பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானம்.
ஐநா பாதுகாப்புச் சபையில் துருக்கி சிரியாவிற்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளது. இதற்கு மற்ற நாடுகளுடன் ஆலோசனை நடாத்தியுள்ளது. நேட்டோ நாடுகள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். சிரிய ஆட்சியாளர்களுக்கு பெரும் ஆதரவு வழங்கும் இரசியா நாட்டின் ஐநாவிற்கான பிரதிநிதி தான் மாஸ்கோவுடன் கலந்தாலோசிக்க அவகாசம் கேட்டுள்ளார்.
சிரியாவிற்கு எதிரிகள் தேவையில்லை
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி உள்நாட்டில் பெரும் சவாலை எதிர் கொண்டு இருக்கும் வேளையில் துருக்கி மீது தாக்குதல் நடாத்த வேண்டிய அவசியமோ அல்லது அவசரமோ அவருக்கு இல்லை. துருக்கி மீது தாக்குதல் நடாத்தினால் அது தனது ஆட்சிக்கு தானே பறிக்கும் குழியாகிவிடும் என்று சிரிய அதிபர் நன்கு அறிவர். சிரிய அரச படையில் இருந்து பலர் விலகி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து வந்துள்ளனர். இப்போது இந்த விலகல் குறைந்துள்ளது. சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகத் திரும்பும் படையினர் இப்போது விலகிச் சென்று கிளர்ச்சிக்காரர்களுடன் இணையாமல் உள்ளேயே உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்படலாம். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் லிபியத் தலைநகர் திரிப்போலி இலகுவாக கிளர்ச்சிக்காரர்கள் கையில் விழுவதற்கு இந்த உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்பட்டவர்களே காரணம். துருக்கி மீதான எறிகணைத் தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டிருக்கலாம். சிரிய அரசு துருக்கி மீதான தாக்குதல் ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்கிறது.
துருக்கிய சதி
முன்பு ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடாத்துவதற்காக துருக்கி தனது நாட்டின் மீது தானே ஏவுகணையை வீசிவிட்டு அது குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களின் வேலை எனக் குற்றம் சாட்டி ஈராக் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களைத் தாக்கியது என்று முன்பு செய்திகள் வெளிவந்தன. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 18 மாதங்களாக நடக்கும் போராட்டத்தால் பாதிப்படைந்த பல்லாயிரம் சிரியர்கள் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது துருக்கிக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதனால் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி தனது நாட்டுக்குள் சிரிய மக்கள் வராமல் பார்த்துக்கொள்ள துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிய பராளமன்றம் கூட்டப்பட்டு சிரியாவிற்குள் எல்லை தாண்டிப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆணையை துருக்கிய அரசு கோரியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் சிரியா மீது தாக்குதல்
சிரியா மீது தாக்குதல் செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்து செய்து விட்டன. சிரியாமீதான படை நடவடிக்கையை அமெரிக்க அரசு அதன் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தன. நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்கத் தேர்ந்தல் முடிவடைந்த பின்னர் சிரியாமீது ஒரு படை நடவடிக்கை மேற் கொள்ள அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சாட்டு தேவை. நேட்டோ நாட்டின் ஓர் உறுப்பினரான துருக்கிக்கும் சிரியாவிற்கும் மோதல் என்பதை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்குதல்களை மேற் கொள்ளலாம்.
No comments:
Post a Comment