15-35 GMT: மும்மர் கடாஃபி பத்திரமாக இருந்து லிபிய விடுதலைப் போரை வழிநடத்துவதாக அவரது பேச்சாளர் மூசா இப்ராகிம் AP செய்திச் சேவைக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துள்ளார்.
கடாபியின் படைகளை விரைவில் பென்காஜி நகரத்தில் இருந்து விரட்டிய கடாஃபி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் மிகுதி இடங்களைக் கைப்பற்ற பலத்த சிரமத்தை அனுபவித்தனர். அவர்களிடை ஒற்றுமையின்மை ஒரு காரணம். அதனால் பலத்த சிரமத்தில் தவித்த கிளர்ச்சிக்காரர்கள் முன்னேறுவதும் பின்வாங்குவதுமாக இருந்தனர். ஜூலை 28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார். கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கடாஃபியுடன் இருந்து பிரிந்து வந்தவர். அவர் கடாஃபியின் இரட்டை உளவாளி என்றும் சந்தேகிக்கப்பட்டது. அவர் ஒரு மேற்குலக ஆதரவாளர் என்பதால் அவரை இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்கள் கொன்றனர் என்றும் கூறுகின்றனர். கிளர்ச்சிக்காரர்கள் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டதன் பின்னர் வேகமாக முன்னேறினர். கடாஃபிக்கு எதிராக பல வெற்றிகளை ஈட்டினர். ஆனால் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் இனது கொலை தொடர்பாக மர்மம் தொடர்கிறது.
கடாஃபிக்கு எதிரான காட்டாறாக கட்டார் நாடு.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் படைத்துறை அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படை அல்ல. நேட்டோ நாடுகள் தமது படைகளை லிபியாவிற்கு அனுப்ப விரும்பவில்லை. அவை இப்போது உள்ள பொருளாதர நெருக்கடியில் உள்நாட்டில் எதிர்ப்பைத் தோற்றுவிக்கலாம். காட்டார் நாடு பிரித்தானியாவின் ஓய்வு பெற்ற படைத்துறை நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை காடாஃபிக்கு எதிரான போரை நெறிப்படுத்தச் செய்தது. காட்டாரின் சிறு விமானப் படையும் நேட்டோப் படைகளுடன் இணைந்து கடாஃபிக்கு எதிராக குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டது.
கடாஃபியின் பணத்தால் கடாஃபியைத் தாக்கிய மேற்கு நாடுகள்.
மேற்கு நாடுகள் இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்து கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் தம்மிடமிருந்த லிபியச் சொத்துக்களை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கொடுத்தது. நெதர்லாந்து தன்னிடம் இருந்த் லிபியச் சொத்துக்களை உலக சுகாதார நிறுவந்த்த்திடம் வழங்கி அதை லிபிய மக்களின் சுகாதாரத்திற்கும் போரில் காயமடைந்தவர்களைப் பராமரிக்க செலவிடச் சொன்னது.
கடாஃபியின் ஆயுதங்கள் திருடப்பட்டன.
பிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்த வேளையிலும் பலத்த ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம்.
சிறு குழுக்கள்(Sleeper Cells)
திரிப்போலி நகரில் வாழ்ந்த கடாஃபி அதிருப்தியாளர்கள் அங்கிருந்து களவாக வெளியேறி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடம் பயிற்ச்சி பெற்று மீண்டும் திரிப்போலி நகருக்குள் நுழைந்தனர். வெளியில் இருந்தும் பலர் கடல் மார்க்கமாக மீனவர்கள் போல் திரிப்போலீ நகருக்குள் நுழைந்து விட்டனர். இவை திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) ஆகச் செயற்பட்டனர்.
கட்சி மாறிகள்.
நேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம். கடாஃபியுடன் இருந்தவர்களில் 70%மானவர்கள் பயத்தினாலேயே கடாஃபியின் ஆதரவாளர்களாக இருந்தனர். உரிய நேரத்தில் அவர்களில் பலர் கட்சி மாறினர். லிபியத் தலைநகர் திரிப்போலியில் பல கடாஃபி எதிர்ப்பாளர்கள் இருந்தனர். அவர்களிடம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களை வெளிநாட்டு உளவாளிகள் மூலம் வழங்கி இருந்தனர். ஆயுதங்கள் வழிபாட்டு நிலையங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இறுதிக் கட்டத்தில் திரிப்போலி நகரின் பெரும் பகுதி விரைவாகவும் இலகுவாகவும் கைப்பற்ற இவர்களே காரணம்.
கடாஃபி எங்கே?
இப்போது விடைகிடைக்காத கேள்வியாக இருப்பது கடாஃபியும் அவரது குடும்பத்தினரும் எங்கே என்பதுதான். கடாஃபியுடன் கடைசிவரை பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்த இரசியாவைச் சேர்ந்த உலக சதுரங்க சபையின் தலைவர் கடாஃபி கடைசிவரை திரிப்போலியில் இருந்தார் என்றே சொல்கிறார். கடைசியாக அவருடன் கடாஃபி 23-08-2011 செவ்வாய்க்கிழமை திரிப்போலியில் இருந்து உரையாடினாராம். திரிப்போலியில் சண்டை தொடர்கிறது. கடாஃபி தனது மாளிகையின் கீழ் பல சுரங்கப்பாதைகளை அமைத்திருந்தார் அதன் வழியாகத் தப்பி ஓடி இருக்கலாம். கடைசியாக கடாஃபி வெளிவிட்ட உரையின் பின்னணியில் கோழிக் குஞ்சுகளின் சத்தம் கேட்ட படியால் அவர் திரிப்போலி விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள தோட்டத்தில் தங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்கிலீக்கின் தகவல்களின் படி கடாஃபி கடலுக்கு மேலால் விமானத்தில் பறப்பதற்குப் பயம் கொண்டவர் என்று சொல்லப்பட்டது. அதனால் அவர் கடல் மார்க்கமாக கப்பலில் தப்பிச் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. கடாஃபி தனது பிறந்த ஊரான சிராரேயின் மறைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சிராரே இப்போதும் கடாஃபி ஆதரவுப் படைகளின் வசமே இருக்கிறது திரிப்போலியில் இருந்து சிராரே செல்லும் பாதையில் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆச்சரியமளிக்கும் எதிர்ப்பை எதிர் கொள்கிறார்கள். கனடா தனது மிகச் சிறிய ரக ஆளில்லா விமானங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியுள்ளது. கடாஃபி மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இன்னொரு ஊர் சபா. அங்கு அவரது படையினரும் ஆயுதக் கிடங்குகளும் இருக்கின்றன. சிலர் கடாஃப் மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இடங்கள் பல இருக்கின்றன என்கின்றனர். சிலர் அவரது நேச நாடான சாட்டில் மறைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எல்லாம் ஊகங்களே. கடாஃபிக்கு 1.7 மில்லியன் டொலர்கள் விலை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காடாஃபியிடம் பத்து பில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் உள்ளது. அதில் பெரும்பகுதியை அவர் தமது நண்பர்களுக்கு தனக்கு உதவி செய்தால் தருவதாக வாக்களித்ததாக அவரது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். கடாஃபியைத் தேடுவதில் பிரித்தானிய உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எங்கே கடாஃபி என்பதற்கு உறுதியான பதில் இதுவரை இல்லை.
1 comment:
லிபியாவின் தற்போதைய நிலை குறித்து தரமான அலசல்.வாழ்த்துக்கள்.
Post a Comment