Monday 15 April 2013

எரியும் சிரியாவில் சரியாத அசாத்தை அமெரிக்கா சரிக்கட்டுமா?

ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்து வரும் இராசதந்திர மட்டக் கூட்டங்கள் சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தினர் சிரியாவில் சிறுபான்மையினராகவும் சியா முசுலிம்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கும் சிரியாவில் அலவைற் இனக்குழுமத்தினரின் கைகளிலேயே ஆட்சி இருக்கிறது. சிரியாவில் அடக்குமுறை மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த பஷார் அல் அசாதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக 2011இன் ஆரம்பப்பகுதியில் உருவானது. 2012-ம் ஆண்டு முடியமுன்னர் கவிழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி இன்று வரை தொடர்கிறது.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான ஐம்பதினாயிரம் படையினர் இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம் இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன. இதனால் அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகின்றன.

விலகி நிற்கும் மேற்குலகமும் கையாலாகாத ஐநாவும்
நேட்டோப் படைகள் ஒருதலைப் பட்சமான விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க இரசியா தனது புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியத் தலைநகர் டமஸ்கசில் நிறுவியுள்ளது. தாம் அசாத் ஆட்சியை அகற்றி அங்கு ஒரு இசுலாமியவாதிகளின் ஆட்சியை நிறுவ உதவி செய்வதா என்பது அவர்கள் முன் இருக்கும் கேள்வி. எகிப்தில் இசுலாமிய மதவாதிகளின் கை ஓங்குவதை அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில் இன்னொரு போர் முனையத் திறக்க முடியாது.  எண்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட சிரிய உள்நாட்டுப் போரில் ஏதும் செய்ய முடியாமல் ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை போன்ற படைக்கலன்களைத் தந்து உதவு மாறு பல நாடுகளிற்கு வேண்டுகோள்களைத் தொடர்ந்து விடுத்து வருகின்றனர். ஆனால் வலிமை மிக்க படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளுக்குப் செல்வதையோ அவற்றை இயக்கும் திறனை அவர்கள் பெறுவதையோ மேற்கு நாடுகள் விரும்பவில்லை.

இனிவரும் வாரங்களில் யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் ஆகிய நாட்டு இராசதந்திரிகளை ஐக்கிய அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் நிர்வாகத்தினர் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவிருகின்றனர். இவர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப்பட்டு சிரியப்படைத்துறை சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதில் தாமதம் காட்டுகிரது. ஆனால் ஜோர்டான் சிரியப் போர் அகதிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது. தற்போது ஜோர்டானில் ஐந்து இலட்சம் சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தத் தொகை இந்த ஆண்டு இறுதியல் பன்னிரண்டு இலட்சமாகலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க அரசுத் துறை செயலர் துருக்கிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் சிரியப் போரைப் பொறுத்தவரை முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க செல்லப்பிள்ளை
ஆளும் அலவைற், பெரும்பான்மையினரான. சுனி முசுலிம்கள், சியா முசுலிம்கள், கிருத்தவர்கள், குர்திஷ்கள், துருக்கியர்கள், துருசுக்கள் எனப் பலதரப்பட்ட இனக்குழுமங்கள் சிரியாவில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகால அடக்கு முறை ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கையில் இந்த இனக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியா தொடர்ப்பாக 2012 டிசம்பர் 20ம் திகதி வெளியிட்ட இடைக்கால 10 பக்க அறிக்கையில் சிரியாவில் பல வேறுபட்ட இனக்குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றாக அழியும் நிலையில் அல்லது நாட்டை விட்டு முற்றாக வெளியேறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். அலேப்பே பிராந்தியத்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சார் போராளிகளும் ஜபத் அல் நஸ்ரா போராளிகளும் அண்மையில் கடுமையாக மோதிக் கொண்டனர். இவற்றில் ஜெனரல் சலிம் ஐட்ரிஸ் தலைமையிலான Free Syrian Army எனப்படும் சுதந்திர சிரியப்படையினர் அமெரிக்காவிற்குப் பிடித்தவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தலைமையில் வேறும் சில கிளர்ச்சி இயக்கங்களையும் இணைத்து supreme military council என்னும் உச்ச படைத்துறைப் பேரவையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல படைக்கலன்களல்லாத (non-lethal)உபகரணங்களை வழங்கின. அல் கெய்தா போன்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் தாம் துனிசியா, எகிப்து, லிபியாவில் விட்ட பிழைகளை இனி விடுவதில்லை என உணர்ந்து கொண்டு சிரியப் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சிக்காரர்களுக்குள் தமது கையாட்களை ஊடுருவச் செய்துள்ளனர். இது சிரியப் பிரச்சனையை கடுமையானதாக்கி அது இழுபட்டுச் செல்கிறது. லெபனானில் செயற்படும் ஈரானிய ஆதரவு போராளி இயக்கமான ஹிஸ்புல்லா சிரிய அதிபரின் படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர். 

அசாத் தாக்குப் பிடிப்பது எப்படி?
ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகளின் ஆதரவு சிரிய அதிபர் பஷார் அல் அசாத் இரண்டு ஆண்டுகளாக பதவியில் நீடிப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஈரானில் இருந்து ஈராக்கினூடாக அசாத்திற்கு படைக்கலன்கள் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஈராக்கின் வான்பரப்பை ஈரான் பாவிப்பதைத் தடுக்கும் படி அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கப்படவில்லை. அசாத்திடமிருந்து இதுவரை பல பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்கள் விடுவித்தாலும் எந்த ஒரு முக்கிய நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றவில்லை. தேவையற்ற பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களின் படைகளை அப்பிரதேசக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைக்கிறார் அசாத். அசாத் தன்னிடம் இருக்கும் எல்லா படைப்பலத்தையும் பாவிக்கிறார். அதில் முக்கியமாக அவரின் விமானப்படை கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் சிலசமயம் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்வதுமுண்டு.

இழுபறி நிலை தொடரலாம்.
வெளியில் இருந்து படைக்கலன்கள் கிடைக்காமல் கிளர்ச்சிக்காரர்களால் போரில் வெல்ல முடியாது. சிரியா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்கள் இரசியாவாலும் சீனாவாலும் கூட்டாக நிராகரிக்கப்பட்டன. பராக் ஒபாமா நிர்வாகம் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியா புனிதப் போராளிகள் கைக்களுக்குப் போய் அது ஒரு தீவிர இசுலாமிய நாடாகிவிடும் என அஞ்சுகிறது. தனது நட்பு நாடுகளான யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் போன்றவற்றுடன் அமெரிக்கா நடத்த விருக்கும் தொடர் பேச்சு வார்ததைகளின் பின்னர் அமெரிக்கா கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களைக் கொடுக்குமென்று நம்ப முடியாது. இந்நிலையில் சிரியப் போர் தொடர்ந்த் இழுபறி நிலையில் இருக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...