Thursday, 24 November 2011

மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார்.

அண்மைக் காலமாக தலிபான் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் சந்தித்த பின்னடைவுகள்:-
1. பின் லாடன் கொலை
 சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பின் லாடன் கொல்லப்பட்டது அல் கெய்தாவிற் பெரும் பின்னடைவு. அத்துடன் பின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கியிருந்த மூன்று மாடி மாளிகையில் இருந்த பல கணனிகளையும் இலத்திரன் தகவல் பேழைகள் பலவற்றையும் எடுத்துச் சென்று விட்டனர். அதில் இருந்த தகவல்கள் அல் கெய்தா எதிரான போரில் அமெரிக்காவிற்கு மிக உதவியது. இது பாக்கிஸ்த்தான் அரசிலும் படைத்துறையிலும் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் இருக்கும் ஆதரவுத் தளங்களைக் கண்டறிந்து சிதைக்கப் பெரிதும் உதவின.

2. அதியா அப் அல் ரஹ்மான் கொலை
பின் லாடனைத் தொடர்ந்து அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான அதியா அப் அல் ரஹ்மான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். அதியா அப் அல் ரஹ்மான் ஈரானுடன் நல்ல உறவில் இருந்தவர். அத்துடன் சிறந்த பேச்சாளர், நிர்வாகி, பல நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் மிகுந்தவர்.

3. அன்வர் அல் அவ்லாக்கி கொலை
அதன் பின்னர் அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி  யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார்.

4. ஆளில்லாப் போர் விமானங்கள்
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில வருடங்களாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை அடுத்த ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

5. விலகும் உறுப்பினர்கள்
அல் கெய்தாவிலும் தலிபானிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தமது குடும்பங்களில் இருந்து முற்றிலும் விலகி தனித்தே வாழவேண்டியவர்களாக உள்ளனர். இது பல உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறச் செய்தது. பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

6. பொருளாதாரப் பிரச்சனை மதப் பிரச்சனையிலும் பெரிது
அமெரிக்காவும் மேற்குலகும் இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற பரப்புரையிலும் பார்க்க தாம் வாழும் நாட்டில் சிறந்த பொருளாதார நிர்வாகம் அவசியம் என்ற பரப்புரையால் படித்த பல இசுலாமிய இளைஞர்கள் கவரப் பட்டுள்ளனர் என்பதற்கு  துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம்/மல்லிகை புரட்சி எடுத்துக் காட்டுகிறது. ஒரு ஊடகம் இசுலாமிய இளைஞன் ஏகே-47 துப்பாக்கி வாங்குவதிலும் பார்க்க ஐ-பாட் வாங்குவதில் அதிக அக்கறை கொண்டுள்ளான் என்று எழுதியது. இந்த பின்னணியில் அல் கெய்தாவின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைகள் பின்னடைவைக் கண்டது.

இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

ஐமன் அல் ஜவஹிரியும் அவரது உதவியாளருமான அபு யஹியா அல் லிபியுமே இப்போது அல் கெய்தாவின் முக்கிய தலைவர்களாகக் கருதப் படுகின்றனர். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் பின் லாடன் தலை மறைவாக இருந்து கொண்டு ஒரே ஒரு தொடர்பாடல் உதவியாளர் மூலமாக அல் கெய்தாவை இயக்கினார். பின் லாடனின் கொலைக்குப் பின்னர் ஐமன் அல் ஜவஹிரி தலைமைப் பொறுப்பை ஏற்றார் அவர் பின் லாடனைப் போல் அல்லாமல் கள நிலையை நேரடியாக அறிந்து களத்தில் நின்று செயற்படுகிறார். இதனால் அவரால் பின் லாடனிலும் பார்க்க சிறப்பாகச் செயற்பட முடிகிறது. அத்துடன் பாக்கிஸ்தானில் பரவலாக ஏற்பட்ட எதிர்ப்பால் அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதலை அண்மைக் காலங்களாக மட்டுப்படுத்தியுள்ளது.

 அல் கெய்தாவின் புதிய உத்தி: Lone wolf
அமெரிக்காவின் நவீன கருவிகள் தனது தொடர்பாடல்கள் மூலம் தன் இருப்பிடத்தை அறிந்து விடும் என உணர்ந்த பின் லாடன் அல் கெய்தாவை பல Franchise இயக்கங்களாக மாற்றினார். அனுமதி பெற்ற(Franchise) சிறு இயக்கங்கள் பின் லாடனின் உத்தரவின்றி அல் கெய்தாவின் கொள்கைகளுக்கு ஏற்ப சுயமாகச் செயற்பட முடியும். ஐமன் அல் ஜவஹிரி இப்போது அல் கெய்தாவை தனி ஓநாய்(Lone wolf)கள் கொண்ட இயக்கமாக மாற்றியுள்ளார். அல் கெய்தாவின் உறுப்பினர்கள் தனித்து ஒரு தனி மனித இயக்கமாகச் செயற்படுவதை தனி ஓநாய்(Lone wolf) என அழைப்பர். இப் புதிய தனி ஓநாய்(Lone wolf)கள் அமெரிக்காவிற்கு இனி வரும் காலங்களி பெரும் சவாலாக அமையப் போகின்றன. இப்படிப்பட்ட ஒரு தனி ஓநாய்(Lone wolf) 21-ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் குண்டு வைக்கச் சென்ற இடத்தில் பிடிபட்டார். 27 வயதான அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவரின் நடவடிக்கை அமெரிக்காவை பெரும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது. அல் கெய்தாவின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று கூறிய அமெரிக்க உளவுத் துறையினர் இப்போது அல் கெய்தாவை அழிக்க இன்னும் சில வருடங்கள் எடுக்கும் என்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...