Tuesday, 6 December 2011

ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா?

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயின் பணிக்காக ஈரானுக்கு வேவு பார்க்கச் சென்ற  ஆளில்லாப் போர்விமானம் ஒன்று காணாமற் போனதாக 2011 டிசம்பர் மாத ஆரம்பத்தில் அறிவித்தது. டிசெம்பர் 4-ம் திகதி ஈரான் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானமொன்றை தனது இணையவெளிப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. இந்த முரண்பட்ட செய்தியில் அடிபடுவது அமெரிக்காவிடமுள்ள மிக நவீன  வேவுபார்க்கும் ஆளில்லா விமானமான RQ-170 வகையைச் சேர்ந்தது. இது அமெரிக்காவிடம் உள்ள மிக உயர்தர உணர்திறனுடைய கருவிகளைக் கொண்டது. இந்த சம்பவம் இரு அம்சங்களை உணர்த்துகிறது: 1. எதிர்காலப் போர் முனைகளில் ஆளில்லாப் போர்விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. 2. எதிர்காலப் போர் இணையவெளியிலும் நடக்க விருக்கிறது.

இரு வகையான ஆளில்லாப் போர் விமானங்கள்
முதலில் வேவு பார்க்க மட்டும் பாவிக்கப்பட்டு வந்த ஆளில்லப் போர் விமானங்கள் இப்போது ஏவுகணைகள் வீசித் தாக்குவதற்கும் பயன் படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும்  ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன.

அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்களின் கருத்துப்படி அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-170வீழ்த்தும் திறன் ஈரானிய இணைய வெளிப் போராளிகளிடம் இல்லை. யார் இந்த இணைய வெளிப் போராளிகள்? இப்போது பல நாடுகளும் கணனி வல்லுனர்களை தமது படையில் இணைத்து அவர்கள் மூலம் எதிரி நாட்டு படைத்துறையின் கணனிகளை ஊடுருவித் தகவல்களை அறிதல் எதிரி நாட்டு கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். பல நாடுகளிலும் இதற்கு என கணனி வல்லுனர்களைக் கொண்ட சிறப்பு படையணிகள் உண்டு. 2011 செப்டம்பரில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் ஒரு வகை வைரஸ் பரவியது. இதனால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் சில நாட்களாக ஆப்கானிஸ்த்தானிலும் சூடானிலும் செயற்பட முடியாமற் போனது.

அமெரிக்காவின் படைத்துறையினரினதும் அமெரிக்கப் படைத்துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களினதும் கணனிகள் மீது அண்மைக்காலங்களாக பல ஊடுருவல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று நம்பப்படுகின்றன. சீனா பல அமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தகவல்களைத் திருடியது என்றும் தொடர்ந்தும் திருடி வருகிறது என்றும் குற்றச் சாட்டுக்கள் பல அமெரிக்க ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.

அமெரிக்க ஆளில்லாப் போர் விமானம் ஈரானில் பழுதடைந்து விழுந்ததால் அல்லது சுடப்பட்டு  விழுந்ததால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் தொழில் நுட்ப இரகசியங்கள் எதிரி கைக்குப் போய்விடுமா என்ற அச்சமும் அமெரிக்கப் படைத்துறையினரிடம் நிலவுகிறது. அமெரிக்கப் படைத் துறையினர் ஈரானிடம் தமது   ஆளில்லா வேவு  விமானமான RQ-170வீழ்த்தும் திறன் இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர்.  Lockheed Martin நிறுவனம் உறபத்தி செய்யும் RQ-170 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பல அழிவுகளை எதிரிகளுக்கு ஏற்படுத்தியதால் Beast of Kandahar என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும். ஒசமா பின் லாடனைத் தேடிப் பிடிப்பதிலும் இந்த RQ-170 பெரும் பங்காற்றியது. பின் லாடனின் மளிகைமீது தாக்குதல் நடக்கும் போது அதை நேரடி ஒளிபரப்பில் வெள்ளை மாளிகையில் இருந்து பார்க்க இந்த RQ-170 ஆளில்லா விமானமே பாவிக்கப்பட்டது.  எதிரிகளின் ரடார்களின் "கண்களில்" மண் தூவிவிட்டு எதிரியின் விண்பாதுகாப்புக் கட்டமைப்பிற்குத் தெரியாமல் ஊடுருவி எதிரியின் பிரதேசத்து படை நிலைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க வல்லது RQ-170. எதிரியின் கைகளில் அகப்படாமல் தன்னைத் தானேயும் தன்னிடம் உள்ள தகவல்களையும் அழிக்கும் திறன் கொண்டது RQ-170. அமெரிக்கா இந்த RQ-170ஆளில்லா விமானங்கள் தொடர்பான தகவல்களை மிக மிக இரகசியமாகவே வைத்திருந்தது. இது ஈரானிடம் சிக்கியிருப்பது இரு பெரும் பாதகத்தை அமெரிக்கப் படைத்துறைக்கு ஏற்படுத்தும். ஒன்று அதில் உள்ள அதி உயர் உணர் கருவிகள்  பற்றிய தொழில் நுட்பம் எதிரிகள் கையிச் சேர்ந்து விடும். மற்றது அதன் தகவல் திரட்டும் திறனில் இருந்து பாதுகாக்கக்கூடிய தொழில் நுட்பத்தை எதிரிகள் பெற்று விடுவர்.

அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியப்பாடு: குறிப்பிட்ட ஆளில்லா விமானத்திற்கும் அதை இயக்குபவர்களுக்கும் இடையிலான தொடர்பை சீன நிபுணர்கள் குழப்பம்(jam) செய்து துண்டித்து அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரையிறக்குவது. அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170 ஐ சீனா வீழ்த்தியாதா அல்லது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரை இறக்கியதா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்த சீனாவிற்கு இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கலாம்:

1.பிராந்திய முக்கியத்துவம்.
சிரியப் புரட்சியில் பஸார் அல் அசாத் கவிழ்க்கப்படுவதையோ ஈரானுக்கு எதிராக அணு ஆயுத உறபத்தியைச் சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது படை எடுப்பதையோ சீனா விரும்பவில்லை. அவை இரண்டும் நடந்தால் ஆபிரிக்காவும் குறிப்பாக எண்ணெய் வள அரபு நாட்டிலும் சீன நலன்களுக்குப் பெரும் பாதகம் ஏற்படும். சீன படைத்துறை வல்லுனர்கள் குறிப்பாக இணைய வெளிப் போராளிகள் ஈரானில் இருந்து செயற்படலாம்.

2. தொழில் நுட்பம் பெறுதல்
எதிர்காலப் போர்முனையில் ஆளில்லப் போர் விமானங்கள் பெரும் பங்கு வகிக்கவிருப்பதால் சீனா தனது ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் பெரும் கவனம் செலுத்துகிறது. 2010இல் சீனாவில் நடந்த விமானக் கண்காட்சியில் சீனா தனது சீறும் யாளி என்னும் பெயர் கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களைக் காட்சிப்படுத்தியது. அதில் சீனா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் எப்படி தாய்வான் கரைகளில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை இனம் கண்டு தாக்கும் நிலையங்களுக்கு தகவல்களை அனுப்புவதை தெளிவு படுத்தியது. ஆளில்லாப் போர் விமானங்கள் பாவனையில் அமெரிக்கப் படைத்துறை கண்ட வெற்றியை உணர்ந்த சீனா தான் அந்தத் துறையில் மற்றைய நாடுகளை விட முந்திச் செயற்படுகிறது அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170 ஐ சீனா இணைய வழி ஊடுருவினதால் அது ஈரானில் விழவேண்டிய சூழ் நிலை உருவாகி இருக்கலாம். வீழ்ந்த விமானத்தில் உள்ள தொழில் நுட்பங்களை சீனா பெற இது ஒரு வழி.


தொலைக்காட்சிப் பெட்டி என்னிடம் ரிமோட் பக்கத்து வீட்டில்?
இஸ்ரேலிய ஊடகங்கள் அமெரிக்க ஆளில்லா விமானங்களை ஈரான கைப்பற்றியதாகவே செய்தியை வெளியிட்டன. அப்படியாயின் ஒரு கட்டத்தில் RQ-170 கட்டுப் பாட்டை ஈரான் இணையவழியாகத் தன்வசமாக்கி தரையிறக்கியதா? அமெரிக்காவின் ரடார் தவிர்ப்புத் தொழில் நுட்பம் (stealth technology), காணொளிப் பதிவுத் தொழில் நுட்பம், உணரிகளின் தொழில் நுட்பம் போன்றவை சீனாவசமானதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...