Monday 22 August 2011

கடாஃபிக்கு எதிரான இறுதிக் கட்டச் சதிகள்

41 ஆண்டுகாலம் லிபியாவை ஆண்டு வரும்(வந்த) மும்மர் கடாஃபியை எதிரிகள் மிக நெருங்கிவிட்டனர். அவரது இரு மகன்களை கைப்பற்றிவிட்டனர். சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். முகம்மட் கடாஃபி சரணடைந்தார். இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கமுன் செய்திகள் வேறுவிதமாக அமையலாம். மும்மர் கடாஃபிக்கு எதிராக அரங்கேறிய சதிகள் பலப்பல. தொடர்ச்சியான பல சதிகள் கடாஃபியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. கடாஃபியின் இன்னொரு மகனான சாதி கடாஃபி எனப்படும் உதைபந்தாட்ட வீரரும் கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

ஐநாவில் சதி
அரபு நாடுகளின் மல்லிகைப் புரட்சி லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக பெப்ரவரி 16-ம் திகதி கிளர்ந்த போது மேற்குலக நாடுகளின் பிரதிபலிப்பு துனிசியா, எகிப்து, பாஹ்ரெய்ன், சிரியா ஆகிய நாடுகளின் மக்கள் கிளர்ச்சிக்கான பிரதிபலிப்பிலும் பார்க்க வேறுபட்டே இருந்தது. கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. லிபியாமீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்-1973 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் முக்கிய அம்சம் கடாஃபியின் விமாங்கள் பறப்பதைத் தடுப்பதே. ஆனால் நேட்டோப்படையினர் கடாஃபிக்கு எதிராக சகல முனைகளிலும் தாக்குதல் நடத்தினர். கடாஃபியின் தொலைக்காட்சிச் சேவை நடக்கும் கட்டிடங்களையும் குண்டு வீசி நேட்டோப்படைகள் தகர்தபோது ஐநா மௌனம் சாதித்தது. கடாஃபின் விமானங்கள் பறப்பதைத் தடுத்தமை கிளர்ச்சிக்காரர்களின் கைகளை ஓங்கச் செய்தது.

நண்பர்களின் சதி
 ஐக்கிய நாடுகள் சபையில் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிரான தீர்மானம்-1973 இந்த ஆண்டும் மார்ச் 17-ம் திகதி கொண்டுவரப்பட்ட போது சீனாவும் இரசியாவும் தங்கள் இரத்து அதிகாரத்தைப் பாவிக்காமலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்து கொண்டன. தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டாலும் நேட்டோப் படைகள் ஐநாவிற்கு வெளியில் கூடி முடிவெடுத்து லிபியாவிற்கு எதிராக படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிந்துதான் இரண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டன. இத்தனைக்கும் கடாஃபியின் லிபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு.
கடாஃபியும் இத்தாலியப் பிரதமரும்
  அங்கீகாரச் சதி
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஒரு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையினர் அல்லர். அவர்கள் தொலவில் இருந்து சிறியரக ஏவுகணைகள் எறிகணைகளை வீசியே கடாஃபியின் படை நிலைகளைக் கைப்பற்றுகின்றனர். அதுவும் ஆமைவேகத்தில். அவர்களிடை ஒரு சிறந்த ஒழுங்கமைப்போ கட்டமைப்போ இல்லை. கடாஃபியின் படையினருடன் நேருக்கு நேர் மோதி அவர்களிடமிருந்து திரிப்போலியைக் கைப்பற்றுவது  என்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நேட்டோ அமைப்பினர் உணர்ந்திருந்தனர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபைக்கு (National Transitional Council - NTC) மேலும் படைக்கு ஆள்களைச் சேர்க்கவும் ஆயுதங்களைத் திரட்டவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி வழங்க நேட்டோ செய்த சதிதான் இந்த அங்கீகாரம். 

நிதிச் சதி
மேற்கு நாடுகள் இப்போது  இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்து கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது.
கடாஃபியும் முன்னாள் பிரித்தானியப் பிரதமரும்

ஆயுதத் திருட்டுச் சதி.
பிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்த வேளையிலும் எந்த வித ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம். திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) திரிப்போலி நகருள் அமைக்கப்பட்டன.
நேட்டோ விமான கடற்படைத் தாக்குதல்கள்-courtesy Telegraph

ஆபிரிக்க ஒன்றியத்தின் சதி
லிபிய மக்கள் பலர் ஆபிரிக்க ஒன்றியம் கடாஃபிக்கு உதவும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் லிபிய விவகாரத்தில் ஒன்றிய நியமங்களைக் கூடக் கடைப்பிடிக்கவில்லை.

 அடுத்துக் கெடுத்த சதி
நேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம்.

இறுதித் தாக்குதல்
கடாஃபிக்கு எதிரான இறுதித் தாக்குதல் வெற்றீகரமாக அமைந்தமைக்கான காரணங்கள்:
1. கடல் மார்க்க தரையிறக்கம். இருநூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் கடல் மார்க்கமாக திரிப்போலியில் இறங்கினர். இவர்கள் கடாஃபியின் படையினருடன் திரிப்போலியின் கிழக்குப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கடாஃபியின் படைகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தனர்.
2. காமிஸ் படையணியினரின் வீழ்ச்சி. கடாஃபியின் சிறப்புப் படையணியினரின் தளத்தை  திரிப்போலியின் மேற்குப் புறமாக வந்த கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றியது கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரு வெற்றியாக அமைந்தது. பின்னர் அவர்கள் 15மைல்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி திரிப்போலி நகரை நோக்கி முன்னேறினர்.
3.  கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells). திரிப்போலி நகருள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆயுதங்களும் இரகசியமாக வழங்கப்பட்டன. ஆயுதங்கள் வழிபாட்டுத்தலங்களில் மறைத்து வைக்கப்பட்டன. இக்குழுக்கள் உரிய நேரம் வரும்வரை காத்திருந்தன. திரிப்போலி நகர் எதிர்பார்த்ததிலும் வேகமாக வீழ்ந்தமைக்கு இக்குழுக்களே காரணம்.
4. நேட்டோ விமானங்களின் தொடர் குண்டுத்தாக்குதல்கள். தற்காலப் போர் வெற்றியை விமானப்படைகளே தீர்மானிக்கின்றன. கடைசிவர நேட்டோப் படைகளே போரில் முக்கிய பங்கு வகித்தன.

பிந்திய செய்திகள்
1. கடாபி சிம்பாவே அல்லது அங்கோலாவிற்குத் தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2. 7-00 GMT லிபியத் தலைநகரில் கடாஃபி ஆதரவுப் படைகளின் எதிர்ப்பு குறைந்து வருகின்றது. தலை நகரின் 80% கிளர்ச்சிக்காரர்கள் கையில்.
3. 8-00 GMT - கடாஃபியின் இருப்பிடம் பற்றி அறிய முடியவில்லை. திரிப்போலியில் உள்ள பச்சை சதுக்கம் கிளர்ச்சிக்காரர்களால் மாவீரர் சதுக்கம் எனப்பெயரிடப்பட்டது.
4. 9-00 GMT - திரிப்போலி நகரில் 95% கிளர்ச்சிக்காரர்கள் வசம்.
 5 . 14-00 GMT -எரிபொருள் விலை வீழ்ச்சி.இனி லிபியாவில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி ஒழுங்காக நடக்கும் என்ற நம்பிக்கையில்  பிறென்ற் மசகு எண்ணை விலை 1.7% ஆல் $106.8இற்குவீழ்ச்சியடந்தது. அமெரிக்க மசகு எண்ணெய் விலை $83.37.
6 . 15-00 GMT - தென் ஆபிரிக்காவின் விமானம் ஒன்று கடாஃபியை ஏற்றிச் செல்வதற்கு துனிசியாவில் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்கா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற உடனபடிக்கையில் கையொப்பம் இடாததால் அது கடாஃபிக்கு பாதுகாப்பாக அமையும். காடாஃபிக்கு உகந்த மற்ற நாடுகள் வெனிசுலேவியா, கியூபா, இரசியா, இலங்கை ஆகும்.
7 . 15-30 GMT - ஐநா பொதுச் செயலர் வாய் திறந்தார். தனது நாவன்மையில் நம்பிக்கை இல்லாத் பான் கீ மூன் லிபியா தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடை நடாத்தினார். லிபியாவில் மேலும் இரத்தக் களரி ஏற்படக்கூடாது, கடாஃபியின் படையினர் போரை நிறுத்த வேண்டும் என்றார். ஐநா லிபியாவிற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கும் என்றார். ஆபத்துக்கள் இனிவரலாம் என்றாலும் இது ஒரு நம்பிக்கை தரும் கணம் என்றார் ஐநா பொதுச் செயலர்.
 7 . 15-38 GMT -மும்மர் கடாஃபி இப்போதும் திரிப்போலியில் இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க பெண்டகன் தெரிவித்துள்ளது.
8 . 15-48 GMT - சிரியத் தொலைக்காட்சி கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்படவில்லை என்கிறது. அவர் இப்போதும் நாட்டுக்காக போராடுகிறாராம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...