Tuesday, 12 March 2013

தொடரும் கலைஞர் தொலைக்காட்சியின் கயமைத்தனம்

தமிழ்நாட்டில் இப்போது என்றும் இல்லாத அளவு ஈழத்தமிழர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது புது டில்லிக்கும் தமிழர்களை ஆள நினைக்கும் வந்தேறு குடிகளுக்கும் ஏற்பான ஒன்றல்ல. தமிழன் என்று விழித்து எழுந்து வந்தாரை வாழ வைப்பது பெருந்தன்மை; வந்தாரை ஆள வைப்பது மடைமை என்று உணர்கிறானோ அன்று புது டில்லிக்கும் தமிழ்நாட்டை ஆளும் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு சங்கு ஊதப்படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை கலைஞர் தொலைக் காட்சியும் சன் தொலைக்காட்சியும் எப்போதும் இருட்டடிப்புச் செய்தே வருகின்றன. 11/03/2013 இரவு கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனச் சொல்லப்பட்டது ஆனால் போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோரிக்கைகளில் முதல் வசனமே அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தாம் கண்டிப்பதாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

2009 இறுதிப் போரின் போதும் கொழும்பில் சதீஷ் நம்பியார், புது டில்லியில் சிவ் சங்கர மேனனுடன் எம் கே நாராயணன், கோபாலபுரத்தார், ப. சி அண்ணாச்சி, நியூயோர்க்கில் விஜய் நம்பியார் ஆகியோர் சேர்ந்து சிறப்பாக நாடகமாடினார்களா என்பது இதுவரை பதில் கிடைக்காத கேள்வி.

ஐக்கிய நாடுகளின் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்கள் தமிழர்களுக்காக அல்ல. அமெரிக்கா ஒரு நாளும் சிங்களவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காது. அமெரிக்காவிற்கு ராஜபக்சவைப் பிடிக்கவில்லை. அதே நேரம் அது சிங்களப்படைகளைப் பாது காக்க முனைகிறது. போர்க் குற்றம் என்று சொல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் அறிக்கையில் இருந்து சிங்களப் படைகளைத் தப்ப வைப்பது அமெரிக்காவின் நோக்கம். இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் போரின் பங்காளியாகும். இதனால் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து கவனத்தை திசை திருப்பி இலங்கை அரசின் கண்துடைப்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உலகின் கவனத்தை மையப்படுத்துவதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் வாசகங்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கப் போகிறதா இல்லையா என்பதில் முழுக்கவனத்தையும் புது டில்லியும் அமெரிக்காவும் வெற்றிகரமாகச் செய்கின்றன. இதில் கலைஞர் தொலைக்காட்சியும் தனது பங்கைச் செலுத்துகிறது. இதனால்தான் மாணவர்கள் போராட்டத்தின் உண்மைத் தன்மையை க்லைஞர் தொலைக்காட்சி திரித்துக் கூறுகிறது.

மொக்கை போட்ட வழக்கறிஞர்.
11-03-2013 இலண்டனில் ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஜீ ஆர் ராஜேந்திரன் என்னும் வழக்கறிஞரின் சிறு பேட்டி ஒன்றைத் தமிழகத்தில் இருந்து ஒரு செய்தியாளர் வழங்கி இருந்தார். அதில் ஜீ ஆர் ராஜேந்திரன் அமெரிக்கா ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரும் தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் வாக்கெடுப்புக்கு விடாமலேயே வீட்டோ செய்து விடும் என்றார். ஐநா மனித உரிமைக் கழகத்தில் எவருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வீட்டோ அதிகாரம் ஐநா பாதுகாப்புச் சபையில் மட்டுமே அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு உண்டு. தற்போது சீனாவிற்கு மனித உரிமைக் கழகத்தில் வாக்குரிமை கிடையாது. மனித உரிமைக் கழகத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 47 நாடுகள் பிராந்திய அடிப்படையில் சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்படும் இந்த நாடுகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு. அதன் படி 2012உடன் சீனா தனது வாக்களிக்கும் உரிமையை இழந்து விட்டது. வாக்குரிமை கூட இல்லாத ஒரு நாடு எப்படி இல்லாத வீட்டோ என்னும் இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும்? இந்த வழக்கறிஞருக்கு அறிவில்லையா அல்லது இதுவும் ஒரு திட்டமிட்ட திசை திருப்பும் பிரச்சாரமா? இந்த வழக்கறிஞரின் பின்னணி எனக்குத் தெரியாது. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத் தரவும்.

கலைஞர் தொலைக்காட்சி பற்றிய் முந்தைய பதிவு: கண் மூடி நின்ற தென்ன கலைஞர் தொலக்காட்சியே

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...