Tuesday, 26 April 2011

தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளை அனுமதிக்கும் ஐநா


இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு தனக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை நீண்ட இழுத்தடிப்பின் நேற்று வெளியிடப்பட்டது.

மேற்படி அறிக்கையில் பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழின விரோதிகள் தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை இழிவுபடுத்த மேற்கொண்ட எல்லாப் பிரச்சாரங்களும் இடம் பெற்றுள்ளன. சிங்கள அரசுக்கு எதிராக ஐந்து குற்றச் சாட்டுக்களை முன்வைத்த அறிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறது. அறிக்கை வெளிநாடுகள் வாழும் தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறது. இலங்கையில் "இணக்கப்பட்டிற்கு" வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள் தடை என்கிறது. இலங்கை இந்திய அரசுகளின் கைக்கூலிகள் பான் கீ மூனின் நிபுணர்குழுவிற்கு தமது தரப்பு பொய்ப்பரப்புரைகளை மிகச் சிறந்த முறையில் முன் வைத்துள்ளனர் என்பது அறிக்கையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மேற்படி அறிக்கையின் 116-ம் பக்கத்தில் உள்ள 428-ம் பந்தியில் அறிக்கையின் முடிபுகளின் 4-ம் பரிந்துரையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டை முடிந்து இரு ஆண்டுகள் ஆகியும் இன முரண்பாடுகளைக் களையும் முயற்ச்சிகள் எதுவும் மேற் கொள்ளப் படவில்லை என்கிறது அறிக்கை. கடத்தல்கள் கொலைகள் இலங்கையில் தொடர்ந்து நடக்கின்றன என்கிறது அறிக்கை. வன்னியில் இயல்பு வாழ்க்கை இல்லை என்றும் சொல்கிறது அறிக்கை.

பான் கீ மூன் தான் சுயமாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். நடவடிக்கையை இலங்கை அரசு அல்லது ஐநாவில் உள்ள நாடுகள்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லி தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பாது காப்பை அவர் தேடுகிறார். இதனால் அங்கு இன்றும் நடக்கும் வன் முறைகளை அவர் அனுமதித்தவர் ஆகிறார். நடந்தவை பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாலும் நடக்கும் வன்முறைகளையும் நடக்கப் போகும் வன்முறைகளையும் தடுக்கும் பொறுப்பில் இருந்து ஐநா தவறுவிடுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...