Monday, 26 November 2012

படைத்துறைப் போட்டியில் இஸ்ரேலின் அடுத்த அடி

படைத்துறைப் போட்டி என்பது உலகெங்கும் கட்டற்ற நிலையில் தொடர்கின்றது. புதிய விதமான படைக்கலன்களை பெரும் பணச் செலவில் உருவாக்குவதில் பல நாடுகள் போட்டியிடுகின்றன. இதில் பெரிய நாடு சிறிய நாடு, பணக்கார நாடு வறிய நாடு என்ற பேதம் இல்லாமல் போட்டி நடக்கின்றது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற விடுதலை இயக்கங்களும் தமது படைக்கலன்களை காலத்திற்கு ஏற்ப புதியனவாக மாற்றுகின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஈராக் மீது தாக்குதல் நடாத்திய போது அப்போதைய ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேயின் இஸ்ரேலை நோக்கி தனது ஸ்கட் ஏவுகணைகளை வீசினார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா பேட்ரியட் என்னும் ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை வழங்கியது. ஆனாலும் 39 ஸ்கட் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியது.

இரும்புக் கூரை
இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome) என்னும் எறிகணை மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியழிக்கும் முறைமையை உருவாக்கியிருந்தது. 2012 நவம்பர் மாத நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில் இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது. இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் வெளியில் வைத்து அழித்தது. இந்த இரும்புக் கூரை முறைமை இஸ்ரேலிய அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்பாகும். இரும்புக் கூரை முறைமை குறுந்தூர ஏவுகணைகளையும் எறிகணைகளையும் அழிக்க வல்லன. இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது. சில படைத் துறை வல்லுனர்கள் இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது இரும்புக் கூரை 90% வெற்றி என்கிறது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை.

ஈரானியத் தொலைக்காட்சியான பிரெஸ் ரீவி இரும்புக் கூரை தோல்வியைக் கண்டுள்ளது என்கிறது:


மந்திரக் கோல்
இப்போது இஸ்ரேல் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David's Sling என்னும் நீண்ட தூர ஏவுகணைகளை இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.  டேவிக் கோலியாத் கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான Rafael Advanced Defense Systems மும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம் இணைந்து David's Slingஐ உருவாக்கியுள்ளது. மதிரக்கோல் எனப்படும் David's Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலை நோக்கி 200,000 ஏவுகணைகள்
2012 நவம்பர் 25-ம் திகதி இஸ்ரேல் சோதனை செய்து பார்த்த David's Sling இடைமறிப்பு ஏவுகணைகள் முன்னூறு கிலோ மீட்டர்கள் பாயக்கூடிய ஏவுகணைகளை அழிக்கக் கூடியன. இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றிடமிருந்து தனனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இஸ்ரேலை இரும்புக் கூரையையும், David's Slingஐயும் உருவாக்கத் தூண்டியது. 04/07/2012 ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்தது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை.

 பல தட்டுப் பாதுகாப்பு முறைமை
இரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David's Sling நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது. தொலைதூர ஏவுகணைகளுக்கு எதிராக இஸ்ரேல் அம்பு முறைமை(Arrow systems)யை உருவாக்கிவருகிறது. இரும்புக் கூரை முறைமை ஏற்கனவே முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டது. மந்திரக்கோல் எனப்படும் David's Sling 2014-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும் என்கிறது இஸ்ரேல். அம்பு முறைமை - 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David's Sling விரைவாக வரும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.

2012 ஒக்டோபர் 23-ம் திகதி நள்ளிரவு சூடானிய நகர் கார்தோமில் இருந்த யார்மக் படைக்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சூடானிய ராடார்களை செயலிழக்கச் செய்து விட்டு நான்கு போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இச்செயலை இஸ்ரேல் மட்டும்தான் செய்திருக்க முடியும் என்கின்றனை சூடானியர்கள். இதைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது 79ஏவுகணைகளை ஏவியது. தொடர்ந்து ஹமாஸ் இயக்கப் படைத்தளபதியை இஸ்ரேல் கொலை செய்தது. தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஏவுகணைகளால் மோதிக் கொண்டன. சூடானில் இயங்கிய தொழிற்சாலை ஈரானிய உதவியுடன் படைக்கலன்களை ஹமாஸ் இயக்கத்திற்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் உற்பத்தி செய்ததாகக் கூறப்படுகிறது.  ஈரான் சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளூடாக ஹமாஸ் இயக்கத்திற்கு படைக்கலன்களை அனுப்பி வருகிறது. ஈரானிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் திரைமறைவுப் போரும் படைக்கலன் போட்டியும் தொடர்கிறது. ஈரானால் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் வரை ஏவுகணைகளால் தாக்கும் திறனைப் பெற்றுள்ளது.ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்பதையும் லிபியாவையும் தன்னுடன் இணைத்துச் செயற்படுகிறது. மும்மர் கடாஃபியின் வீழ்ச்சியின் பின்னர் லிபியாவின் பல படைக்கலன்கள் எகிப்தினூடாக ஹமாஸ் இயக்கத்தைச் சென்றடைந்துள்ளது. மல்லிகைப்புரட்சி ஹமாஸிற்கு சாதகமாக அமைந்து விட்டது என்று சொல்லாலாம்.

இஸ்ரேலின் தற்போதைய திட்டம் ஈரான்-சூடன்-ஹமாஸ்/ஹிஸ்புல்லா வழங்கற் பாதையை எப்படித் தகர்ப்பது என்பதே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...