் பிரித்தானியாவும் தமது நட்டில் வாழும் மக்களின் கருத்துக் கொடுக்கும் மதிப்பை இந்தியா தனது நாட்டில் வாழும் மக்களின் கருத்துக்கு கொடுக்க மாட்டாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...