சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.
1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத்
படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச்
சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார். சிரியா நீண்ட காலமாக அவசர காலச்
சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஃபீஸ் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக
சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ்
அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட
கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல்
அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சி திறமையற்றதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் இருக்கிறது
சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் 2011இன் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு
முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு
வைக்கவில்லை. 2011 மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக
(Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய
ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய
நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம்
திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள்
பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத்
கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள்
விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய
அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும்
வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து
கொள்கின்றனர். கிளர்ச்சி பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல்
அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம்
திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும்
கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி
ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன.
கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.
2011 ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும்
பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு
அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில்
இருந்து திருப்பி அழைக்கின்றன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு
அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா
நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும்
அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல
சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின்
எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை
சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின்
பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக
தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய
அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து
அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி
பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல்
நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும்
அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும்
உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர்
டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார்.
2011 செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர்
இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை
அமைக்கும் என அறிக்கை விட்டனர். மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட
வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின்
இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய
சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு
விடுக்கின்றன. 2011 ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு
எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச்
செய்கின்றன. 2011 ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர்
கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2011 ஒக்டோபர் 24-ம் திகதி
அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லீக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும்
அவரால் நிறைவேற்றப் படவில்லை.
வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டி
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால்
ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச்
சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான்,
சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கான படைக்கலன்களும் பயிற்ச்சியும் துருக்கியூடாக வழங்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேரடியாக உதவி இன்னும் வழ்ங்கவில்லை. மறைமுகமாக வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றன. கிளர்ச்சிக்காரர்களுக்குத் தேவையான படைக்கலன்களோ, நவீன படைக்கலன்களோ மேற்குலக நாடுகளால் வழங்கப்படவில்லை. அவை தமக்கு வேண்டப்படாதவர்களின் கைகளிற்குப் போய்ச் சேர்ந்து விடுமோ என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. சிரியாவிற்குத் தேவையான படைக்கலன்களை இரசியா விற்பனை செய்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அப்பாவிச் சிரியர்கள் கொல்லப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் பலத்த சொத்து அழிவு ஏற்படுகிறது. 2012 பெப்ரவரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மொரக்கோ கொண்டு வந்த சிரியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் இணைந்து இரத்துச்(veto) செய்தன
சிரியக் கிளர்ச்சியாளர்களிடையே போட்டி
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை. உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி காயப்படும் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகின்றனர்.
அரச படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மத்தியிலும் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரமாகப் போராடுகின்றனர். 26-06-2012இல் தலைநகர் டமஸ்கஸில் பெரும் மோதல் வெடித்துள்ளது. அத்துடன் துருக்கிக்கு தப்பிச் செல்லும் சிரிய அரச படையினரின் தொகைகளும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படை!
சுதந்திர சிரியப் படையினர் சிரிய ஆதரவுக் குழு ஒன்றை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைத்து அங்கு தமக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகச் செயற்படவேண்டும் என்று வேண்டி வருகின்றனர். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அண்மைக்காலங்களாக சுதந்திர சிரியப் படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிரிய அரச படையில் இருந்து தப்பி ஓடும் வீரர்களில் பலர் இந்த சுதந்திர சிரியப் படையினருடன் இணைந்து வருகின்றனர். இந்த சுதந்திர சிரியப் படையினருடன் அமெரிக்க அரச அதிகாரிகள் அதிக கவனத்துடனும் சந்தேகத்துடனுமே தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அல் கெய்தா போன்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் ஊடுருவிகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
திரு சக்காவின் சமரச முயற்ச்சி
சுதந்திர சிரியப் படையைச் சேர்ந்த திரு சக்கா (Mr. Sakka) முன்னாள் சிரியப்படை அதிகாரிகளையும் வெளிநாடுகளில் வாழும் சிரியப் பிரமுகர்களையும் இணைத்து சுதந்திர சிரியப்படையை ஒரு ஒழுங்கான கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளார். திரு சக்கா பல மேற்கு நாடுகளின் உளவாளிகளையும் சந்தித்துள்ளார். அத்துடன் தனது படையில் உள்ள அல் கெய்தா மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்களை விலத்துவதிலும் ஈடுபட்டுள்ளார். திரு சக்காவிற்கும் முன்னாள் நேட்டோ அதிகாரி Brian Sayersருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திரு சக்கா பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துமுள்ளார். இதனால் இவரை ஒரு மேற்குலகக் கைக்கூலி என இலகுவில் இனம் கண்டுகொள்ளலாம். இதனால் ஒரு சுதந்திர தேசியப் படையினர் தலைமையில் சிரியப் புரட்சி வெற்றி பெறுவதை இரசியாவோ சீனாவோ விரும்பாது எனக் கூறலாம். அவை மற்ற இயக்கங்களை தமது கைக்கூலிகளாக்க முனையலாம். இது சிரிய மக்களுக்குப் பாதகமாகவே அமையும்.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுக என்கிறார் கொண்டலினா ரைஸ்
அமெரிக்க முன்னாள் அரசுத் துறைச் செயலர் கொண்டலினா ரைஸ் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் கொடுத்து உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதாலும் அவர்களிடை அல்கெய்தா மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி உள்ளனர் என்பதாலும் அவர்களுக்கு பராக் ஒபாமா நிர்வாகம் படைக்கலன் கொடுக்கத் தயங்குவது தவறானது என்கிறார் கொண்டலினா. கொண்டலினாவின் அறிக்கை திட்டமிட்டு அமெரிக்க மக்களையும் மற்றும் சீனா இரசியா போன்ற பஷார் அல் அசாத் ஆதரவு நாடுகளினதும் நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் ஒரு முயற்ச்சியாக இருக்கலாம்.
இனிவரும் மாதங்களில் மேற்கு நாடுகள் சிரியாவில் தமது தலையீட்டை அதிகரிக்கும் என்பதை கொண்டலினா ரைஸின் அறிக்கையும் துருக்கி தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துள்ளுவதும் எடுத்துக் காட்டுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment