Thursday, 17 January 2013

அல் கெய்தாவின் புதிய தந்திரோபாயமும் மாலியும்


மாலி மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. ஆபிரிக்கா கண்டத்தில் ஏழாவது பெரிய நாடு. அங்குள்ள வறிய நாடுகளில் ஒன்று. தனக்கென்று ஒரு தனித்துவ கலாச்சார, பாரம்பரிய, சரித்திரம் கொண்ட நாடு. ஆபிரிக்காவில் மாலியின் இசை மிகச்சிறந்த இசை எனக் கூறப்படுகிறது. இந்த மாலியில் நடக்கும் போர் உலகத்தின் கவனத்தை இப்போது ஈர்த்துள்ளது. மாலியில் இருக்கும் கனிம வளங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை.


மாலி இசை ஏன் ஹரிஸ் ஜெயராஜின் காதில் விழவில்லை? கேட்டுப்பாருங்கள்:


கனிம வளம் நிறை மாலி
மாலியில் bauxite, iron ore, base metals and phosphateஆகிய கனிம வளங்கள் இருக்கின்றன. 1.3மில்லியன் இரும்புக் கனிமம் மாலியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல மாலியில் தங்கமும் வைரமும் இருக்கின்றன. இல்மனைற்றும் நிறைய இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடிமட்டத்தால் வரைந்த அடி மட்ட எல்லைகள்
19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு உலகின் பல பாகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றன. ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் பல பிரதேசங்கள் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டுகளுக்குக் கீழ் வந்தன. தாம் கைப்பற்றிய நாடுகளின் எல்லைகளை அங்கு வாழும் மக்களின் இன அடையாளங்களைக் கருத்தில் கொள்ளாமல் வகுத்துக் கொண்டன. பூகோள வரைபடங்களை வைத்து அடி மட்டங்களால் நேர் கோடுகளை வரைந்து தம் வசதிக்கு ஏற்ப ஆபிரிக்காக் கண்டந்தில் நாடுகளின் எல்லைகள் ஆக்கிரமிப்பாளர்களின் வசதிக்கேற்ப வரையப்பட்டன. ஒன்றுடன் ஒன்று ஒத்து வாழமுடியாத இனக்குழுமங்கள் ஒரு நாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஈராக், லிபியா, சிரியா, மாலி போன்ற நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு குடியேற்ற (காலனித்துவ)ஆட்சியாளர்களின் எல்லை வகுப்பு முக்கிய காரணம்.

மாலி காலியான கதை
11-ம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு வரை மாலியின் பொற்காலம். மாலியர்கள் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் பின்னர் பல அயல் நாடுகள் மாலியைக் கைப்பற்றி ஆண்டனர். 1898இல் பிரான்ஸ் மாலியை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. பிரான்ஸ் சூடான் என்னும் பெயர் மாலிக்குச் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் அடிபட்டுக் களைத்த ஐரோப்பிய நாடுகள் 1947இன் பின்னர் தமது குடியேற்ற ஆட்சி நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கத் தொடங்கின. 1960இல் மாலி பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மொடிபோ கீற்றாவின் தலைமையில் ஒரு ஒற்றைக் கட்சி சோசலிச அரசாக உருவெடுத்தது. 1968இல் ஒரு படைத்துறைப் புரட்சி மூலம் மூசா ட்ராரே ஆட்சியை கீற்றாவிடம் இருந்து கைப்பற்றினார். 1979இல் புது அரசியலமைப்பு, புது தேர்தல், புது ஆட்சி எனக் கலக்கினார் மூசா ட்ராரே. 1991இல் மீண்டும் புரட்சி மூசா விரட்டப்பட்டார். 1992இல் பல கட்சித் தேர்தலின் கீழ் அல்ஃபா கோனாரே ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995இல் 1999இல் உள்நாட்டு இனக்கலவரம் அரபு இனத்தவருக்கும் குன்ரா இனத்தவருக்கும் இடையில் நடைபெற்றது. 2002இல் தேர்தல் மூலம் அமடூ தூமானி பதவிக்கு வந்தார். தேர்தலில் முறை கேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2006இல் பிரிவினை கோரும் வட பிராந்தியம் வாழ் துவாரெக்(Tuareg) இனக் குழுமத்தினருடன் அல்ஜீரிய அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்த துவாரெக் இனத்தவர் 2009இல் அடக்கப்பட்டனர். 2012 மார்ச் மாதம் மூசா ட்ராரே படைத்துறையினரின் புரட்சியால் அகற்றப்பட்டார். 2012இல் மாலியின் வட பிராந்தியத்தில் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த துவாரெக் இனத்தவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். 2012 ஜூனில் துவாரெக் இனத்தின் அன்சார் டைன் (மதப் பாதுகாவலர்) இயக்கத்தினர் வட மாலியில் இசுலாமிய அரசை உருவாக்கி இசுலாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினர். 2012 நடுப்பகுதியில் அன்சர் டைன் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் இணைந்து திம்புக்து நகரைக் கைப்பற்றினர். பின்னர் 2012இன் இறுதியில் மேலும் முன்னேறி மாலியின் மத்திய பிராந்திய நகரங்களையும் கைப்பற்றினர். மாலிய மக்கள் தொகையில் 10% மட்டும் கொண்ட துவாரெக் இனத்தவரின் இந்த வெற்றி பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.

மாலியில் அல் கெய்தாவின் சோலி
அல் கெய்தா இயக்கம் மேற்கு நாடுகளை எதிர்ப்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட்டது. இசுலாமியர் பல கொடுங்கோலர்களின் ஆட்சியின் கீழ் பொருளாதார முன்னேற்றம் இன்றி அவதிப்படுவதைக் கருத்தில் கொல்ளவில்லை. விளைவு அரபு வசந்தம் மக்களின் இயல்பான புரட்சியானது.  துனிசியா, லிபியா, எகிப்த்து ஆகிய நாடுகளில் அல் கெய்தாவைப் புறந்தள்ளி விட்டு மக்கள் ஆட்சியாளர்களை விரட்டினர். இதில் லிபியப் புரட்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பியாவும் பேருதவி செய்தன. இதைத் தொடர்ந்து அல் கெய்தா தனது தந்திரோபாயத்தை மாற்றி கொண்டது. இயல்பாக எழும் மக்கள் எழுச்சியுடன் தானும் இணைந்தது. சிரியாவில் நடக்கும் போரில் அல் கெய்தா போராளிகள் பங்கு வகிக்கின்றனர். கொன்னா நகரைக் கைப்பறி தென் பிராந்தியத்தை நோக்கி அன்சார் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் முன்னேறத் தொடங்க அல் கெய்தா மாலியில் துவாரெக் இனக்குழுமத்துடன் இணைந்து தனக்கு என ஒரு நாட்டை உருவாக்கி விடும் என்ற அச்சம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவையும் ஆட் கொண்டது.  விளைவு பிரெஞ்சுப் படையினர் மாலியில் களமிறங்கினர். மாலியின் அயல் நாடுகளான சாட்டும் அல்ஜீரியாவும் பிரான்ஸின் நட்பு நாடுகள். அது பிரான்ஸிற்கு சாதகமாக இருக்கிறது. மாலியின் அதிபர் ட்ராரே வேண்டு கோளிற்கிணங்க தனது படைகளை அனுப்பியதாக பிரெஞ்சு அதிபர் கூறுகிறார். மாலியில் இயங்கும் அல் கெய்தா al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்னும் பெயருடன் செயற்படுகிறது.


பிரான்ஸின் ஒரு தலைப்பட்ச முடிவு

அன்சார் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும்  பெருங்கதியில் அடையும் வெற்றி பிரான்ஸை தனது நேட்டோ நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை செல்லாமல் மாலி அதிபரின் வேண்டுகோளை மட்டும் கருத்தில் கொண்டு ஒருதலைப்பட்சமாக துரித முடிவெடுத்து Operation Serval என்னும் குறியீட்டுப் பெயருடன் படைநகர்த்த வைத்தது. கொன்னா நகரைத் தொடர்ந்து தென் பிராந்திய மொப்டி நகரும் கைப்பற்றப்படலாம் என்ற அச்சமிருக்கையில் பிரான்ஸ் தலையிட்டது. மாலி வேண்டுகோள் விடுத்த மறு நாளே பிரெஞ்சுப் படையினர் களமிறங்கினர்.பிரான்ஸின் நேட்டோ நண்பர்கள் மாலிக்குப் படை அனுப்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

பிரான்ஸின் வியட்நாம்

மாலியின் வட பிராந்தியம் மட்டும் ஆப்கானிஸ்த்தான் அளவு நிலப்பரப்புக் கொண்டது. இந்தப் பெரும் பாலைவன நிலப்பரப்பு துவாரெக்கினருக்கு அத்துபடி. ஆனால் பிரெஞ்சுப் படையினருக்கு உகந்த நிலப்பரப்பல்ல. உகந்த கால நிலையுமல்ல. அல் கெய்தா இப்போது பிரன்ஸிலும் பார்க்க பெரிய நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அங்கு அல் கெய்தா ஆழக் காலூன்றினால் அது மத்தியகிழக்கிற்கு மட்டுமல்ல ஆபிரிக்காவிற்கு மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே ஆபத்து என பல மேற்கு நாடுகள் கருதுகின்றன. தனது தெற்குக் கோடியில் ஒரு அல் கெய்தா அரசு அமைவதை பிரான்ஸ் விரும்பவே மாட்டாது. ஆனால் மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளில் பிரெஞ்சுப்படையினர் பல தடவை போர் செய்துள்ளனர். பிரான்ஸிற்கு பிரித்தானியா உட்படப் பல நாடுகள் உதவுகின்றன. அமெரிக்கா மாலியில் தலையிடுவதற்கு சட்ட ரீதியான பிரச்சனை உண்டு.  அமெரிக்கா ஐநா பாதுகாப்புச் சபையூடாக தலையிடும்படி பிரான்ஸைக் கேட்டிருந்தது. போர் தொடங்கும் முன்னரே பிரான்ஸ் தனது நட்பு நாடுகள் தனக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கையேந்தியுள்ளது. மற்ற ஆபிரிக்க நாடுகளின் படைகள் தனக்கு உதவிக்கு வரும் என பிரான்ஸ் காத்திருக்கிறது. பிரான்ஸால் மாலியின் தெற்குப் பகுதியகள் கைப்பற்றப் படுவதை தடுக்க முடியும். வட பிராந்தியத்தை மீட்க பல மாதங்கள் எடுக்கலாம். பிரெஞ்சு விமானத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் துவாரெக்கினர் ஒரு சிறு நகரைக் கைப்பற்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

பிரான்ஸிற்கு அல் கெய்தாவின் எச்சரிக்கை
தம்மீது தாக்குதல் நடாத்தியதன் மூலம் பிரான்ஸ் நரகத்திற்கான வாசலைத் திறந்துள்ளது என எச்சரித்த அல் கெய்தா பிரன்ஸின் இருதயப்பகுதிகளைக் தாக்குவோம் எனச் சூளுரைத்துள்ளது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் உட்பட பல மேற்கு ஐரோப்பியரும் வட அமெரிக்கர்களும் அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் அவசரப்பட்டுவிட்டதா?
2012இன் ஆரம்பப்பகுதியிலேயே மாலியில் இசுலாமியக் கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கப் போகிறது என்று தெரிந்தவுடன் அமெரிக்கா பல ஆபிர்க்க நாட்டுப் படைகளுக்குச் சிறப்புப் பயிற்ச்சி அளிக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் இன்னும் தாக்குதலுக்கு தயார் இல்லை. இன்னும் சிலமாதங்களில் அவர்களை அமெரிக்கா மாலிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தது. மேற்கத்தியப் படைகள் நேரடியாகத் தலையிட்டால் நிலைமை அமெரிக்காவிற்கு எதிரான இசுலாமியரின் போர் எனத் திரிக்கப்பட்டுவிடும் என்று அமெரிக்கா புதிய உத்தியை வகுத்திருந்தது. ஆனால் தனது உத்தியை பிரான்ஸ் அவசரப்பட்டு குழப்பிவிட்டதாக அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. மேலும் அமெரிக்கா தற்போது அல் கெய்தாவிற்கு எதிராக தான் தேர்ந்தெடுத்த சில தலைவர்களைக் கொல்லும் உபாயத்தைக் கொண்டுள்ளது. மாலியில் அப்படி சில தீவிரவாதத் தலைவர்களைக் கொன்று நிலைமையை தனக்கு சாதகமாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்க சார்பு துவாரெக் விடுதலை அமைப்பும் இருக்கிறது.

பாவம் துவாரெக் இனத்தவர்கள்
பல ஆண்டுகளாக அரசியலில் ஓரம் கட்டப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாகிய துவாரெக் இனத்தவர்கள் மாலியில் நடந்த படைத் துறைப் புரட்சியை தக்க தருணமாகப் பாவித்து தமது பிராந்தியத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் மத்தியில் நான்கு விடுதலை இயக்கங்கள் இருந்தன. அதில் மத சார்பற்ற MNLA எனப்படும் அஜவாட் தேசிய விடுதலை இயக்கமே மாலியின் வட பிராந்தியத்தில் போராடி வெற்றி பெற்றது. ஆனால் அன்சாரி டைன் இயக்கம் அல் கெய்தாவுடன் இணைந்து அஜவாட் விடுதலை இயக்கத்தை விரட்டிவிட்டு தான் முன்னணியில் வந்தது. அத்துடன் வடபிராந்தியத்தை மட்டும் தமது நாடாக பிரகடனப் படுத்தியதுடன் நிற்காமல் தென் பிராந்தியத்தையும் கைப்பற்ற முயன்றனர். இது அவர்களுக்கு பாதகமான ஒரு நிலையை பன்னாட்டு மட்டத்தில் உருவாக்கியுள்ளது.

மாலியில் இரத்தக் களரி
பிரெஞ்சு விமானப்படையினர் முதலில் நடத்திய தாக்குதலில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அல்ஜீரியாவில் 132 வெளிநாட்டவர்காள் உடபட 600பேர் பணயக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அங்கு ஒரு இரத்தக் களரி ஏற்பட்டது.  சோமாலிய அல் கெய்தாவினர் தம் வசம் இருந்த பிரெஞ்சு உளவாளியைக் கொன்றுள்ளனர்.பிரான்ஸ் தனது 3000தரைப்படைகளை மாலிக்கு அனுப்பியது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் பல ஆபிரிக்க நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கா உட்படப் பல மேற்கு நாடுகள் பயிற்ச்சி அளித்து வருகின்றன. இவற்றில் சில ஏற்கனவே மாலியில் களமிறக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுப்படைகள் மாலிக்குச் சென்று விட்டன. அன்சர் டைன் போராளிகளும் அல் கெய்தாப் போராளிகளும் தாம் கைப்பற்றிய பிரதேசங்களை இழந்து வருகின்றன. மாலியப் படைகள் பல போராளிகளைக் கண்டபடி கொன்று குவிப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இப்படிப்பட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என்கிறது பிரான்ஸ். பிரேன்சுப் படைகள் தாக்குதலில் இறங்கியதின் பின்னர் அன்சர் டைன் போராளி இயக்கம் பிளவு அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு பிரிவினர் போரைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளனர். துவாரெக் இனத்தின் நிலை ஈழத் தமிழர் நிலை போல் ஆகக் கூடாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...