Saturday, 5 November 2011

சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) மூலம் தகவல்கள் திருடுகின்றன - அமெரிக்கா குற்றச் சாட்டு.

சீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers)  தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைக்கு (காங்கிரஸ்) சமர்ப்பிக்கை பட்ட "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகளிலுமிருந்து பல ஊடுருவிகள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கணனிகளை ஊடுருவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது.

2009இல் சீனாவிலிருந்தும் இரசியாவில் இருந்தும் இணைய ஊடுருவிகள்(Hackers) அமெரிக்க மின்சார வழங்கல் கட்டமைப்பின் இணையங்களை ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊடுருவிகள் அமெரிக்காவுடன் ஒரு போர் நடக்குமிடத்து அமெரிக்காவின் மின் விநியோகத்தை எப்படிச் சிதைப்பது என்பது பற்றியே அறிய முற்பட்டனர்.

இணையவெளி ஊடுருவல்கள்
கணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.

இணையவெளிப் போராளிகள்
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.

இப்போது அமெரிகாவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers)  திருடுகின்றன என்ற குற்றச் சாட்டு இப்போது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது. "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையில் இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை திருடுவது இன்னும் அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடாஃபிக்கு எதிரான் போரில் ஊடுருவலைக் கைவிட்ட அமெரிக்கா
கடாஃபிக்கு எதிரான தாக்குதல்களை நேட்டோப் படையினர் ஆரம்பிக்கும் போது அமெரிக்கா லிபியாவின் இணையக் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவி லிபியாவின் விமான எதிர்ப்புக் கட்டமைப்பைச் சிதைக்கும் திட்டத்தை இறுதியில் கைவிட்டது. தான் அப்படிச் செய்தால் சீனாவும் இரசியாவும் எதிர்காலத்தில் இந்த முறையைக் கூசாமல் பின்பற்றும் என அஞ்சியே அமெரிக்கா இத் திட்டத்தைக் கைவிட்டது.

இனிவரும் காலங்களில் இணையவெளிகளி ஊடுருவுவதும் அதைத் தடுப்பாதும் பெரும் போட்டியாக பல நாடுகளிடை அமையப் போகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...