ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் புரட்சியாளர்கள் கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகளுடன் ஆரம்பிப்பதுண்டு. எகிப்தில் ஆட்சிமாற்றம் சமூகவலைத்தளங்கள் கைபேசித் தகவல்கள் செய்மதித் தொலைக்காட்சிகளுடன் நடக்கிறது.
எகிப்திய மக்கள் சிறந்த மதபக்தர்கள் ஆனால் ஆட்சியில் மதம் சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை. எகிப்து உலகின் மிக நீண்ட கால கலாச்சாரத்தை கொண்ட சில நாடுகளில் ஒன்று. எகிப்திய மக்கள் தொகையில் இளையோரே அதிகம். மொத்த மக்கள் தொகையில் மூன்றின் இரு பங்கினர் முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் ஒரு இரத்தக் களரியை விரும்பியதில்லை. எதிர்க்கட்சியினருக்கு தம்மை முபாரக்கின் மகனிடம் இருந்து பாதுகாப்பதே பெரும்பாடு. அரபு நாட்டு சர்வாதிகாரிகள் தங்கள் மேற்கு நாட்டு தங்கள் மக்கள் தங்களுக்கு கீழ்படிந்து இருப்பதாகவும் தங்கள் மக்களின் மனித உரிமைகளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறிவந்தனர். அரபு நாட்டு மக்கள் சர்வாதிகரிகளி குடும்ப ஆட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக பலகாலமாக மேற்கு நாட்டு அரச தந்திரிகள் நம்பினர். ஆனால் அதிகரிக்கும் ஊழல், வறுமை, வேலையில்லாப் பிரச்சனை அல் ஜசீராத் தொலைக்காட்சி மூலம் உலகை கண்டமை துருக்கி நாட்டின் வளர்ச்சி போன்றவை மக்களை வேறு விதமாக சிந்திக்க வைத்து விட்டது.
சமூக வலைத்தளங்களும் செய்தி ஊடகங்களும்
எகிப்திய எழுச்சிக்கு சமூகவலைத்தளங்களான fஏஸ்புக்கும் டுவிட்டரும் காரணமல்ல என்று சில அமெரிக்க விமர்சகர்கள் காட்ட முனைகிறார்கள். மேற்கத்திய பணமுதலைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் மட்டுமே பன்னாட்டு ஊடக ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாடு எகிப்தில் ஆட்டம் கண்டுவிட்டது. இதன் காரணமாக இருக்கலாம். எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர்.
வால் கொனிம் (Wael Ghonim) என்ற எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeedஎன்ற தளத்திற்கு 819,292 இரசிகர்கள் இருக்கிறார்கள்.
எழுச்சியின் வித்து.
எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர். அஸ்மா மஹ்பூஸ் தனது தற்கொலை முயற்ச்சியுடன் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் முகப்புத்தக மூலம். ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது.
முபாரக்கின் படையினர்
எழுச்சிக்காரர்களை அடக்க முபாரக் தங்கிகள் கவச வாகங்னகள் சகிதம் தனது படையினரை அனுப்பினார். படையினரைக் கண்டு மக்கல் அஞ்சவில்லை. மக்களின் உறுதிப்பாட்டைக் கண்ட படையினர் அவர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தயங்கியது. படையினர் எம்மவர் என்ற அணுகு முறையை எழுச்சிக்காரர் கையாண்டனர். விரைவில் படையினருக்கும் எழுச்சிக் காரர்களுக்கும் இடையில் நல்ல உறவு மலர்ந்தது. எகிப்தியப் படைத்துறை முபராக்கின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று மேற்கத்திய ஊடகங்கள் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டின.
முதல் தப்பி ஓடிய முபாரக்கின் மகன் கமல்
எகிப்த்திய படைத்துறையினருக்கு முபாரக்கின் மகனான கமலைப் பிடிக்காது. அவரை அறவே வெறுத்தனர். அவர் முபாரக்கிற்கு பின்னர் பதவிக்கு வருவதை படைத்துறை அதிகாரிகள் எவரும் விரும்பவில்லை. இதனால் எழுச்சி தொடங்கிய உடனேயே முபாரக் தனது மகனை இலண்டன் அனுப்பி விட்டார்.முபாரக்கின் இமாலயத் தவறு.
எழுச்சியாளர்கள் வலைத் தளங்களையும் கைப்பேசிகளையும் பாவிக்கிறார்கள் என்பதற்காக எகிப்திய முன்னாள் அதிபர் ஹஸ்னி முபாரக் வலைத் தொடர்புகளையும் கைப்பேசிச் சேவைகளையும் துண்டித்தார். இது பலரையும் ஆத்திரமடையச் செய்தது. முபாரக்கிற்கு எதிரான எழுச்சிக்கு வலுவூட்டியது.
அரபு உலகில் ஒரு வித்தியாசமான எழுச்சி
ஒரு அமெரிக்க சார்பு சர்வாதிக்கு எதிராக ஒரு அரபு நாட்டில் இசுலாமிய அடிப்படை வாதிகள் கிளர்ந்து எழாமல் மத சார்பற்ற ஒரு எழுச்சி நடந்தது ஒரு வித்தியாசமான நிகழ்வு.அமெரிக்கக் காய் நகர்த்தல்
எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அதை எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். அமரிக்கக் காய் நகர்த்தல் நாய் நகர்த்தல் ஆனது. வெற்றுக் குரைப்பு மட்டுமே. ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா தனது பிராந்திய தந்திரோபாயங்களை சிறிது கோட்டை விட்டுவிட்டது. ஒபாமா நிர்வாகம் துனிசியாவின் அதிபர் பென் அலிபோல் ஹஸ்னி முபாரக் பதவியிலிருந்து விரட்டப்படுவதை விரும்பவில்லை. மாறாக முபாரக் மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தையும் ஆட்சி முறைமை மாற்றத்தையும் ஏறபடுத்தி தனது பிராந்திய தந்திரோபாய நலன்களை பேண முயன்றது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு எகிப்தில் ஏற்பட்டது படு தோல்வியே. அமெரிக்கா தன்னை நடுநிலையாளராகக் காட்ட முயன்றது. ஆனால் எழுச்சி செய்த மக்கள் மீது வீசப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் அமெரிக்காவில் செய்யப்பட்டவை. எழுச்சிக்காரர்களை மிரட்ட அவர்கள் மேல் தாழப்பறந்த f-16 விமானங்கள் அமெரிக்கத் தயாரிப்பு.
இறக்கத்திற்கு இரங்கவில்லை
முபாரக் தான் இறங்கிவருவது போல் சில அறிக்கைகளை விட்டார். பெப்ரவரி 10ம் திகதியன்று செப்டம்பரில் தான் பதவி விலகுவதாகவும் சொல்லிப்பார்த்தார். சம்பள உயர்வுகள் விலைக் குறைப்புக்கள் இப்படி எல்லாம் அறிவித்தார் முபாரக். மக்கள் மசியவில்லை. நீ உடனடியாகப் போய்த் தொலை என்ற அவர்களது கோரிக்கையில் இருந்து அவர்கள் இறங்க மறுத்தனர். தான் சகலவற்றிலும் வெறுப்படைந்துள்ளேன் என்றும் கூறிப்பார்த்தார் முபாரக். மக்கள் இரங்கவில்லை.முபாரக்கிற்கு ஆதரவாக இஸ்ரேலும் சவுதியும்
அமெரிக்காவில் நெருங்கிய நண்பர்களான சவுதி அரேபிய மன்னரும் இஸ்ரேலிய அரசும் அமெரிக்காவிற்கு பல அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கின. கடைசிவரைக்கும் முபாரக் பதவி விலகக் கூடாது என்று அந்த இரு தரப்பும் வேண்டின. அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் முபாரக்கின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று. எழுச்சியாளர்களை பகைத்துக் கொண்டால் அது தனது பிராந்திய நலன்களைப் பெரிதும் பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டது. முபாரக் உடன் பதவி விலக வேண்டும் என்று அறைகூவல் விடுவதையும் அமெரிக்கா கவனமாகத் தவிர்த்துக் கொண்டது. அப்படிச் செய்தால் மற்ற அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரிகள் அமெரிக்காவைச் சந்தேகக் கண்ணோடு பார்த்து வேறு வகையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள் என்று அமெரிக்கா அஞ்சியது.
காணமற் போன எழுச்சி ஏற்பாட்டாளர்
எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்களி ஒருவரான வால் கொனிம் (Wael Ghonim) எழுச்சி தொடங்கி மூன்றாம் நாள் காணமற் போனார். அவர் காவல்துறையினரால் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் தான் விடுவிக்கப்படமைக்கு ஒபாமா காரணமாக இருக்கலாம் என்று அவர் சொல்கிறார். தனது விடுதலைக்கு கூகிள் மிகவும் பாடுபட்டது என்றும் அவர் கூறுகிறார். அவர் விடுவிக்கப்பட்ட பின் தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு நடந்ததையும் கூறினார். முபராக்கின் காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் கூறினார். இதன் பிறகு எழுச்சியில் மேலும் பல்லாயிரக் கணக்கானோர் இணைந்து கொண்டனர். இனி முபராக் பதவியில் இருக்க முடியாது என்று அமெரிக்கா முடிவு செய்தது. இதனால் பல மேற்கத்திய அரசியல் விமர்சகர்கள் ஒபாமா நிர்வாகம் எகிப்திய விவகாரத்தை மோசமாகக் கையாளவில்லை என்று கருதுகிறார்கள். திரை மறைவில் அமெரிக்க இறுதி நாட்களில் சில மிரட்டல்களையும் முபாரக்கிற்கு விடுத்தது. அதில் ஒன்று தனது வருடாந்த இரு பில்லியன் டொலர் உதவியை நிறுத்துவது.
இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
எகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தற்போதுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும். அது இப்போது மதசார்பற்றவரான மொகமட் அல் பரடியை (Mohamed ElBaradei) என்னும் முன்னாள் பன்னாட்டு அணுசக்தி முகவரகத்தின் தலைவரை தலைமைத்துவம் ஏற்கும்படி கேட்கிறது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமக்கு ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறுகின்றனர். மொகமட் அல் பரடி (Mohamed ElBaradei)தான் கேட்டுக் கொள்ளப்பட்டால் எகிப்தின் தலைவராகுவேன் என்கிறார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு 20% மான எகிப்திய மக்களின் ஆதரவே உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஊழலற்ற சிறந்த ஆட்சியையும் சுதந்திரத்தையும் வேண்டிச் செய்யப்பட்ட மக்கள் எழுச்சி இனி எத்திசையில் பயணிக்கப் போகிறது? இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இளைய தலை முறையினரின் ஆதரவு குறைவு. முப்பது வருடங்டங்களாக எதுவும் செய்யாமல் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டை இளைய தலைமுறையினர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வைக்கின்றனர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு அரசியல் கட்சியல்ல அது ஒரு transnational movement நாடுகடந்த அமைப்பு என்று சொல்வோரும் உண்டு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல நாடுகளில் செயற்படுகிறது. அது எகிப்தில் ஆட்சி மாற்றத்தையும் ஆட்சி முறை மாற்றத்தையுமே விரும்புகிறது; ஆளவிரும்பவில்லை என்றும் கூறுகின்றனர் சிலர்.
ஆரம்பத்தில் முரண்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
காவல் துறையின் விழா நாளான ஜனவரி 25இல் காவல் துறையினருடன் இணைந்து கொண்டாடாமல் அவர்களை எதிர்க்கக் கூடாது என்று முதலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு தலைவர் எஸ்ஸாம் அல் எரியன் தெரிவித்திருந்தது இங்கு கவனிக்கக்தக்கது.
இஸ்ரேலின் அச்சம்
வடக்கில் ஹிஸ்புல்லா மேற்கில் ஹமாஸ் போன்றவற்றுடன் தெற்கில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆதிக்கம் செய்வதை இஸ்ரேல் மிகுந்த அச்சத்துடன் பார்க்கத் தொடங்கியது. இஸ்ரேல் ஒமர் சுலைமான் தலைமையில் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி எகிப்தில் நடப்பதையே விரும்புகிறது. உடன் எகிப்தில் அமையும் அரசு அல்லது அதைத் தொடர்ந்து வரும் அரசு ஒரு தீவிர இசுலாமிய சார்பு அரசாக அமைந்தால் தனது இருப்புக்கு ஆபத்து என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. சிலர் எகிப்து இன்னொரு பாக்கிஸ்தானாக உருவாகுமோ என்றும் அஞ்சுகின்றனர். இப்போதுள்ள நிலவரப்படை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் அமெரிக்கா எகிப்திய விவகாரத்தை கையாண்ட விதத்தில் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளன.தலை போனது வால்கள் நிறைய உண்டு
முபராக்கின் மந்திரி சபை இப்போதும் செயற்படுகிறது. ஊழலும் கொடுமையும் நிறைந்த பிராந்திய கவர்னர்கள் 29பேர் இன்றும் உள்ளனர். எகிப்திய அரச இயந்திரம் இப்போதும் முபாரக்கின் அடியாட்கள் பலரைக் கொண்டுள்ளது.
தற்போதைய நிலை
அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாராளமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council) இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது. முபராககின் மந்திரி சபை இப்போதும் செய்ற்படுகிறது. பல மந்திரிகள் மீது மக்களுக்கும் அவர்களின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் பலத்த வெறுப்பு உண்டு. பத்து நாடக்ளுக்குள் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு அது இரண்டு மாதங்களில் மக்களி அங்கீகாரத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படும்.வேலை நிறுத்தங்கள்
இச் சந்தர்ப்பத்தை பாவித்து காவல் துறை உடபட பல அரச ஊழியர்கள் அதிக ஊதியம் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முயன்றனர். இவர்கள் முபராக் ஆதரவாளர்களே. புதிய இராணுவ ஆட்சியாளர்கள் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமாக்கியுள்ளனர்.
வறுமை
எகிப்திய மக்களில் 40%மானோர் நாளொன்றிற்கு $2 வருமானம் மட்டுமே பெறுகின்றனர். எழுச்சியால் எகிப்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் கொடுக்கும் சுற்றுலாத் துறை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
மாற்றுத் தலைமை
வால் கொனிம் (Wael Ghonim)ஐ துரோகி என்றும் உளவாளி என்றும் குற்றம் சாட்டப்படுவதுண்டு. இது எழுச்சியாளர்களுக்குள் பல பிரிவினர் உண்டு என்பதைக் காட்டுகிறது. சரியான மாற்றுத் தலைமை இல்லாமை இப்போதைய எகிப்தின் பெரும் பிரச்சனை. உட்பூசல் இன்றி ஒற்றுமையாக பலதரப்பட்ட பிரிவினர்களை ஒன்றிணைக்க வேண்டியதும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டியதும்இப்போது பெரும் பிரச்சனை. எகிப்திய எழுச்சியில் படைத்துறையினர் நடந்த விதம் மிகவும் ஆச்சரியப்படவைத்ததோடு மிக மிக பாராட்டப்டட வேண்டிய ஒன்றுமாகும். எகிப்தியப் பல்கலைக்கழக அரசறிவியல் பேராசிரியர் முஸ்தபா ஒல்வி கூறுகிறார் "எகிப்தின் சமூக அரசியல் கட்டமைப்பு பெரிதும் மாறி விட்டது. இப்போது இளைஞர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்கள். இதை நிச்சயம் எகிப்திய படைத்துறையினர் கருத்தில் கொண்டு நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார்கள்." பேராசிரியர் முஸ்தபா ஒல்வியின் கூற்றை உறுதி செய்யும் வகையில் பல படைத்துறை உயர் அதிகாரிகள் பல இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். படைத்துறையிலும் அரச இயந்திரங்களிலும் பல தலைகள் இனி உருளலாம்.
பலரும் படைத்துறையினருக்கு எகிப்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கருதுகின்றனர். இப்போது எழுச்சியை அரங்கேற்றி வெற்றி கண்ட மதசார்பற்ற எகிப்திய இளைஞர்களின் பெரு முயற்ச்சி வீண்போனால் இசுலாமிய அடிப்படைவாதிகள் கை ஓங்கலாம். அப்படி ஒன்று மேற்குலகம் தனது முக்கிய வர்தகப்பாதையான சூயஸ் கால்வாய் ஓரத்தில் நடப்பதை அறவே விரும்பாது. எகிப்தில் நடந்த இரத்தக் களரியற்ற ஆனால் பல இலடசம் மக்கள் பலத்தசிரமத்துக்குள்ளான எழுச்சி மக்களை ஒரு விடிவை நோக்கி எடுத்துச் செல்லவிட்டால் புனிதப்போர்வாதிகளின் கை அரபு நாடுகளில் ஓங்கும் என்பதை மேற்குலகம் அறியும். பண உதவி, நோபல் பரிசு என்பவற்றுடன் அமெரிக்கா மீள நுழையுமா? காமால் நாசருக்குப்பின் அதுதான் நடந்தது.
2 comments:
ஒரு நல்ல பதிவு
நல்ல ஆழ அகலச் செய்யப்பட்ட ஆய்வு
Post a Comment