Thursday, 20 September 2012

இசுலாமிய சகோதரத்துவம் சகோதரிகளுக்கு இல்லையா?

அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல்விடுத்தாள். 
ஸ்மா மஹ்பூஸ்

ஸ்மா மஹ்பூஸ்  முகவேட்டில் வெளியிட்ட காணொளிக்கு பெரும்  பயன் கிடைத்தது. மக்கள் பெரும் அளவில் திரண்டு ஹஸ்னி முபராக்கிற்கு எதிரான புரட்சி வெடித்தது. இறுதியில் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். எகிப்தில் முதல் முறையாக மக்களாட்சி மூலம் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் நடந்தது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெண்களைப்பற்றிப் போதிப்பது என்ன? இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக எகிப்திய மக்களுக்குப் போதிப்பது என்ன? :
  • பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள்

ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு பெண்களின் விவாகரத்து உரிமையைப் பறிக்க முயன்றது. பெண்களுக்கான தேசிய சபை என்னும் பெண்ணுரிமை அமைப்பு இதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பெண்களின் திருமண வயதை 12ஆகக் குறைக்க முயன்றது ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு. மீண்டும் பெண்களுக்கான தேசிய சபை கொதித்தெழுந்தது. மிக இளம் பெண்களின் பிறப்புறுப்பின் குறித்த ஒரு பகுதியைத் சிதைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நீக்க இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு முயன்றது.பல இடங்களில் இந்தச் சிதைப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்களை சகோதரத்து அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் திருமணமாகாத பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனக்குள்ளாக்கப்படுகிறது.

 எகிப்த்தியத் தேர்தலின்போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு வாக்காளிக்காத தனது கர்ப்பிணி மனைவியை ஒருவர் அடித்துக் கொன்றார்.  இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் விருப்பத்துக்குரிய |ஷரியா சட்டப்படி ஒரு கணவன் தனக்குக் கீழ்ப்படியாத மனைவியை அடிக்கு உரிமை பெற்றிருக்கிறான். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதைப்பற்றி முறையிடும் பெண்கள் ஆண்களைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எகிப்தில் பெரும்பாலான பெண்கள் இசுலாமிய முறைப்படி தலையை மூடித்தான் ஆடை அணிவாரக்ள்.


எகிப்தில் புரட்சி நடந்தபோது அமெரிக்காவின் வேண்டுதலின்படி அமெரிக்க சார்பு நிலைப்பாடு கொண்ட எகிப்தியப் படைத்துறையினர் நடுநிலை வகித்தார்கள். இதனால் எகிப்தியப் படைத்துறைக் கட்டமைப்பு அப்படியே இருந்தது. இதனால் எகிப்தியப் புரட்சி முழுமையாக வெற்றியடையவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு அமெரிக்காவைத் திருப்திப்படுத்த ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.  
எகிப்தில் புதிய அரசியல்யாப்பை வரையும் பொறுப்பை ஏற்றுள்ள மதபோதகரான யசீர் பர்ஹாமி பெண்களின் திருமண வயது ஒன்பது அல்லது பத்தாக இருக்கலாம் என்கிறார்.

பெண்களுக்கு உரிமை இல்லாவிடில் நாட்டில் அரைப்பங்கினர் அடிமையாக்கப்படுவர். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டால் மீண்டும் தஹ்ரிர் சதுக்கம் எரியும்.

1 comment:

த.சிவரூபன் said...

//ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு பெண்களின் விவாகரத்து உரிமையைப் பறிக்க முயன்றது. பெண்களுக்கான தேசிய சபை என்னும் பெண்ணுரிமை அமைப்பு இதற்கு எதிராகக் குரல் கொடுத்தது.//
//பெண்களின் திருமண வயதை 12ஆகக் குறைக்க முயன்றது ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு. மீண்டும் பெண்களுக்கான தேசிய சபை கொதித்தெழுந்தது.//
//மிக இளம் பெண்களின் பிறப்புறுப்பின் குறித்த ஒரு பகுதியைத் சிதைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நீக்க இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு முயன்றது.பல இடங்களில் இந்தச் சிதைப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்களை சகோதரத்து அமைப்பு செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.//

ஹஸ்னி முபராக்கின் ஆட்சியில் இதுவெல்லாம் நடைமுறையில் இருந்தது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது...
அப்போ.... ஹஸ்னி முபராக்கின் ஆட்சி சிறப்பானதே... தற்போதையதைக் காட்டிலும்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...