Thursday 20 December 2012

கொலை எதிர்காலம்

சிந்தையில் சிலோன் நண்டுக்கறியையும்
சிவத்த அரிசிமாப் பிட்டையும் வைத்துக் கொண்டு
சிவசிவா என்பதுபோல்
கேபி எனும் கட்சி தாவி
ஓட்டைவாய பக்சராஜனின் காலடியில் இருந்து
விட்டெறிந்த பணத்தில் சிலர் கூடி
சுரம் இல்லாமல் கரம் தட்டி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றனர்
இல்லாத நாட்டின் செல்லாத அரசின்
இல்லாத நாற்காலியில்
எனிந்தப் பொல்லாத ஆசை

போரில் இறந்தவன் பெயரைப் பொய்யாகச் சொல்லி
ஊரில் இருந்து வந்த போராளி நானென்றவனுக்கு
ஒன்றாக எழுந்து நின்று நன்றாகக் கைதட்டி
மரியாதை செய்யும் மானம் கெட்ட கும்பல்
நாடாளும் சபையென நாடுதான் ஏற்குமோ
ஔவ்வையவள் அன்று சொன்ன வாக்குப்படி
வேதாளம் சேரும் வெள்ளெருக்குப் பூக்கும்
பாதாள மூலியும் தடையின்றிப் படரும்
பாம்பும் வாடகையின்றிக் குடியிருக்கும் உம்மனைகளில்
செல்லாத ஆட்சியின் இல்லாத கதிரைக்கு
பொல்லாத ஆசைப்பட்டால்
கல்லாத கயவனும் கைகொட்டிச் சிரிப்பான்

பளபளக்க சிவப்பிலும் மஞ்சளிலும்
சீருடை எனச்சொல்லி பேருடை அணிந்து நின்றாலும்
பாராளும் மன்றம் எனப் பல கதை சொன்னாலும்
நம் மனம் ஆளும் மாவீரர் புகழை
நீர் உரைத்தல் முறையோ முறையோ
சிங்களத்தின் சில்லறைக் கைக்கூலிக் கும்பல்கள்
நாட்டை மீட்க வந்தவர் நாமென்று 

நாக்கூசாமல் சொல்லுதல் தகுமோ தகுமோ
அமைச்சரவையென்றும் மூதவை என்றும்
முறைகள் பல சொன்னாலும்
படையுமில்லைக் கூழுமில்லை
குடியுமில்லை மதியுடை அமைச்சுமில்லை
நல்லோர் நட்புமில்லை ஆங்கொரு அரணுமில்லை
வள்ளுவனின் வரைவிலக்கணத்துக்குள்
நில்லாத அரசின் இல்லாத நாற்காலியில்
ஏனிந்தப் பொல்லாத ஆசை

முயற்கொம்பில் நீர் ஏறி ஆகாயக் கோட்டை
கட்ட வேண்டாம் காட்டவும் வேண்டாம்
சங்கரென்றும் மில்லரென்றும் மாலதியென்றும்
பாரிஸ் நகரத்து பரிதியென்றும்
பல்லாயிரம் மாவீரர் காட்டிய வழி நமக்குண்டு
அவர் வழியில் நாடொன்று நாம் காண்போம்
அதற்கென ஒரு இளவேனிற் காலம் வரும்
இன்று நாம் இருப்பது இனக் கொலை எதிர்காலம்

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

உண்மை தான்....மிக சரியாக சொன்னிங்க....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...