Wednesday, 22 August 2012

இலங்கையில் அமெரிகத் தலையீடு: அன்று முதல் இன்று வரை

 அணி சேரா நாடுகள்
1955இல் இந்தோனியத் தலைநகர் பாண்டூங்கில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அணியிலோ அல்லது சோவியத் ஒன்றிய அணியிலோ சேர விரும்பாத நாடுகள் (எனத் தம்மைக் கூறிக்கொள்ளும்) ஒரு அணியாகக் கூடி கூட்டுசேரா நாடுகள் அல்லது அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த மாநாட்டுக்கு ஒரு ஆண்டு முன்னதாக இதில் இலங்கை சேர்வதை அமெரிக்கா தடுக்க முயன்றது. ஆனால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால நேரு இலங்கையை கூட்டுச் சேரா நாடுகளின் இணையும்படி நிர்ப்பந்தித்தார். இதைச் சாக்காக வைத்து அப்போதைய இலங்கைப் பிரதம மந்திரி சேர் ஜோன் கொத்தலாவலை இலங்கையின் மலையகத்தில் வாழும் தொழிலாளர்களில் பல இலட்சம் நாடுகடத்தப்பட்டனர். அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு தமிழர்களுக்கு பாதகமாக முடிந்தது.

சோசலிச முகமூடியுடன் வந்த பண்டாரநாயக்க
12-04-1956இல் இலங்கையின் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க உள்ளூர் முதலாளிகளை வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து பாதுகாக்க முற்பட்டார். அவரது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் முதலாளிகளின் நிறுவனங்களை அரசுடமையாக்கத் தொடங்கினார். பண்டாரநாயக்க ஒரு சோசலிச முகமூடியையும் அணிந்து கொண்டார். இவரது நடவடிக்கைகள் முதலாளித்துவத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா இவரது ஆட்சியைக் கவிழ்க்க சதிதிட்டம் தீட்டியது. அப்போது அமெரிக்காவிற்கு வாய்ப்பான ஒரு நகர்வை பண்டாரநாயக்க  மேற்கொண்டார். அதுதான் இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களத்தை கொண்டுவந்தது. இதற்கு எதிராக தமிழர்களைக் கிளர்ந்து எழச்செய்வது அமெரிக்கவிற்கு இலகுவாக இருந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகத்தை அப்போது இலங்கையின் சட்டத்திணைக்களத்தின் உயர்பதவியில் (Solicitor General) இருந்த எஸ் திருச்செல்வத்தின் மூலமாக ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை பண்டாரநாயக்கவின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டியது. இதனால் எஸ் திருச்செல்வத்தை பண்டாரநாயக்க கட்டாய விடுமுறையில் பதவியில் இருந்து விலக்கி வைத்தார். எஸ் திருச்செல்வம் எப்போது ஒரு அமெரிக்க உளவாளியாகவே செயற்பட்டார் என்று கருதப்பட்டது. செல்வநாயகத்தின் கிளர்ச்சியைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தார் அதன்படி வடக்குக் கிழக்கிற்கு ஒரு தன்னாட்சியுடன் ஒரு பிராந்திய சபை உருவாக்கப்பட இருந்தது. இப்போது ஐக்கிய அமெரிக்கா சிங்கள இனவாதிகளையும் பௌத்த பிக்குகளையும் பண்டாரநாயக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைத்தது. பண்டாரநாயக்க இலங்கையை இரண்டாக பிளவு படுத்துகிறார் என்ற பிரச்சாரத்துடன் ஜே ஆர் ஜயவர்த்தன கொழும்பில் இருந்து கண்டிக்கு ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டார். இலங்கையில் பெரும் இனக்கலவரம் மூண்டது. குழந்தைகள் கோவில் பூசாரிகள் கொதிதாரில் போட்டுக் கொல்லப்பட்டனர். பல தமிழ்ப்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பண்டாரநாயக்க தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த பௌத்த பிக்குக்களின் முன் கிழித்தெறிந்தார். பின்னர் சோமராம தேரர் என்னும் பௌத்த பிக்கு பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்றார். அப்போது அமெரிக்காவின் தலையீடு தமிழர்களுக்கு அழிவைக் கொடுத்தது.

மாவட்ட சபை...... பேய்விட்ட கதை.....
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்த்தன ஒரு பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதைய தமிழர் தேசியக் கூட்டணியும் அதை ஏற்றுக் கொண்டது. மாவட்ட சபைத் தேர்தல் நட்ந்த போது ஒரு இனக்கலவரம் நடந்தது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.  பின்னர் தமிழர்கள் மாவட்ட சபை ஒன்றுக்கும் உதவாதது என்பதை உணர்ந்து கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழர் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. சிங்கள தமிழ் விரோதம் தீவிர மடைந்தது. அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு இலங்கையில் சிங்கள தமிழ் குரோதத்தை மோசமாக்கியதுடன். தமிழர்களின் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை தீவிரமடையச் செய்தது.

திருக்கோணமலையும் சிலாபமும்
இலங்கையின் பூகோள அமைப்பு இந்து மாகடலில் நீர்முழ்கிக்கப்பல்களுக்கு இடையலான அதிதாழ் அலைவரிசை ( ultra law wave) தொடர்பாடல்களுக்கான பரிவர்த்தனை நிலையம் அமைப்பதிற்கு உகந்தது. திருக்கோணமலை சிறந்த ஒரு கடற்படைத் தளத்திற்கு உகந்த ஒரு இடமாகும். திரக்கோணமலையில் இருந்து கொண்டு உலகின் கிழக்கில் ஆதிக்கம் செலுத்தலாம். 1977இல் இலங்கையில் ஜே ஆர் ஜெயவர்த்தன ஏற்படுத்திய உறுதியான ஆட்சியைத் தொடர்ந்து இலங்கையில் தனது கால்களை ஊன்ற அமெரிக்கா திட்டமிட்டது. அமெரிக்கா திருக்கோணாமலையில் சிங்கப்பூர் நிறுவன மொன்றின் பெயரில் தனது கடற்படைகளுக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கா ஒரு வானொலி அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் தனது கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளையும் ஏற்படுத்த முயன்றது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையைத் தனது வழிக்குக் கொண்டுவர தமிழர்கள் முதுகில் ஏறினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி  படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான படை நடவடிக்கைகளை அக்குழுக்களைக் கொண்டு செய்வித்தார். அந்தக் குழுக்களிடை ஒரு முரண்பாட்டு நிலையையும் உருவாக்கினார். ஆர்ப்பாட்டங்கள் உண்ணா விரதங்கள்  சத்தியாக் கிரகங்கள் என இருந்த தமிழர் சிங்களவர்களுக்கு இடையிலான பகைமை ஒரு பெரும் ஆயுதப் போராக உருவெடுத்து சிங்களவர்களும் தமிழர்களும் நிரந்தர விரோதிகளாகினர். தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கியது இந்தியா. அப்போது இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு ஒரு பெரும் பாதகத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது.

ரணிலா மஹிந்தவா
2005-ம் ஆண்டு நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் ஒரு கடும் போட்டியாக அமைந்தது. வெற்றியை தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. தமிழர்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கா விரும்பியது. ஆனால் தம் அமைப்பை பிளவு படுத்திய ரணிலைப் பழிவாங்கவும் ரணில் குடியரசுத் தலைவரானால் அவர் பின்னால் மேற்று நாடுகள் நிற்கும் என்பதாலும், பன்னாட்டு அரங்கில் ரணிலிலும் பார்க்க மஹிந்தவைக் கையாள்வது இலகு என்பதாலும் சாம் கதிர்காமர் இல்லாத மஹிந்த ராஜபக்ச குடியரசுத் தலைவர் ஆவதை விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற போர்வையில் ரணிலைத் தோற்கடித்தனர். இது ஐக்கிய அமெரிக்காவை கடும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்த பயங்கரவாத ஒழுப்புக் கொள்கையுடன் சேர்த்து உலகெங்கும் விடுதலைப் புலிகளின் நிதி மூலங்கள் கப்பல்கள் போன்றவற்றை சிதைக்க நேரடியாகவும் மறை முகமாகவும் இலங்கைக்கு அமெரிக்கா உதவியது. அமெரிக்காவில் பல விடுதலைப் புலி ஆதரவாளரகள் கைது செய்யப்பட்டு சிறையிலடப்பட்டனர். தனக்கு ஏதுவானவர் இலங்கையில் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அமெரிக்க ஆதிக்கக் கொள்கை இலங்கையில் பல இலட்சம் உயிர்களைப் பலிகொண்டது.

மஹிந்தவை மாட்டவைக்க தமிழர்கள் பலி
போரின் பின்னர் மஹிந்த ராஜபக்ச சீனாவின் பக்கம் அதிகம் சார்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையில் சீன ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடியாது என்பதையும் அமெரிக்கா உணர்ந்து கொண்டது. இதனால் 2008-2009இல் இலங்கையில் நடந்த போரில் மஹிந்த அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஒரு பிரச்சனையாக எழுப்பி அதன் மூலம் மஹிந்த அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இலங்கையை தன்வழிக்குக் கொண்டு வர அமெரிக்க இப்போது முயல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையின் படி இலங்கை மீது நடவடிக்கை எடுத்தால் அது சிங்களவர்களை ஆத்திரமடையச் செய்யும் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. அதனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இலங்கையில் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மஹிந்தவை மிரட்டுகிறது. இதில் சிங்களவர்களை மஹிந்த அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்யாதபடி அமெரிக்கா கவனமாக இருக்கிறது. தமிழர்களுக்கு ஒரு தன்னாட்சியுள்ள ஒரு அதிகாரப் பரவலாக்கம் கிடைக்கக் கூடாது என்று உறுதியுடன் நிற்கும் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. அமெரிக்கா இலங்கையில் ஒரு சுமூகமான தீர்வைத் தமக்குத் தரும் என சில தமிழர்கள் நம்புகின்றனர். தமிழர்களை வைத்து ரணிலை அல்லது தனக்கு சார்பான ஒருவரை இலங்கையின் ஆட்சியாளராக மாற்றுவது அல்லது மஹிந்தவை சீனப் பிடியில் இருந்து விலக்கி தன் காலடியில் கொண்டுவருவது மட்டுமே அமெரிக்காவின் நோக்கம்.

மீண்டும் ஒரு தறுதலைக் கூட்டம்
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே  ஆகிய நாடுகளைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சனைக்கென அமைக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் போரில் சிங்களவர்கள் வென்றதுடன் செயலிழந்து போனது. போரின் பின்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் நில அபகரிப்புக்கள் போன்றவற்றைப் பற்றி அந்த நாடுகள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இப்போது எப்போதும் தமிழர்களுக்கு பாதகமான அமெரிக்காவும் என்றும் தமிழரகளின் விரோதியான இந்தியாவும் என்றும் சிங்களவரக்ளின் நண்பனுமாகிய ஜப்பானும் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டுக்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கததை தடுத்து சீனப்பிடியில் இருந்து இலங்கையை விடுவிப்பதே. இலங்கயில் 13வது திருத்தத்திற்கும் குறைந்த ஒரு தீர்வுத் திணிப்பையே சாதி வெறி பிடித்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர். இந்தியாவின் இலங்கை எனது பின்புறம் (my backyard) இதில் எனது சொல்லுக்குத்தான் மற்ற நாடுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அதிகாரப் பரவலாக்கம் கிடைக்காமல் இருப்பதை இந்தியா உறுதிசெய்யும். அமெரிக்காவோ ஜப்பானோ இந்தியாவோ வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் விலக்கப்படுவதை போதிய அளவு வலியுறுத்தவில்லை. சட்டத்தை, மனித உரிமைகளை, மதிக்காத ஒரு மனித நேயம் அறவே இல்லாத ஒரு கும்பலாக முப்பது ஆண்டுகாலமாக செயற்பட்டு வந்த இலங்கைப் படையினர் வடக்குக் கிழக்கில் இருந்து அகற்றப்பட்டு சிங்களப் பகுதியில் நிலை கொள்ளச் செய்யப்பட்டால் அதனால் பெரும் குழப்பம் இலங்கையில் ஏற்படும். அது அமெரிக்க்க இந்திய ஜப்பானிய வர்த்தக நோக்கங்களுக்குப் பாதகமாக அமையும். இலங்கை அரசு சிங்களப் படையினரை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலை கொள்ளச் செய்து  அங்கு மேலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழர்களை அவர்கள் தாயக பூமியாகக் கருதும் இடங்களில் ஒரு சிறுபானமை இனமாக்குவதை அமெரிக்காவோ இந்தியாவே ஜப்பானோ தடுக்க முடியாது அப்படித் தடுக்கும் போது அவர்கள் சிங்கள் விரோதியாக சித்தரிக்கப்படுவார்கள்.

ஜப்பானின் யசூசி அகாசி
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனர்வாழ்வு, மீள்கட்டுமானத்துக்கான ஜப்பானிய அரசின் பிரதிநிதி யசூசி அகாசி இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிக்கும் போதெல்லாம் இலங்கை சென்று அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார். இவர் இறுதிப் போரின் போது பொதுமக்களின் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சகலரையும் கொன்றொழுக்கும் படி இலங்கைப் படையினருக்கு ஆலோசனை வழங்கியவர் என்று இலங்கை ஊடகமொன்றினால் குற்றம் சாட்டப்பட்டவர்

 அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் தமிழர்கள்
இலங்கையை சீனப்பிடியில் இருந்து விடுவித்தல் அதற்காக தேவை ஏற்படின் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுதல் என்ற அமெரிக்காவின் செயற்திட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து விட்டன. முள்ளி வாய்க்காலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறது. எந்நேரமும் அவர்களை வெள்ளை வானில் கொண்டு சென்று கறுப்பு வானில் கொண்டு வந்து இறக்கலாம் என்ற ஒரு பயங்கர சூழ் நிலையில் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் புது டில்லியையோ அல்லது வாஷிங்டனையோ நம்பி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்த வகையான தீர்வு தேவை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழர் பேரவையும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் தனித் தனியாகவோ அல்லது இணைந்தோ முன் வைக்க வேண்டும். இது திம்புக் கோட்பாட்டை அடிப்படியாகக் கொண்ட மீளப் பெற முடியாத அதிகாரப்பரவலாக்கமாக இருக்க வேண்டும். அதற்கு அமெரிக்க இந்திய ஜப்பானியக் கூட்டணி ஒத்துக் கொள்ளாவிடில் மீண்டும் 1977இல் இருந்தது போல் நிலமையை உருவாக்கி தமிழர்கள் தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...