Wednesday, 29 December 2010

வங்கி அட்டை மோசடி செய்யும் கருவி


வங்கி அட்டைகளை எப்படி இலகுவாக மோசடி செய்ய முடியும் என்பதை வெளிக்காட்ட கேம்பிரிச் பல்கலைக்கழகம் உருவாக்கிய கருவி வங்கிகளை கடும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியபின் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் போது வங்கி அட்டையை சிறு கருவியினுள் செருக வேண்டும் பின்னர் அந்தக் கருவி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் காண்பித்து எமது இரகசிய இலக்கத்தை பதியும் படி வேண்டும். நாம் சரியான இலக்கத்தை பதியவேண்டும். முன்னர் இருந்த ஏற்பாட்டின்படி எமது அட்டையை செருகியபின் ஒரு சிறு பற்றுச் சீட்டு வெளிவரும் அதில் எமது கையொப்பத்தை இடவேண்டும். பின்னர் எமது கையொப்பத்தையும் வங்கி அட்டையில் உள்ள கையொப்பத்தையும் கடை ஊழியர் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்வார். ஒருவரது வங்கி அட்டை தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் அதை திருடியவர் அதன் பின்புறம் உள்ள கையொப்பம் இடும் பயிற்ச்சி பெற்றுக் கொண்டு மோசடி செய்யலாம். இதை தவிர்ப்பதற்காக Chip and Pin முறைமையை வங்கிகள் கடைப்பிடிக்கத் தொடங்கின.

Chip and Pin முறைமை கையொப்பமிடுவதில் உள்ள குறைபாடுகளை தவிர்க்கும் முகமாக அறிமுகப் படுத்தப்பட்டது. வங்கி அட்டை திருடப்பட்டாலும் இரகசிய இலக்கம் தெரியாமல் யாராலும் அதை பாவித்து பண மோசடி செய்ய முடியாது என நம்பப்பட்டது. ஆனாலும் பண மோசடிகள் தொடர்ந்தது. இந்த முறையில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்த கேம்பிரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன்சனும் ஆராச்சி மாணவன் ஒமர் சௌத்திரியும் ஈடுபட்டனர். சிறந்த Chip and Pin முறைமையை உருவாக்க பேராசிரியரும் அதை மோசடி செய்யும் வகைகளை உருவாக்கும் பணியில் மாணவரும் ஈடுபட்டனர். மாணவன் ஒமர் சௌத்திரி ஒரு சிகரட் பெட்டி அளவிலான கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியை சட்டைப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு கடையில் சென்று பொருட்கள் வாங்கியபின் சட்டைப் பையில் இருக்கும் கருவி கடையில் இரகசிய இலக்கம் கேட்கும் கருவிக்கு இலத்திரன் சமிக்ஞைகளை (Electonic signals) அனுப்பி பணம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ளச் செய்யும்.

கேம்பிரிச் பல்கலைக் கழகத்தின் இந்த ஆய்வு பகிரங்கப்படுத்தப்படுவதை வங்கியாளர்களின் அமைப்பான The UK Cards Association விரும்பவில்லை. ஆனால் கேம்பிரிச் பல்கலைக் கழகத்தினர் தமது கண்டுபிடிப்புக்களை வெளியிடுவதை தடுப்பது முறையற்ற செயல் என்று வாதிடுகின்றனர். ஐசாக் நியூட்டனுக்கும் சாள்ஸ் டாவின்ஸிற்கும் அவர்களது கண்டு பிடிப்புக்களை வெளிவிடுவதில் மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...