Saturday, 2 June 2012

ஈரான் மீது இணையவெளித் தாக்குதல் (Cyber Attack). அமெரிக்காவும் இஸ்ரேலும் இணந்து நடத்தின

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியைத் தடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் பல வழிகளைக் கையாண்டு வருகின்றன. ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவர் படுகாயமடைந்தார். ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பலத்த வெடி விபத்து நடந்தது.  ஈரானை அணுக்குண்டு தயாரிக்கவிடாமல் தடுக்க ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தன.

விடாது முயலும் ஈரான்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாரசீக வளைகுடாவிற்குள் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வருவததைத் தடுக்கும் சட்டமூலம் ஈரானியப் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் ஈரானியப் படைத் தளபதி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பாரசீகக் குடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் எரிபொருள் விநியோக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணைக்குள் வரக்கூடது என்று எச்சரித்தார். 2011 ஆகஸ்ட் மாதம் ஈரானுக்குச் சென்ற பன்னாட்டு அணுசக்தி முகவரகம் ஈரான் இரகசியமாக அணுக்குண்டு தயாரிக்கிறது என்பதையிட்டு தாம் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஈரான் மீது யாராவது தாக்குதல் நடாத்தினால் அவர்கள் ஈரானின் இரும்புக் கரங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்தது. பின்னர் நவம்பர் மாதம் ஈரானில் உள்ள பிரித்தானியத் தூதுவரகம் ஈரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

துரிதப்படுத்திய ஒபாமா
31-01-2012இலன்று ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு ஐக்கிய அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் வழங்கிய அறிக்கையில் ஈரான் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிவித்தார். ஈரானின் உச்ச தலைவரான அலி கமயினி போன்றோர் ஈரான் மீது மேற்குலகம் திணிக்கும் பொருளாதாரத் தடை ஈரானிய அரசைக் கவிழ்க்கும் எண்ணம் கொண்டதாயின், தேவை ஏற்படின், அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய அமெரிக்கவினதோ அல்லது வேறு மேற்கு ஐரோப்பிய நாடுகளினதோ நலன்கள் மீது ஈரானிய ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் ஜேம் ஆர் கிலப்பப்ர் எச்சரித்திருந்தார். ஜோர்ஜ் புஷ் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருந்தபோதே ஈரானுக்கு எதிரான இணையவெளித் தாக்குதல் செய்து அதன் அணுக்குண்டு உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு Olympic Games எனப் பெயரிடப்பட்டிருந்தது. பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தவுடன் ஈரான் மீதான இணையவெளித் தாக்குதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் படி உத்தரவிட்டிருந்தார்.

 2010இல் Stuxnet வைரஸ்
இஸ்ரேல் உருவாக்கியதாக நம்பப்ப்டும் கணனி வைரஸ் 2010ஜூனில் தவறுதலாக வெளிவந்து உலகெங்கும் பல கணனிகளைத் தாக்கியிருந்தது. தவறுதலாக ஈரானிய விஞ்ஞானியின் மடிக்கணனியிக்குச் செலுத்தப்பட்ட வைரஸ் அவரது மடிக்கணனியில் இருந்து உலகெங்கும் பரவியது. அந்த வைரஸ் Stuxnet என்று அழைக்கப்படிருந்தது. இந்த வைரஸ் ஜெர்மானிய எந்திரவியல் நிறுவனமான சீமன்ஸைத் தாக்கியிருந்தது. சீமன்ஸ் நிறுவனம் ஈரானிற்குத் அணுக்குண்டு உற்பத்திக்குக் தேவையான உபரகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றது. அத்துடன் பல ஈரானியக் கணனிகளையும் செயலிழக்கச் செய்தது. ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காணொளிப்பதிவுக் கருவிகளில் இருந்து கிடைத்த தகவல்களின்படி Stuxnet வைரஸ் 900முதல் 1000வரையிலான மையநீக்கிக்(centrifuges) கருவிகள் பிரித்தெடுத்து அகற்றிச் செயலிழக்கச் செய்தது. நிலமையைச் சரிவரப் புரியாத ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் விஞ்ஞானிகளின் திறமை மீது ஐயம் ஏற்படவும் செய்தது

 இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தி நிலையங்கள் மீது தொடர்ந்து பல கணனி வைரஸ் தாக்குதல்களை நடாத்தி வருவதாக நம்பப்படுகிறது. மேமாதம்31-ம் திகதி அதாவது நேற்று இன்னும் ஒரு இணையவெளித் தாக்குதல் ஈரானிய அணு ஆராய்ச்சி நிலைகள் மீது நடாத்தப்பட்டுள்ளது. Flamer என்னும் பெயர் கொண்ட இந்த வைரஸ் Stuxnet வைரஸிலும் பார்க்க 40மடங்கு வலுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அத்துடன் முதல் தடவையாக ஒரு வைரஸ் bluetooth capabilityஉடன் வந்துள்ளது.கணனியை இயக்குபவர்களின் உரையாடல்களையும் Flamerவைரஸ் ஒற்றுக்கேட்டு ஒளிப்பதிவு செய்துவிடும்.ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. ஆனால் அங்கு உளவாளிகள் மூலம் Flamer வைரஸ் உட்புகுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அது அங்கு உள்ள உபகரணங்களை வழமையான தவறுகளால் பழுதடைவது போல் பழுதடையச் செய்திருக்கிறது. அதனால் நடந்த தவறுகள் பிழையான உதிரிப்பாகங்களால் நடந்தவை என ஈரானியர்களை நம்பவைக்கப்பட்டது.

முனைப்படையப் போகும் இணையவெளிப்போர்
லிபியாவில் மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து அகற்றும் போரை நேட்டோப்படைகள் ஆரம்பித்த போது லிபியாவின் மீது ஒரு இணையவெளித்தாக்குதல் நடாத்தி அதன் படைத்துறையின் கணனிகளை முக்கியமாக விமான எதிர்ப்பு முறைமையைச் செயலிழக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இது வரும் காலங்களில் சீனா இரசியா போன்ற நாடுகளை இணையவெளிப்போரை ஆரம்பிப்பதை நியாயப்படுத்தலாம் என்பதால் கைவிடப்பட்டது. இப்போது அம்பலமாகியுள்ள ஈரான் மீதான இணையவெளித் தாக்குதல் இனி மற்ற நாடுகளை இத்துறையில் அதிக ஈடுபாட்டைக் காட்டச் செய்யும். இணையவெளிப் போர் முறைமையில் சீனா அதிக அக்கறை காட்டி வளர்த்து வருகிறது. அத்துடன் பல வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை இரகசியங்களை இணையவெளி ஊடுருவல்கள் மூலம் சீனா திருடுவதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது பல முன்ன்ணி நாடுகள் தமது படைத்துறையில் இணையவெளிப் படையணியை அமைத்துள்ளன. தீவிரவாத இயக்கங்களும் இதில் அக்கறை காட்டிவருகின்றன. அல் கெய்தாவின் இணையத் தளங்கள் பல அமெரிக்க பிரித்தானிய கணனி நிபுணர்களால் ஊடுருவப்பட்டு வருகின்றன.

1 comment:

சிசு said...

அப்பப்பா...!!! இப்பிடிலாம் நடக்குதா ஒலகத்துல...??!!

காலங்கள் உருள உருள மனிதன் நாகரீகமாக (??!!) சண்டைபோடக் கற்று வருகிறான். கல், இரும்பு, இயந்திரம், இரசாயனம் என்ற படிநிலைகளின் அடுத்த பரிமாணம் இணையம்...

நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன் தர்மா... நன்றி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...