Sunday 15 January 2012

பொங்கல் பானை உடைத்த இந்தியா.....


இயற்கை வாழி

தன்னை எரித்து
வெம்மை பரப்பி
எம்மை வாழவைக்க
வலுத்தரும் கதிரோன் வாழி

தம்மை வளர்த்து
எம்மை வாழவைக்க
உணவாக்கித் தரும்
தாவரங்கள் வாழி

உணவாகி உணவாக்கி
இதமாகி இதமாக்கி
எமக்கான சொத்தான
நீர் நிலைகள் வாழி

தாமும் வாழ்ந்து
சமநிலை பேணி
எமக்கு உதவும்
மிருகங்கள் வாழி




பொங்கல் பானை உடைத்த இந்தியா.....

ஐம்பதிற்கு ஐம்பது என்னும் அரிசியிட்டு

எம்பதி ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையில்

தன்மானத்தோடு சமத்துவப்  பொங்கலொன்று
சமைக்க முயன்றோம் அன்று நாம்
சோல்பரியாரின் தூர நோக்கின்மையால்
அரிசியே  மண்ணில் சிந்தியது

காந்தீய அரிசியெடுத்து கடமைப் பாலெடுத்து
தமிழுணர்வுப் பானை தேர்ந்தெடுத்து
இணைப்பாட்சி என்னும்  சமஷ்டிப்
பொங்கலிட முயன்றோம் அன்று நாம்
காடையரை ஏவிவிட்டுப் கொடுமை செய்து

பொங்கலைச் சிதைத்தது கயவர் ஆட்சி

ஐந்து வீடாவது கொடு என்ற பாண்டவர்போல்
மாவட்ட சபை என்னும் மட்டமான அரிசியிலே
அரை வேக்காட்டுப் பொங்கலொன்று சமைத்தோம்
நூல் நிலையம் கொழுத்தி நோகடித்தனர்  எம்மை


மிரட்டல் பானையிலே வஞ்சகப் பாலூற்றி
இந்திய நட்பென்னும் புழுத்துப் போன அரிசியிலே
பதின் மூன்றாம் திருத்தம் எனும்
பொங்கலை எம் வாயில் திணித்தனர்
தொண்டையில் இன்றும் சிக்கி நிற்கிறது நஞ்சாக


வீரத் தீமூட்டி தியாகப் பானை எடுத்து
தீரப் பால் வார்த்து உறுதி நெய்யூற்றி
தூய்மை அரிசியோடு வாய்மைத் தேனிட்டு
பொங்கிய  ஈழப் பொங்கல் இறக்கும் வேளையிலே
பன்னாட்டுச் சமூகமென்னும் பன்னாடைக் கூட்டமும் 

மானம் கெட்ட பாதக இந்தியாவும் 
பொங்கல்  பானை உடைத்துச் சென்றன

சாய்ந்து விழக் கோழைகளுமல்ல
ஓய்ந்து விடச் சோம்பேறிகளுமல்ல
அந்திக் கடலில் மறைந்த கதிரவன்
மறுநாள் வருவது போல்
நந்திக் கடலில் மறைந்த  சூரியன்
நாளை உதிப்பான் பொங்கிடுவோம் நாம்

1 comment:

Unknown said...

சாய்ந்து விழக் கோழைகளுமல்ல
ஓய்ந்து விடச் சோம்பேறிகளுமல்ல
அந்திக் கடலில் மறைந்த கதிரவன்
மறுநாள் வருவது போல்
நந்திக் கடலில் மறைந்த சூரியன்
நாளை உதிப்பான் பொங்கிடுவோம் நாம்//

அருமை...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...